Tuesday, March 30, 2010

மடக்கலாம்... கையில் துõக்கிச் செல்லலாம்!




வீடுகளில் பாதி இடத்தை சைக்கிள், பைக்கே ஆக்ரமித்துக் கொள்ளும். ஊர் வழிக்கு போவது என்றால், இதை பாதுகாப்பது என்பதே தர்மசங்கடமானது. இதற்கு ஒரு புது ஐடியாவைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் ஜப்பான் ஆராய்ச்சியாளர் மகோடா ஆசாவா. இவர் கண்டுபிடித்த சைக்கிளை வழக்கமான நாம் ஓட்டும் சைக்கிளைப் போலவே ஓட்டலாம். வீட்டுக்கு வந்தாச்சா... டக்குன்னு சைக்கிள் பெடல் அருகில் உள்ள லிவரை அளுத்தினால், முன் வீல் அப்படியே மடங்கி பின் சக்கரத்தோடு இணைந்துகொள்ளும். பின்னர் அதை அப்படியே துõக்கி வீட்டு பரணில் ஏற்றிக்கொள்ளலாமாம். இந்த அட்டகாசமான சைக்கிளின் விலை ரூ.21,400. ஜப்பானில் மிகப் பிரபலம் அடைந்த இந்த சைக்கிள் கூடிய விரைவில் இந்தியாவிலும் தலைகாட்டவிருக்கிறது.

வந்துடுச்சு சூப்பர் குடை!




மழை, வெயில் போன்ற சீதோஷன நிலைக்கு நாம் குடை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், திடீரென்று பலத்த காற்று அடித்தால், குடை சட்டென்று வளைந்து மேல்நோக்கி துõக்கிக்கொள்ளும். அந்தநேரத்தில் சாலையில் நடந்து செல்லும் நமக்கு கொஞ்சம் அவமானமாக இருக்கும். இதுக்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று யோசித்து இருப்போம். படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த குடை மழை, வெயில், காற்று, பனி என்ற எதுக்கும் அசைந்து கொடுக்காதாம். இந்த குடையை நீங்கள் மாட்டிக்கொண்டு இரண்டு கைகளையும் வீசி வீசி நடக்கலாம். செல்போன் பேசலாம். ஏன்.. டீ கூட குடிக்கலாம். வழியில் செல்லும் மற்ற நபர்களை பதம் பார்க்காது. இந்தக் குடை காற்றில் மேல் நோக்கி துõக்காது. மழை பெய்தால் தோள்பட்டைக்கூட நனையாது. காற்றடித்தால் உங்கள் முடி கலையாது. இப்படி பல்வேறு நல்ல விஷயங்களை கொண்ட இந்த குடையை, கையில் பிடித்து செல்லவேண்டாம். மாறாக ஹெல்மட் டைப்பில் மாட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.

பற்பசை மிஷின்:



மாசக் கடைசி ஆனாலே பல நடுத்தர வீடுகளில் பற்பசை பிரச்னை வந்துடும். பற்பசை டியூப்பில் கடைசி சொட்டு பசை வரை, முடிந்தமட்டும் பலம் கொண்டு பிசுக்கி எடுப்போம். கடைசியில் மனமில்லாமல்தான் அந்த டியூப்பை கடாசி எறிவோம். அப்போதும்கூட இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா, ரெண்டு நாளைக்கு பல் தேய்க்கலாம் என்ற நினைப்பு வரும். உங்களின் இந்த எண்ண ஓட்டம்தான், ஒரு புதுவித ஐடியாவுக்கு வித்திட்டு இருக்கிறது, ஜப்பான் ஆராய்ச்சியாளர்களுக்கு. அவர்கள் கண்டுபிடித்த ஐடியாதான் படத்தில் நீங்கள் பார்ப்பது. உங்கள் வீட்டு பற்பசையை இந்த மிஷினின் க்ளிப்பில் மாட்டிவிட்டு ஓரத்தில் இருக்கும் ஸ்க்ரூ போன்ற அமைப்பை திருக்கினாலே போதும், உங்களுக்கு தேவையான பற்பசை உங்களுக்கு வந்துவிடும். அதோடு, டியூபில் இருக்கும் கடைசி சொட்டு பசை வரை இந்த மிஷின் விட்டு வைக்காதாம். எப்பூடி...?

Sunday, March 28, 2010

என்ன செய்யப் போகிறோம்...?



கடந்த மார்ச் 15ம் தேதி... பாராளுமன்றத்தில் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் செய்யப்படவிருந்து, பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மசோதா தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இதுவும் சிவில் அணுசக்தி ஒப்பந்தந்தைப்போல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கையெழுத்தானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அது என்ன... அணுவிபத்து நஷ்டஈடு மசோதா...? அமெரிக்கா சார்பில் இந்தியாவில் அணுமின் நிலையம் ஆரம்பிப்பார்கள். ஆனால், அணுமின் நிலைய கட்டுமான குறைகளாலோ, அல்லது ஏதாவது விஷவாயு கசிவால் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கு எவ்விதமான நஷ்டஈடும் அமெரிக்கா தராது. இதற்கு சம்மதித்து இந்தியா கையெழுத்து இட வேண்டும். இதுதான் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா.
சில அமெரிக்க நிறுவனங்களின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனை காவு கொடுக்கும் மறைமுகதிட்டம்தான் இது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
2008ம் ஆண்டில் இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பலகட்ட பாராளுமன்றம் ஒத்திவைப்பு, போராட்டங்களுக்கு இடையே கையெழுத்தானது. மசோதா மட்டுமே கையெழுத்தானது. ஆனால், இது நடைமுறைக்கு வரவேண்டுமானால்,
அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் ஆக வேண்டும்.
பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அணு உலைகளை அமைத்திருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த நாடுகள் இம்மாதிரியான ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்லி எந்த ஒரு நிபந்தனையையும் இதுவரை விதிக்கவில்லை.
ஆனால், அமெரிக்கா மட்டும் நிபந்தனை விதிப்பது, இந்தியாவின் தார்மீக உரிமையில் கையை வைப்பதற்காகத்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து.
மிக அரும்பாடுபட்டு சிவில் அனுசக்தி ஒப்பந்தத்தை பல பேராட்டங்களுக்கு இடையே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிறைவேற்றியுள்ளது. அதேபோல அனுசக்தி நஷ்டஈடு மசோதாவையும் நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு தன்மானப் பிரச்னை. இதை நிறைவேற்றாவிட்டால்,
அமெரிக்கா முன் இவர்கள் அவமானப்பட்டு நிற்கவேண்டியதிருக்கும்.
இவர்கள் அவமானப்படாமல் இருப்பதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனில் கைவைப்பது எவ்வகையில் நியாயம்? போபால் விஷவாயுவால் இறந்தவர்களின் பட்டியலை மறந்துவிட்டதா நமது மத்திய அரசு?
இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் நிலை என்ன? என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
இலங்கைத் தமிழர் பிரச்னை முதல், காவிரி பிரச்னை வரை முதல்வர் அறிக்கை விடுவதும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதுவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு எதிரான இந்த மசோதா தாக்கல் விவகாரத்தில்
தம்முடைய பலத்த எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய கடமை, நம் முதல்வருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், நடக்கும் சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, நாட்டுப் பற்றைவிட காங்கிரஸ் பற்றுதான் அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. இல்லையென்றால் அவர்கள் சார்ந்த தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் குறைந்தபட்சம் இந்தச் செய்தியையாவது வெளியிட்டு இருக்கலாமே!.
ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே நாட்டுக்கு எதிரான இந்தப் பிரச்னைக்குறிய செய்தியை வெளியிட்டது. நாட்டு மக்களின் அறியாமையை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நித்யானந்தா விவகாரத்தை துவம்சம் செய்த முன்னணி வார இதழ்கள் கூட இந்தச் செய்தியை வெளியிடாதது, ஏனோ...?

Friday, March 26, 2010

குட்டிச்சுவர்!

வழக்கமா காலேஜ் முடிஞ்சு வந்தா, கலையரங்கு பக்கத்துல உள்ள குட்டிச் சுவத்துலதான்
நான், வழுக்கன், செல்வம், கோபால் நாலுபேரும் உட்கார்ந்துகிட்டு அரட்டை
அடிச்சிக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்னைக்கும் எதிர்பார்த்துப் போனேன்.
அந்தச் சுவர் காலியாய் கிடந்தது. எனக்கு ஆச்சர்யம் ஒருபுறம் இருந்தாலும், பசங்க
நம்மகிட்ட சொல்லாம போக மாட்டாங்கேளன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் அந்த
குட்டிச் சுவத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தேன். அந்த வழியா தண்ணி எடுக்கப் போன
அம்பிகா அக்காவும், கோகிலா அக்காவும், ""என்னடே... விக்னேஷ் உன் சேக்காலிங்க ஒரு
பயலுகளையும் காணோம்.''
""தெரியலைக்கா... உங்க தம்பி எங்க போயிருக்கான்? ஏதாவது வீட்ல சொன்னானா?''
என்று கேட்டேன் கோபாலின் அக்கா அம்பிகாவிடம்.
""ஏய்... சும்மா புழுகாதடே... உன்ட்ட சொல்லாததையா என்ட்ட சொல்லிட்டு
போயிடப்போறான். எல்லாப் பயலுகளும் கூட்டுக் களவானிங்கதானடே... ஏதோ நல்ல
பிள்ளையாட்டம் கேக்குற...'' என்று சொல்லிவிட்டு ஊர்க்கதையை அளந்தபடியே
செல்ல, வேண்டா வெறுப்பாய் வீட்டுக்கு வந்தேன்.
""என்ன... மகராசன் விளக்கு வைக்கறதுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்த மாதிரி தெரியுது.
கூட்டாளிங்க யாரும் இன்னிக்கு கிடைக்கலையோ'' என்று கேலி பேசினாள் அம்மா.
""அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா... செமஸ்டர் லீவு விட்டாச்சுல்ல. எல்லாப்
பயலுகளும் நாகர்கோயிலுக்கு சினிமாவுக்கு போயிருப்பானுக. நீதான் உள்ளூர்
தியேட்டருக்கே, அப்பாவதான் துணைக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்லுவ. அந்தால
தனியா நாகர்கோயில் வரைக்கும் சினிமாவுக்கு ஒத்தையில பசங்க கூட விட்டுட்டாலும்...
உலகம் அழிஞ்சுடாது'' என்று பதிலுக்குச் சொன்னேன்.
""ஏல... ராசா அந்த காவாலிப் பசங்களையெல்லாம், அவனுக அம்மாமாரு தலையில
தண்ணிய தெளிச்சு அனுப்பிட்டாங்க. நீ அப்படியால..., நீ எங்களுக்கு ஒத்தைக்கோரு
பிள்ள... எங்க ராசாடா நீ. அந்த காவாலிப்பயலுகக் கூட சேர்ந்து சுத்தறது கொஞ்சம் கூட
அப்பாவுக்குப் பிடிக்கல. இருந்தாலும், நீ சந்தோஷமா இருக்கீயேன்னுதான் நானும் விட்டு
வச்சிருக்கேன்'' என்றாள் அம்மா.
அம்மாவின் அர்ச்சனைகள் தொடர்ந்தாலும், எனக்கு இந்தப் பயலுக எங்க
போயிட்டாணுங்க... என்று கேள்விக் கணைகள் தலையைக் குடைந்தது.
மறுநாள்...

காலை விடிஞ்சதும்தான் தாமதம். வழுக்கன் வீட்டிற்கு ஓடினேன். அவன் பேரு பெருமாள்.
முன் நெற்றி ஏறியிருக்கும். அதனால்தான் அவனுக்கு வழுக்கன் என்ற பட்டபேரு. அவன்
அம்மா கூட அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.
""அம்மா... வழுக்கன் இருக்கானா...?'' என்று முற்றம் தெளித்துக்கொண்டிருந்த அவன்
அம்மாவிடம் கேட்டேன்.
""இல்லையேப்பா... காலையிலேயே உன் சேக்காலிங்க எல்லாம் வந்து, பெருமாளை
கூட்டிக்கிட்டு போயிட்டாங்களே. நீ போகலையா..?''
""எங்கம்மா...?'' என்று புரியாமல் கேட்டேன்.
""உனக்கு விஷயமே தெரியாதா... நம்ம ஊருக்கு புதுசா குங்பூ சொல்லிக்கொடுக்கற
மாஸ்டர் ஒருத்தர் வந்திருக்காரு. அவருக்கிட்ட குங்பூ கத்துக்கிடறதுக்காகத்தான் இவனுக
எல்லாம் போயிருக்காணுங்க'' என்று சொன்னதும், எனக்கு கஷ்டமாய் போனது. இந்த
விஷயத்தை எதுக்காக என்னிடம் இருந்து மறைக்கணும் என்ற கோபம். வரட்டும்...
அவனுங்ககிட்ட கேட்காம விடக்கூடாது. வழுக்கன் வீட்டு வாசலிலேயே நின்று
கொண்டிருந்தேன்.
பத்து மணி இருக்கும், வழுக்கன், கோபால், செல்வம் எல்லாரும் ஆளுக்கொரு சைக்கிளில்
வந்தார்கள். என்னைப் பார்த்ததும், ""பாருல... வீட்டு வாசல்ல சுடலை மாதிரி நிக்கான்''
என்று வழுக்கன் சொல்ல, ""லேய்... ஏதோ ஒரு காட்டத்துலதாண்டே நிக்கறான்'' என்றான்
கோபால்.
""என்னடே விக்னேஷ்... எப்போ வந்த...?''
""ஏல பேசாத. நீங்க எல்லாம் ப்ரண்ட்ஸாடே... ஒரு வார்த்தை என்ட்ட சொல்லாம நீங்க
மட்டும் குங்பூ கத்துக்கப் போயிருக்கீங்க.''
""ஆமா... சொன்னா மட்டும் அந்தால புள்ள வந்துடுவான். இப்ப வரைக்கும், உங்கம்மா
முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தான் அலையற... சும்மா பேசாதடே'' என்று கோபால்
சொல்ல, மூன்று பேரும் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான்.
நான் ஒத்தைக்கு ஒரு பையன் என்பதால், வீட்டில் விளையாடக்கூட அதிகம் வெளியே
என்னை விடமாட்டார்கள்.
""கோபால்... மாஸ்டர் எப்படிடே... நல்லா சொல்லித் தாறாரா?'' என்று கோபத்தை ஒதுக்கி
வைத்துவிட்டு ஆர்வத்துடன் கேட்டேன்.
""சும்மா சொல்லக்கூடாது விக்கி, சும்மா ஜாக்கி சான் மாதிரி இருக்கார்டே... ஒரே நேரத்துல
6 பேரை அடிக்கார். நாங்கல்லாம் மிரண்டுட்டோம். அவரு முடியப் பார்த்தேன்னா...
அவ்வளவு நீளம் இருக்குடே...'' என்று கோபால் புகழ்ந்து தள்ள, ""ஏல விக்கி...
இன்னொரு முக்கியமான விஷயம்... குங்பூ கத்துக்கிடருத்து நேரடியா சீனாவுக்கே
போயிட்டு வந்திருக்காருடே...''
""எதை வச்சு இவ்வளவு கரெக்ட்டா சொல்லுத...?'' என்று அப்பாவியாய் கேட்டேன்.
""ஜாக்கிசான் கூட நின்னு போட்டோ எடுத்திருக்காருன்னா... அது பொய்யாடே'' என்று
அகல கண்களை விரித்தான் வழுக்கன். அவர்கள் சொல்ல சொல்ல மனதுக்குள் பொறாமை
எழுந்தாலும் அடக்கிக்கொண்டு, ஆற்றாமை தாங்காமல் அவர்களிடம் இருந்து
விடைபெற்று வீட்டிற்கு வந்தேன்.
இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும்.
கோபால், வழுக்கன், செல்வம் மூன்று பேர்களின் நடை, உடை பாவனையே
மாறியிருந்தது. நீளமாய் முடி வளர்ப்பதும், டைட்டாய் டீ சர்ட் போடுவதுமாய் எப்போது
பார்த்தாலும் குங்பூ மாஸ்டரைப் பற்றி புகழ்வதுதான் அவர்களின் வேலையே
என்பதுபோல் ஆகிவிட்டது.
இதற்கிடையில் குங்பூ மாஸ்டருக்குப் பிறந்தநாளாம். ஊர் முழுக்க இவனுங்களே செலவு
செய்து போஸ்டர் எல்லாம் ஒட்டியிருந்தார்கள். இதுபோக உள்ளூர் தியேட்டரில் ஆறு
பேரை ஒருத்தராய் நின்று அடித்து துவம்சம் செய்வது போல் சிலேடு வேறு. எனக்கு
எரிச்சலாய் வந்தது. இப்போதெல்லாம் கலையரங்கு குட்டிச்சுவர் காலியாய் கிடந்தது.
அவர்களுடனான அரட்டை முற்றிலும் குறைந்துபோய் இருந்தது. இது என் அம்மாவுக்கு
மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்கு கஷ்டமாய் இருந்தது.
மூன்றாவது மாதம் ஆரம்பம். ஒரு நாள் மாலை... பால் வாங்குவதற்காக கலையரங்கம்
பக்கம் போயிருந்தேன். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மூஞ்சை
தொங்கப்போட்டுக்கொண்டு, மூன்று பேரும் குட்டிச்சுவரில் அமர்ந்திருந்தனர். எனக்கு
தாங்க முடியாத மகிழ்ச்சி.
""என்னடே... இன்னிக்கு மூணுபேரும் குங்பூ கிளாஸ்க்கு போகலையா...?'' என்று
சிரித்துக்கொண்டே கேட்டேன்.
""ஏல... இவன் தெரிஞ்சிக்கிட்டே நம்மள கிண்டல் பண்ணுதான்'' என்றான் கோபால்.
எனக்கு ஒன்றும் புரியலை. ""என்னடே சொல்லுதீங்க... என்னடே விஷயம்...'' என்று
சீரியஸானேன்.
""ஏல... உனக்கு உண்மையிலேயே விஷயம் தெரியாதா...?''
""என்னடே விஷயம்... சத்தியமாய் தெரியாது சொல்லுங்கடே'' என்றேன்.
""எங்க மாஸ்டரை ஆஸ்பத்திரியிலே வச்சிருக்காங்க...'' என்று தலையை குனிந்தபடியே
சொன்னான் பெருமாள்.
""என்னடே சொல்றீங்க...?'' எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
""நேத்தைக்கு சாயங்காலம்... கிளாஸ் முடிஞ்சி நாங்கல்லாம் வந்துட்டோம். அப்போ அந்த
வழியா நம்ம காலேஜ் பொண்ணுங்க ரெண்டுபேர் போயிருக்காங்க... எங்க மாஸ்டர்,
அந்தப் பொண்ணுங்களை ஏதோ கிண்டல் பண்ணாராம். உடனே அந்தப் பொண்ணுங்க...
வீட்லபோய் விஷயத்தைச் சொல்ல, அந்தப் பொண்ணுங்களோட தம்பி, ரெண்டு மூணு
பேர் வந்து மாஸ்டரை நையப் புடைச்சிட்டாங்களாம். இப்போ மாஸ்டர் காயத்தோட
ஆஸ்பிட்டல்ல கிடக்கார்'' என்று மூஞ்சை தொங்கப் போட்டுக்கொண்டே பதில்
சொன்னார்கள் நண்பர்கள் மூவரும்.
""ஆறுபேரை ஒத்தையில நின்னு சமாளிக்கக்கூடியவர ரெண்டு பேரு எப்படி வந்து
அடிச்சிட்டுப் போனாங்கன்னு புரியவே இல்லை...'' என்று வழுக்கன் சோகமாய்
சொல்லிக்கொண்டே முகவாயைத் தடவ எனக்கு குபுக்குன்னு சிரிப்பு வந்தது.

Thursday, March 25, 2010

பழத்தைச் சொல்லுங்க; குணத்தைச் தெரிஞ்சிக்கோங்க...

உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பழம், இந்தப் பட்டியலில் இருக்கிறதா? அப்படீன்னா, உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. படிச்சுப் பாருங்க... குணத்தை தெரிஞ்சிக்கோங்க.
1. ஆரஞ்சு 2. ஆப்பிள் 3. வாழைப்பழம். 3. இளநீர் 5. அன்னாசி 6. பப்பாளி 7. மாம்பழம் 8. கறுப்பு திராட்சை 9. சீதாப்பழம் 10. பேரிக்காய்.

1. ஆரஞ்சு:




ஒரே வார்த்தை; ஒரே சொல் என்று பேசும் தன்மையுள்ள நீங்கள், தன்னம்பிக்கையுள்ள மனிதர். மெதுவாகச் செய்தாலும், மற்றவர்களைவிட தெளிவாகவும், குறைபாடு இல்லாமலும், நேர்த்தியாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் தன்மை கொண்டவர்கள். அமைதியான குணம் கொண்ட நீங்கள், மிகவும் நம்பத்தகுந்த ஆட்களை மட்டுமே நட்பாக்கி கொள்வீர்கள். உங்களிடம் கலை ஞானமும், நகைச்சுவைத் தன்மையும் நிறையவே இருக்கும். உங்கள் எண்ணத்தையும், உங்கள் நலனையும் அக்கறை கொண்டவரைத்தான் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முரண்பட்டு நிற்பதை மட்டும் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருப்பீர்கள்.

2. ஆப்பிள்:




ஆப்பிள் பழத்தை அதிகமாக விரும்பும் நீங்கள், ஊதாரித்தனம், முன்யோசனை இல்லாத உளறுவாயனாக இருப்பீர்கள். அடிக்கடி சம்பந்தமில்லாமல் முறுக்கிக்கொள்வீர்கள். ஆனால், ஒரு குழுவின் தலைவரை தயார் செய்வதில் நீங்கள் கில்லாடி. எல்லா விஷயத்தையும் நேர்மறையாக எண்ணுவீர்கள். பெரும்பாலான நேரங்களில் தடாலடியான முடிவுகளை எடுப்பீர்கள். அளவுக்கு மிஞ்சிய பயண விரும்பியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் இருக்கும்போது மிகவும் பந்தாவாக தன்னைக் காட்டிக்கொள்வீர்கள். வாழ்க்கையில் பல விஷயங்களில் ஆர்வம் காட்டினாலும், பல உங்களுக்கு பொருந்தாமலே இருக்கிறது.

3. வாழைப்பழம்:




வாழைப்பழத்தை தேர்வு செய்துள்ள நீங்கள், மென்மையான, பாசமுள்ள, வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் மனிதர். பல நேரங்களில் தன்னம்பிக்கையற்று, கோழைத்தனமாகவே இருப்பீர்கள். எதையும் சட்டென்று நம்பிவிடுவீர்கள். உங்களுடைய இந்த சுபாவத்தை மற்ற மனிதர்கள் அடிக்கடி தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். நீங்கள்தான் இப்படி என்றால், நீங்கள் தேர்வு செய்த வாழ்க்கைத் துணையும் உங்களைப்போலவே இருப்பார்.

4. இளநீர்:




மனதில் சரியென்று பட்டதை டக்கென்று செய்யும் நீங்கள், பெரிய சிந்தனைவாதி. பிடிவாதமுள்ள நபர்தான். இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்க மாட்டீர்கள். எப்போதும் விவேகமும் முன்னெச்செரிக்கையுடனேயே ஒவ்வொரு விஷத்தையும் அணுகுவீர்கள். நல்ல அறிவும், வாழ்க்கையை ரசிக்கும் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வீர்கள்.

5. அன்னாசிப்பழம்:




அன்னாசிப்பழத்தை விரும்பும் நீங்கள், மற்றவர்கள் ஒரு விஷத்தை தீர்மானிக்கும் முன்னரே, அதை நீங்கள் செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்கள். எதிர்காலத்தில் ஒரு நல்ல பயன்தக்க ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்றால், இப்போது இருக்கும் நிலையை உடனடியாக தைரியமாக மாற்றிக்கொள்வீர்கள். ஒருவரை நண்பராக சேர்த்துக்கொள்ள அவ்வளவு யோசிக்கும் நீங்கள், ஒருவரை நண்பராக ஏற்றுக்கொண்டீர்களானால், வாழ்நாள் முழுவதும் அந்த நட்பைத் தொடர்ந்துகொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை எப்போதும் உங்கள் திறமையை மெச்சிக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.

6. பப்பாளி:


.




வாழ்க்கையில் எதைப் பார்த்தும் என்ன நடந்தாலும், பயப்படாதவர்கள் நீங்கள். உங்களுக்கு அதீத நகைச்சுவை உணர்வு உண்டு. இந்த நகைச்சுவை உணர்வு நிறைய எதிர்பாலினரை உங்களை கவரச் செய்யும். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பதில் நீங்கள்தான் வல்லவர். புதிய மக்களையும், புதிய இடங்களையும் பார்ப்பது என்றாலே உங்களுக்கு அலாதியான சுகம்தான். மொத்தத்தில் சொல்லப்போனால், நீங்கள் ஒரு படுபயங்கரமான வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த ஜாலி பேர்வழி!

7. மாம்பழம்:






மாம்பழ ராசிக்காரர்களே... சிரிப்புன்னாலும், அழுகைன்னாலும் எதிலுமே நீங்கள் எக்ஸ்ட்ரீம்தான். ஆனால், இடம், பொருள் தக்கப்படி அதை அடக்கிக்கொள்வீர்கள். புதிர் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவீர்கள். வாழ்க்கை துணையுடன் இருக்கும்போது நீங்கள் ஒரு பூனைக்குட்டிதான். அதாவது வாழ்க்கையில் எல்லோரையும் அனுசரித்து, ஒத்துப்போவீர்கள்.

8. கறுப்புத் திராட்சை!




நீங்கள் மிகவும் நாகரிகமான மற்றவர்கள் ரசிக்கத்தக்க ஒரு மனிதர். ஆனால், உங்களுக்கும் திடீரென்று கோபத்தின் உச்சிக்கு செல்வீர்கள். அதேபோல் உடனடியாக சகஜ நிலைக்கும் வந்துவிடுவீர்கள். உங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. நீங்கள் உண்மையானவர்; கூடிவாழும் எண்ணம் கொண்டவர். ஆதலால், பிரபலமாக இருப்பீர்கள். அல்லது விரைவில் பிரபலமாவீர்கள். வாழ்க்கையை நல்ல ரசித்து, ருசித்து வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். அது நீங்கள் அணியும் உடை அலங்காரங்களில் இருந்து மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். மொத்தத்தில் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வாழத் தெரிந்தவர்கள் நீங்கள்.
9. சீதாப்பழம்:

நீங்கள் பணிவுள்ள, அடக்கமான மனிதர்தான். இருந்தாலும், சில நேரங்களில் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக நடந்துகொள்வீர்கள். நீங்கள் பெரிய சிந்தனைவாதிதான். இருந்தாலும், சில நேரங்களில் செய்யும் விஷயங்கள் முட்டாள்தனமாக அமைந்துவிடும். மற்றவர்கள் ஒருவரை குறை கண்டுபிடிக்கும் முன்பாக அவரை கணிப்பதில் வல்லவர்.

10. பேரிக்காய்:

நீங்கள் பெரும் குழப்பவாதி. பல எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு, அதில் வெற்றியடையவேண்டும் என்று நினைத்து ஆர்வமுடன் உழைப்பீர்கள். ஆனால், உங்களுடைய திடபுத்தியில்லாத காரணத்தால், நீங்கள் நினைத்த எண்ணம் தொடக்க நிலையிலேயே கிடக்கும். முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால், உடனடியாக உணர்ச்சிவசப்படுவீர்கள்

Wednesday, March 17, 2010

அச்சடிக்க அட்டகாசமான மிஷின்:



பத்து பக்கத்தை எடுத்துட்டு ஜெராக்ஸ் கடைக்குப்போனா, அரைமணி நேரம் கால் கடுக்க நிற்க வேண்டியதிருக்கு. பிரிண்ட் அவுட்டை கையில் வாங்கிப் பார்த்தால், கருப்பாக இருக்கும். பவுடர்னு சொல்றாங்க லிக்விட்னு சொல்றாங்க. ஒண்ணும் புரியலை... ஆனா, இதுக்கு மட்டும் விடிவு காலம் வந்துடாதான்னு புலம்பத் தோணும். ஆனா, உண்மையிலேயே விடிவுகாலம் வந்துடுச்சு பிரிட்டிஷ் பொரியாளர்கள் கண்டுபிடித்த இந்த எக்ஸ்பிரஸ்ஸோ புக் மெஷினானது, ஒரு நிமிஷத்தில் 105 பக்கங்களை பிரிண்ட் போட்டு தந்துவிடுமாம். சிடியை மட்டும் கொடுங்க; அட்டையில் இருந்தே பிரிண்டை ஆரம்பிச்சுடும் எங்க மிஷின். அப்புறம் ஒவ்வொரு பக்கமாய் எந்தவித குழப்பமும் இல்லாமல் வரக்கூடிய பிரிண்ட், சரியாக கோர்த்து, சேர்த்தே தந்துவிடுமாம் இந்த மிஷின். இந்த மிஷின் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல உலகம் முழுவதும் புத்தக உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறார்கள் பொறியாளர்கள்.

சாப்பாடு தயாரிக்க புது மிஷின்!




குழம்புல உப்பு அதிகமா இருக்கு. பொரியல்ல எண்ணெய் ஜாஸ்தியா இருக்கு. இப்படியே போனா ஹெல்த் என்ன ஆகறது? இது எல்லார் வீட்டிலும் கேட்கக்கூடிய புலம்பல். உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் சரியா கணக்குப் பண்ணி போட்டாக்கூட எண்ணெய் கொஞ்சம் ஜாஸ்தியா ஆயுடுது. என்னதான் பண்றது புரியலை. ஸ்பீடா சமையல் பண்றதுக்கு குக்கர், மைக்ரோஓவன் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார். ஆனா, அவரு நாக்குக்கும், உடம்புக்கும் ஏத்த மாதிரி சமைக்க மட்டும் முடியல... இது இல்லத்தரிசகளின் புலம்பல். இந்த ஒட்டுமொத்த குறைகளையும் தீர்க்கறதுக்காக புது சமையல் எந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் மார்சிலோ கோலோ, அமித் ஷோரான் என்ற இரண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள். "கார்னுகோபியா 3டி புட் பிரிண்டர்' என்று பெரிடப்பட்டுள்ள இந்த உணவு தயாரிப்பு மெஷினில் நாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை அதில் உள்ள பாத்திரத்தில் போட்டுவிட்டு அதில் சேர்க்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட சமாசாரங்களை டைப் செய்தாலே போதும். தேவையான நிறம், மணம், திடம், எண்ணெய் சமாசாரங்களை எல்லாம் சரி விகிதத்தில் அதுவே கலந்து, சாப்பாட்டை தயார் செய்து தந்துவிடுகிறது. இதனால், காரம், உப்பு, புளிப்பு, அதிக எண்ணெய் போன்ற பிரச்னைகள் வராது. உணவில் உள்ள சத்தும் பாதுகாக்கப்படுகிறதாம்.

ஒரு மரம் = 20 கார்!




பூமிப்பரப்பில் கார்பன்டைஆக்ஸைடின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதனால் துருவப் பகுதியில் பனிப்பாறை உருகுதல். பருவநிலை மாற்றம். குறைந்த மழை, அதிக வெப்பம். இப்படி மிரட்டிக்கொண்டிருக்கிறது குளோபல் வார்மிங். என்னச் செய்யப்போகிறோம் என்று உலக நாடுகளே பயந்துகொண்டிருக்க, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புதிதாக செயற்கை இழையிலான மரத்தை (படம்) உருவாக்கியுள்ளார்கள். இயற்கையான மரத்தில் உள்ள குணாதிசயம் நமக்குத் தெரியும். கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றும். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மரமும் அப்படித்தான். ஆனால், அதிலும் ஒரு படி மேலப்போய் மரத்தைவிட 1000 மடங்கு விரைவாக கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்துக் கொள்ளுமாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகிக்குமாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் 20 கார்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு செயற்கை மரம் உட்கிரகித்துக் கொள்ளும். இந்த மரங்களை நாடு முழுவதும் நட்டால், புவி வெப்பமயமாதல் பிரச்னை போயே போச் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனா பாருங்க... இந்த ஒரு மரத்தை தயாரிக்க மட்டும் 13 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவாகுதாம்.

Friday, March 12, 2010

ராங் நம்பர்!





அன்றைக்கு வீக்கெண்ட். பேச்சுலரான நானும், பேமிலி மேனான ராஜேஷûம் திக்கஸ்ட் பிரண்ட்ஸ். ரெண்டு பேருமே ஒரு பத்திரிகையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம்.
எனக்கு சொந்த ஊர் மதுரைப் பக்கம் அருப்புக்கோட்டை. ராஜேஷûக்கும் மதுரைதான். அதுதான் எங்கள் நட்புக்கான அடித்தளம்னு கூட சொல்லலாம்.
ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு நாலு மணிக்கெல்லாம் நானும், ராஜேஷûம் ஆபீஸிலிருந்து வெளியே வந்தோம். “டேய் கண்ணா... அப்படியே மயிலாப்பூர் வரை ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோமா...”
“யாரு... மூர்த்திய பார்க்கறதுக்கா...”
“ஆமாண்டா...”
“அட போங்கண்ணே... உங்களுக்கு ஒரு வேலையே கிடையாது. அவன் எப்பவாவது நம்மளத் தேடி வர்றானா...? ஏண்ணே... நீ மட்டும் இப்படி இருக்க?”
“டேய்... மதுரையிலிருந்து பொழைக்க வந்திருக்கோம். நாலு பேரை தெரிஞ்சி வச்சிக்கிட்டாத்தாண்டா நம்ம பீல்டுக்கு கரெக்ட்டா இருக்கும். கோழி கெடையில கிடக்கறமாதிரி எப்பப் பார்த்தாலும், ரூமிலேயே அடக்காத்து கிடக்கக்கூடாது. இப்படி நாலு பிரண்ட்ஸ பார்த்தாதான் பழக்கம் கிடைக்கும்.”
“அடப் போங்கண்ணே... இப்படியேத்தான் சொல்லிக்கிட்டு திரியறீங்க... இன்னிக்கு வரைக்கும் ஒருத்தரையும் கண்ல காட்டமாட்டேக்கறீங்க... மூர்த்தி அவனத் தெரியும் இவனத் தெரியும்னு சொல்றானேத் தவிர ஒருத்தனையாவது இன்னிக்கு வரைக்கும் கண்ல காட்டிருப்பானா... அவன் மூஞ்சே எனக்குப் பிடிக்கலண்ணே... பிராடுக்காரனா தெரியறான்.” “சரிடா கண்ணா... இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் அவனைப் போய் பார்த்துட்டு வருவோம். கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் இல்ல...”
“டைம் பாஸாகிறதுக்கு பதினைஞ்சு ரூபா செலவழிக்கணும்மாண்ணே...” என்று தலையில் அடித்துக்கொண்டேன்.
அரைமணி நேரம் பஸ் பயணத்திற்கு பிறகு மயிலாப்பூர் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பத்து நிமிஷம் நடந்தால் மூர்த்தி ஆபீஸ். கழுகுக்கு மூக்குல வியர்க்கற மாதிரி எப்படித்தான் தெரியுமோ தெரியல... கரெக்ட்டா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் மூர்த்தி.
“யேய் வாப்பா ராஜேஷ்... வீக்கெண்ட் ஏதாவது ஸ்பெஷல் உண்டா?” என்று கண்ணடித்தான் மூர்த்தி. அவனைப் பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கொண்டு வந்தது. ஆனால், இதுவரை மூர்த்தி எனக்கு எந்தவித கெடுதலோ, துரோகமோ செய்துவிடவில்லை. இருந்தாலும், என்னவோ தெரியல. என்ன மாயமோ தெரியல... அவனப் பார்த்தாலே எனக்கு ஆகறதுல்ல.
“இல்ல மூர்த்தி சும்மாத்தான் வந்தோம். நீ வேற எங்கயும் வெளியே போறீயா...?”
“இல்லப்பா... வீட்டுக்குத்தான்...”
“டீ சாப்ட்றீங்களா...”
நான் வேண்டாம் என்று தலையாட்டுவதற்குள், ராஜேஷ் “வாங்குப்பா” என்று முந்திக்கொண்டான்.
எனக்கும் சேர்த்து மூர்த்தி மூன்று டீக்கு ஆர்டர் கொடுத்தான். மூர்த்தி எங்களுக்கு மெட்ராஸுல தெரிஞ்ச ஒரே நண்பன் நீதான். ஏதாவது பெரியாட்கள் பழக்கம் இருந்துச்சுன்னா... எங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்தி வெச்சேன்னா... பின்னாடி எங்களுக்கும் கொஞ்சம் வசதியா இருக்கும்...” என்று ராஜேஷ் லேசாக பிட்டைப் போட்டான்.
“உமா மகேஷ்வரன் தெரியுமா... பெரிய ரைட்டர். நம்ம பிரண்டுதான். ஏற்கனவே எங்க பத்திரிகையில சப் எடிட்டரா இருந்தவர்தான். போய் பார்த்துட்டு வர்றீங்களா...? நல்ல பேசுவாரப்பா... போயிட்டு வாங்க” என்று அவர் செல் நம்பரை எங்களுக்கு தந்ததோடு, அவருக்கும் எங்கள் முன்னாடியே போன் செய்து நாங்க வரப்போறதா சொன்னார்.
எனக்கு அப்போதான் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டுச்சு. உமா மகேஷ்வரன் பெரிய எழுத்தாளர். அவருடைய கதைகள் நிறைய படிச்சிருக்கேன். அவர் மூர்த்தியோட பிரண்டா... நம்பவே முடியலை. இருந்தாலும், அவன் அறிமுகப்படுத்தறேன் என்று சொன்னதும், என்னையும் அறியாமல் அவனிடம் நன்றியைச் சொன்னேன்.
“ஆமா மூர்த்தி அவரு வீடு எங்க இருக்கு...?”
“வடபழனி பக்கத்துலதான்” என்று முழு முகவரியையும் தந்தான். மூர்த்தியிடம் விடைபெற்றுக்கொண்டு, பஸ்சில் ஏறினோம். அப்பவே மணி ஆறை தொட்டிருந்தது. டிராப்பிக்கில் பஸ் மிதந்து கடைசியில் வடபழனியில் போய் சேருவதற்கு எட்டு ஆகிவிட்டது. பஸ்சில் இறங்கியதும் உமாவிற்கு போன் செய்தான் ராஜேஷ்.
“சார்... நாங்க இப்போ வடபழனி பஸ்ஸ்டாண்டில் நிக்கறோம்.”
“அப்படியே நடந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ஸ்ட்ரைட்டா வந்திங்கேண்ணா ஒரு முட்டு சந்து வரும். அங்க வந்துருங்க...” என்று எதிர்முனையில் பேசிய எழுத்தாளர் போனை துண்டித்தார்.
நாங்களும் ஒவ்வொருவரிடம் விசாரித்து, வெக்கு வெக்குன்னு நடந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
ரெண்டு பேருக்கும் வியர்த்துக் கொட்டியிருந்தது. எனக்கோ உமாவை பார்ப்பதற்கான ஆர்வம் இன்னும் அதிகமாய் இருந்தது. அவர் எழுதிய நுõல்களை மெல்லமாய் ஞாபகப்படுத்திப்பார்த்தேன். இரண்டு மூன்று நாவல்களின் பெயர்கள்தான் அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தது. ஐயய்யோ இப்படி மறந்துபோச்சே... என்று அந்த நேரத்தில் நொந்துகொண்டதோடு என்னவெல்லாம் பேசவேண்டும் என்று ராஜேஷûக்கு தெரியாமல் குறிப்பெடுத்துக்கொண்டேன்.
ராஜேஷ் ஆர்வமாய் போனை எடுத்து ரீடயல் அழுத்தினார். முகத்தில் லேசான கலவரம்...
எனக்கு ஒன்றும் புரியலை. “என்னண்ணே ஆச்சு...” என்றேன் லேசான பதட்டத்துடன்.
“டேய் கண்ணா... போன் சுவிட்ச் ஆப்னு வருதுடா...”
“அண்ணே... ரெண்டு மூணு தடவை உடாம ட்ரை பண்ணுங்கண்ணே கிடைக்கும். நெட்வொர்க் கிடைக்கலன்னாலும் இப்படித்தான் இருக்கும்” நான் ஆறுதல் சொன்னேன்.
ராஜேஷ் விடாமல் ரீ டயல் செய்துப் பார்த்தார்... “இல்லடா கண்ணா... சுவிட்ச் ஆப்தான் பண்ணி வச்சிருக்கான்” என்று எழுத்தாளர் மீதான மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.
அந்தப் பகுதியில் அவரைப் பற்றி விசாரிச்சுப் பார்த்தோம்... யாருக்கும் அவரைப் பற்றி தெரியலை.
அரைமணி நேரம் அந்த இடத்திலேயே வெயிட் பண்ணி பார்த்துவிட்டு, என்னுடைய செல்போனில் இருந்து தொடர்பு கொண்டேன். அதிசயம்... அவர்தான் போனை எடுத்தார்.
“சார்... நாங்க மூர்த்தியோட பிரண்ட்ஸ். நீங்க சொன்ன எடத்துலதான் நிற்கிறோம். எப்படி சார் வரணும்”னு சொல்லி முடிப்பதற்குள்ளேயே...
“யோவ் மண்டையில அறிவில்ல... நேரங்கெட்ட நேரத்துலயா வீட்டுக்கு வர்றது...”
“சார்... உங்ககிட்ட கேட்டுட்டுத்தானே...” என்று இழுத்தேன்.
“படிச்சவன்தானே... வீக்கெண்ட் டைம்ல அர்த்த ராத்திரியிலே வந்தா தொந்தரவு கொடுப்பாங்க...?” என்று டக்கென்று போனை கட் செய்தார்.
எனக்கு இப்போ முன்பை விட வியர்த்துக் கொட்டியது. மணியைப் பார்த்தேன் மணி சரியாக எட்டரை ஆகியிருந்தது. இதுவா இவனுக்கு அர்த்த ராத்திரி... கோபம் கண்களில் சிவப்பு நிறத்தில் தெரிந்ததை, ராஜேஷ் புரிந்து கொண்டார்.
“என்னடா கண்ணா...”
“வாண்ணே போலாம்... நல்லா ஆளாப் பார்த்து அனுப்பி வச்சான் மூர்த்தி.”
“ஏண்ணே... இவனல்லாம் ஒரு படைப்பாளியாண்ணே... வயசு ஆக ஆக பக்குவப்படணும். கட்டிப்போட்ட நாய் மாதிரி குரைக்கறான். நாய்ப்பய...” என்னால் ஆத்திரத்தை அடக்க முடியல.
“என்னடா ஆச்சு...” என்று மெதுவாய் கேட்டார் ராஜேஷ்.
“பின்ன எண்ணண்ணே... அவன்தான நம்மள வரச்சொன்னான். மயிலாப்பூர்ல இருந்து வடபழனிக்கு பஸ்சுல வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு அவனுக்கு தெரியாது. அப்பவே வரவேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்னு சொன்னா... நம்ம வந்துருப்பமாண்ணே... தீவட்டிப் பய... இவன விடக்கூடாதுண்ணே...”
“சரி... வுடுடா. வீக்கெண்ட்ல தண்ணிய போட்டு மப்புல கெடப்பான். இந்த நேரத்துல வர்றாங்களேன்னு எரிச்சல்ல பேசியிருக்கான் விடுடா...”
ராஜேஷ் அமைதிப்படுத்தினாலும் என்னால் அடக்க முடியலை. இவனை விடக்கூடாது. பெரிய எழுத்தாளன்னா... அவன் திமிரை அவனோட வச்சிக்கணும். என்ன பண்ணப்போறேன் பாரு... என்று மனதுக்குள் உக்கிரம் இன்னும் அதிகரித்தது.
“சரிடா வா போலாம்...”
“இல்லண்ணே... நீ போ... மனசு சரியில்ல நான் மெதுவா வர்றேன்.” என்று ராஜேஷை அனுப்பிவிட்டு வேகவேகமாக அருகில் இருந்த கட்டண கழிப்பிடத்திற்கு சென்றேன். உமா என்ற அவனின் பாதிப் பெயரை எழுதி ‘காண்டக்ட் மீ ’என்று அவனின் செல் நம்பரை எழுதிவிட்டு வந்தேன். அந்த கட்டண கழிப்பிடத்திற்கு நேர் எதிர்புறம் டாஸ்மாக் வேறு இருந்தது. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அவனை ஏதோ பழிதீர்த்த சந்தோஷத்தில் ரூமிற்கு வந்தேன்.
மறுவாரம்... அதே வீக்கெண்ட். அதே மயிலாப்பூர். மூர்த்தி வழக்கம்போல ராஜேஷிற்காக காத்திருக்க, ராஜேஷ் எழுத்தாளர் செய்த லீலைகள் எல்லாவற்றையும் சொன்னார். மூர்த்தி முகத்திலும் லேசான கலவரம். அவரை திட்டுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள... ‘இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்ற தகவல் வந்தது. மூர்த்தியும், ராஜேஷûம் திருதிருவென்று முழிக்க. எனக்கு எல்லா அர்த்தமும் புரிந்து மனதிற்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

முதுகு வலி குறையணுமா...?



‘பேக் பெய்ன்’ என்ற வார்த்தை இப்போது எல்லாருமே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னங்க செய்ய... நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்னாடி ஆடாம, அசையாம உட்கார்ந்திருந்தா முதுகு வலி வருமா? வராதாங்க...?
வலி தாங்க முடியலை. மருத்தவரிடம் போனேன். மருந்து கொடுத்தார். ஆனா, அந்த சமயம் நல்லா ரிலீப் கிடைக்கிறது. அப்புறம் மறுபடியும் நரக வேதனைதான்.
இந்த முதுகு வலி பிரச்னையை முழுசுமா குறைக்க முடியாவிட்டாலும், ஓரளவிற்கு சரிசெய்யணுமா...? அப்ப... நீங்க கொஞ்சம் வாயை கட்டியாகணும்!
உங்களுக்கு டீ, காபி, சோடா போன்ற ஐட்டங்கள் விரும்பி குடிப்பீங்களா... அப்படீன்னா உடனடியா நிப்பாடிடுங்க. கேழ்வரகை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடவே கூடாது. இவ்வளவையும் நீங்க தவிர்த்தால், உங்களுக்கு முதுகு வலியிலிருந்து விடுதலை என்று பலபேரிடம் செய்த சோதனையின் மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க ஆராய்ச்சியாளர்கள்.

பழம் சாப்பிட்டா கல் வராது!



எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம்தாங்க. கிட்னி கல்லடைப்பு என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. ஆனால், கல்லடைப்பு வராம தடுக்கணும்னா, தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுங்கன்னு சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் கிட்னியில் கல் வருவதை தடுக்கிறதாம்.
ஒருவாழைப்பழத்தில் 400 மி.கிராம் பொட்டாசியம், 14.8 கிராம் சர்க்கரை, புரோட்டீன் ஒரு கிராம், வைட்டமின் சி மற்றும் பி6, நார்சத்து 4 கிராமும் இருக்கிறது. ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா நம்ம உடம்புக்கு 110 கலோரி சக்தி கிடைக்கிறது.
கிட்னியில் ஏற்படும் கல்லைத் தவிர நரம்பு தளர்ச்சி, இதயம், எலும்பு, ரத்த சுழற்சி என்று எல்லாவற்றிற்கும் வாழைப்பழம் ஒரு அருமருந்தாம்.

நோய் தீர்க்கும் தண்ணீர்!



காலைல முழிச்சவுடனே தண்ணீர் குடிச்சா ரொம்ப நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, எப்படி எப்போ குடிக்கணும்னு நிறைய பேருக்கு குழப்பம்.
தண்ணீரை மட்டும் சரியா தினமும் குடிச்சிட்டு வந்தோம்னா... 30 நாளைக்குள் ரத்த அழுத்தம், 10 நாளில் வாயுத் தொல்லை, 30 நாளில் சர்க்கரை நோய், 180 நாளில் கேன்ஸர், 90 நாளில் காச நோய் என்று எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
படி 1: காலையில் எழுந்தவுடன் பல் துளக்குவதற்கு முன் 160 மில்லி பிடிக்கும் 4 கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்.
படி 2: பல் துளக்கிய உடனே சாப்பிடவோ 45 நிமிடத்துக்குள் தண்ணீரோ அருந்தக் கூடாது.
படி 3: 45 நிமிடம் கழித்து காலை உணவை முடித்துக் கொள்ளலாம்.
படி 4: காலை சிற்றுண்டியை முடித்த 15 நிமிடத்துக்குள் வேறு ஏதும் உணவு சாப்பிடக்கூடாது.

எடுத்த எடுப்பிலேயே 4 கிளாஸ் தண்ணீர் குடிக்க முடியாதவங்க... ஒரு கிளாஸ், அப்புறம் ரெண்டு கிளாஸ்னு குடிச்சுப் பழகுங்க.. அப்புறம் தானாவே பழகிடும். உடம்புலேயும் எந்த நோயும் வராது.

பொரிச்சதும் நல்லதுதான்!




உடலை மிகவும் ஆரோக்கியமாய் வைத்திருப்பவர்களுக்கு எண்ணெய் பலகாரங்களை பார்த்தாலே ஒரு வித அலர்ஜி தொற்றிக்கொள்ளும்தான். ஏனென்றால், அந்த எண்ணெயில் உள்ள கொழுப்புதான் உடல் பலஹீனமாதவதற்கு காரணம் என்பது நம்மில் பலரின் எண்ணமும் கூட.
கொழுப்பில் மட்டுமா உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பு இருக்கிறது, பால் பொருட்களில் ஆரம்பித்து இறைச்சி வரை எல்லாவற்றிலும் கொழுப்பு இருக்கத்தானே செய்கிறது. அப்படியென்றால், இதுவும் கூட உடம்பிற்கு தீங்கிழைக்கத்தானே செய்யும். ஆனால், சில எண்ணெய்களில் பொரிக்கப்படும் உணவானது இதய பாதிப்பு ஏற்படுவதைக்கூட தடுக்கிறதாம்.
தொடர்ந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் பொருள் சாப்பிடுவது கண்டிப்பாக உடலுக்கு தீங்குதான். ஆனால், எப்போதாவது எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது சொல்லப்போனால் நன்மைதான். ஏனென்றால், சில நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து அதிகஅளவில் நார்ச்சத்து கிடைக்கிறதாம். அப்படியென்றால் இது உடலுக்கு நல்லதுதானே.
உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு... வகையறாக்கள் எண்ணெயில் 360லிருந்து 375 டிகிரி வரை வெப்பப்படுத்தி, பின் பொரித்தெடுக்கும்போது, குறைவாகவே எண்ணெயை பண்டங்கள் உறிஞ்சுகிறதாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது ஆராய்ச்சி.
அதனால, பொரிச்ச உணவும் உடம்புக்கு நல்லதுதான்... ஆனா, நீங்க தேர்ந்தெடுக்கும் எண்ணெய் தரமான எண்ணெயாக இருக்கணும். அதுதான் முக்கியம்!

பயிற்சியோடு மனசும் வேணும்!



அந்தப் பொண்ணு பேரு மேகலை. கொஞ்ச நாளா அளவுக்கு அதிகமா வெயிட் போட்டுடுச்சு. கவலைப்பட்டுபோய் ஒரு டயட்டீசியனை போய் பார்த்திருக்கிறார். அவர் கொடுத்த அறிவுரைப்படி காலையில் எழுந்து நடைப்பயிற்சி. அப்புறம் கொஞ்சம் டீ, ரெண்டு பிஸ்கட். இரண்டு மணி நேரம் கழித்து காலை உணவாக ஒரு கிண்ணம் அளவுக்கு உப்புமா அல்லது பொங்கல். அப்புறம் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி. அப்புறம் கொஞ்சம் ப்ரூட் சாலட். பின் அரைமணி நேரம் கழித்து கொஞ்சம் ஊற வைத்த சுண்டல். அடுத்த இரண்டரை மணி நேரம் கழித்து, இதே மாதிரி ஒரு கிண்ணம் அளவிற்கு பழ வகைகள். இரவு உணவு ரெண்டு சப்பாத்தி, சூப், கொஞ்சம் சாலட்.
டயட்டீசியன் சொன்ன அத்தனையும் செய்து பார்த்தார் மேகலை. ஆனா, ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியம். ஏனென்றால், முன்பிருந்ததைவிட இப்போது இன்னும் கொஞ்சம் புஷ்டியானாள் மேகலை. இது ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்.
மேகலை செய்த உடற்பயிற்சி எல்லாமே சரிதான். ஆனால், அவர் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும் செய்தாரா... அப்படி செய்திருந்தால் மேகலையின் உடல் கண்டிப்பாக மெலிந்திருக்கும். ஆனால், வேகம் இருந்த அளவுக்கு ஆர்வம் இல்லை அதன் விளைவுதான் மேகலா குண்டானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமாய் செய்தால்தானே அதற்குண்டான பலன் கிடைக்கும். இது உடற்பயிற்சிக்கும் பொருந்தும் என்பதுதான் ஆராய்ச்சியாளரின் பதில்.

சவ் மிட்டாய்!

அப்போ வயசு 13. நான் எட்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். போத்திதான் என்னுடைய நெருங்கிய நண்பன். போத்தியை பொருத்தவரை நான்தான் அவனுக்கு குரு, ஆசான் எல்லாம்.
ஏன்னா, நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவான். சில நேரங்களில் பொய்க்கதைக்கூட சொல்லியிருக்கேன். அதைக்கூட அப்படியே நம்பிடுவான். எங்க ஸ்கூல்ல, வாரத்துல ரெண்டு நாள் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வரலாம். நானும் போத்தியும் எப்போதும் போட்ட டிரஸ்சையேதான் மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு வருவோம். ஆனா, எங்க கிளாஸுல மாரியப்பன்னு ஒரு பையன். ‘செட்டியார் வீட்டு பையன்’னுதான் அவனைச் சொல்வாங்க. அவங்க அப்பா எங்க ஸ்கூல்ல சவ்மிட்டாய் கடை வைத்திருந்தார்.
எனக்கும் சரி; போத்திக்கும் சரி செட்டியார் மீது எப்போதும் ஒரு கண்ணு. அதுக்கும் ஒரு கதை உண்டு. எனக்கும், போத்திக்கும் பாக்கெட் மணியா வீட்ல நாலணாதான் தருவாங்க. ஆனா, இந்த மாரியப்பப் பய எப்போ பார்த்தாலும், டவுசருக்குள்ள கையப் போட்டுக்கிட்டு சில்லரை பைசாக்களை கிலுக்கிக்கிட்டே கிடப்பான்.
சவ் மிட்டாய் வித்தா நாமலும் இப்படி பை நிறைய காசு வச்சிக்கலாம்னு எனக்கும், போத்திக்கும் நினைப்பு. ஒரு கட்டத்துல செட்டியாரை மாதிரி நாமும் ஏன் நிறைய சம்பாதிக்கக்கூடாது என்ற ஆசை. யோசிச்சேன். போத்தியை கூப்பிட்டேன். ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு சிதிலமடைஞ்ச ஒரு ரைஸ்மில் உண்டு. அதுதான் எங்க ரெண்டு பேருக்கும் மீட்டிங் ஹால். அங்க போய் உட்கார்ந்தோம்.
“ஏல... போத்தி, மாரிய பாத்தியால... கை நிறைய பைசா வச்சிருக்கான். இதெல்லாம் எப்படி வந்துச்சு... எல்லாம் சவ் மிட்டாய்ல போத்தி சவ்மிட்டாய்.”
“ஆமால முருகா... கரெக்ட்டா சொன்ன. பொறந்தா, மாரிய மாதிரி பொறந்திருக்கணும். எப்போ பார்த்தாலும் கையில பைசா விளையாடுதுல்லா...”
“நம்ம ரெண்டு பேருகிட்டேயும் மாரி மாதிரி காசு வரணும்னா... அதுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்” என்றதும், “என்னல திட்டம்... சொல்லுடே!” என்று தோளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் போத்தி.
“நாமலும் சவ் மிட்டாய் செஞ்சி வித்தோம்னா... மாரி மாதிரி நம்ம சேப்புலயும் பைசா நிறைய இருக்கும்.”
“அப்படியாடே... உண்மையாவா சொல்லுத...?” என்று வழக்கம்போல வாயைப் பிழந்தான் போத்தி. “ஆனா... சவ் மிட்டாய் செய்றதப் பத்திதான் நமக்கு ஒண்ணும் தெரியாத...” என்று உதட்டைச் சுழித்தான் போத்தி.
“ஏல... அது என்ன பெரிய இதுவா? வீட்ல இருக்கற மண்டவெல்லத்தை தண்ணீரை ஊத்தி காய்ச்சுனா, அது பாகாய்டும். அதுல கொஞ்சம் மாவு போட்டு பிசைஞ்சு காய வச்சுட்டா அதுதான் சவ் மிட்டாய்” என்று நான் சொல்லிய பக்குவத்தை அப்படியே நம்பிட்டான் போத்தி.
“ஏல... ஆமா... நாம பாட்டுக்கு, படிக்காம சவ் மிட்டாய் செய்யுறேன்னு வீட்ல போய் சொன்னோம்னா, எங்க ஐயா என்னை அடிச்சே கொன்னுடுவார்...” என்று அப்பாவியாய் பார்த்தான் போத்தி.
“வீட்ல ஆள் இருக்கற நேரத்துலயா பண்ணப் போறோம். கள்ளிகுளத்துல லட்சுமியக்கா கல்யாணம் அடுத்த வாரம் வருது. அதுக்கு உன் வீட்ல, என் வீட்ல எல்லாரும் போயிடுவாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அன்னிக்கு வச்சுக்குவோம்ல நம்ம கச்சேரியை. ஏல போத்தி... எங்களவிட, நீங்க பணக்காரங்க! அதனால நீ நிறைய சவ் மிட்டாய் செய்யலாம். நான்தான் இருக்கற மண்டவெல்லத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறேன்னே தெரியலை!”
“ஏல... இதுக்குப் போயா கவலைப்படுவாங்க... நான் போடுற சவ் மிட்டாயை விற்று, வரக்கூடிய காசை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டுக்குவோம்!” என்று ஐடியாவைச் சொன்னான் போத்தி. அவன் சொன்ன டீலிங்கிற்கு நானும் ஒத்துக்கிட்டேன்.
லட்சுமியக்கா திருமண நாள் வந்தது.
என்னையும், போத்தியையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, என் வீட்டிலும், போத்தி வீட்டிலும் கல்யாண வீட்டிற்கு போய்விட்டார்கள்.
நாங்கள் ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போவது போல் போய்விட்டு, அந்த மீட்டிங் ஹால்ல கொஞ்ச நேரம் பொழுதை போக்கிவிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.
மனசுக்குள்ள, போத்திக்கு போட்டியா சவ் மிட்டாய் செய்யணும்னு எனக்கு ஆசை வந்துடுச்சு. இதை அவன்ட்ட நான் சொல்லலை.
ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தோம்.
“ஏல... முருகா என் வீட்டுக்கு வா; நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சவ் மிட்டாய் செய்யலாம்”.
“இல்ல போத்தி... நானும் சவ் மிட்டாய் செய்யலாம்னு முடிவு செஞ்சிட்டேன்”னு சொன்னதும் போத்தியின் முகம் மாறிப்போச்சு.
“என்னடே... போட்டிக் கடையா போடப்போற?”ன்னு டக்குன்னு கோவப்பட்டுட்டான்.
“இல்லல... போத்தி! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா... நிறைய சவ் மிட்டாய் கிடைக்கும். நிறைய காசும் கிடைக்கும்...” என்று நான் சொன்னத, ஏதோ வேண்டா வெறுப்பாய் கேட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
நானும் என் வீட்டிற்குள் வந்து, ஒவ்வொரு டப்பாவாய் தேடி மண்டவெல்லத்தை எடுத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு செம்பு தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைத்தேன். மண்டவெல்லம் இளக ஆரம்பித்தது. எனக்கு பயங்கர சந்தோஷம். பாட்டிலில் இருந்த தேங்காய் எண்ணெயை தரையில் ஊற்றி மெழுகினேன். அதில்தான் மண்டவெல்ல பாகையும், மாவையும் கலந்து ஊற்ற ஏற்பாடு.
மனதிற்குள் சந்தோஷம். ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. மண்டவெல்லப்பாகு, கொஞ்ச கொஞ்சமாய் இறுக ஆரம்பித்து, ஒருகட்டத்தில் சட்டியில் பிடித்து பழுப்பு நிறத்தில் புகை எழ ஆரம்பித்தது. எனக்கு நெஞ்செல்லாம் படபடக்க ஆரம்பித்தது.
அதற்குள் கல்யாண வீட்டிற்கு சென்றிருந்த என் அம்மா, வீட்டிற்குள் வந்துவிட்டாள். “ஏல... அடுப்புல என்னல பண்ற? வீடு முழுசும் புகையா கீடக்கு...!” என்று சட்டியைப் பார்த்தவள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.
“ஏல... பள்ளிக்கூடத்துக்கு போன்னு சொன்னா... இங்க உக்காந்துகிட்டு வீட்டையா கொளுத்தப் பாக்கற...”னு சுள்ளி விறகால முட்டுக்குக் கீழ அம்மா அடி உறிச்சுட்டா. அதற்குள்... வெளியே திபுதிபுவென்று ஓடுகிற சத்தம். கதவை உடைக்கிற சத்தமும். அம்மாவும் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓட... நானும் வெளியே எட்டிப் பார்த்தேன். எல்லா கூட்டமும் போத்தி வீட்டு வாசலில் நின்று கொண்டு, கத்திக்கொண்டிருந்தனர். எனக்கும், என்னாச்சு என்று பயம் கலந்த ஆர்வம். கூட்டத்தோடு கூட்டமாய் ஓரமாய் நின்றேன்.
போத்தி வீட்டு ஓட்டுப்பிரை வழியாக பழுப்பு நிறத்தில் புகையாய் வந்துகொண்டிருந்தது. எல்லார் முகத்திலும் ஒரு கலவரம். வீட்டுக் கதவைத் தட்டிப்பார்க்கிறார்கள். தள்ளிப் பார்க்கிறார்கள் கதவு திறந்தபாடில்லை. “ஏல போத்தி... கதவைத் திறல...” என்று அவன் அப்பா கெஞ்சலோடு கத்திப் பார்த்தார். ஆனா, போத்தி கதவைத் திறக்கவேயில்லை.
அவன் அப்பா திடீரென்று என்ன யோசித்தாரோ... வீட்டு கொல்லைப்புறம் பக்கம் ஓடினார். கூட்டமும் அவர் பின்னால் ஓடியது. நானும் கூட்டத்தில் ஐக்கியமாயிருந்தேன்.
நல்ல வேளையாக வீட்டு பின் கதவு திறந்துதான் கிடந்தது. எல்லாரும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீடே புகைமண்டலமாய் இருந்தது. அந்த புகைக்குள் போத்தி கண்ணை கசக்கிக்கொண்டே இன்னும் தீ மூட்டிக்கொண்டிருந்தான். அவன் நிறைய சவ்மிட்டாய் செய்ய பிளான் போட்டிருப்பான் போல. அடுப்புல பெரிய அண்டா இருந்தது. எப்படித்தான் அந்த அண்டாவைத் துõக்கி அடுப்புல வச்சான்னு தெரியல. நான் பிரமிச்சுட்டுப் போயிட்டேன். எல்லாமே சவ் மிட்டாய் தந்த வெறியாத்தான் இருக்கும். நானே கற்பனை செய்துகொண்டேன்.
அவங்க அம்மா... தலையில் அடித்துக்கொண்டு, போத்தியின் அப்பா அடிக்காதவாறு அவனை அணைத்துக்கொண்டாள். “ஏட்டி ஒழுங்கு மரியாதையா அவன வுடு. இல்லாட்டி உன்னையும் கொன்னுபோட்ருவேன்” என்று போத்தி அப்பா விளக்குமாறை துõக்க, பயந்தபடி போத்தியை விட்டு விலகினாள் அவன் அம்மா.
அவ்வளவுதான்... ஒரு அஞ்சு நிமிஷம் மழை பெஞ்சமாதிரி அடி விழுந்தது. போத்தி ‘அய்யோ அப்பா’ என்று கத்தினான். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம்... “ஏ... பிள்ளைய விடு; இப்படிப் போட்டு அடிக்கற... அவன் ஏதோ விளையாட்டுப்போக்கா ஏதோ பண்ணியிருக்கான். அதுக்குப்போட்டு இப்படியா அடிப்பாங்க...” என்று ஊர் சனம் சொல்ல, “எல்லாரும் வாய மூடிக்கிட்டு வெளியப் போங்க...” என்று கத்திக்கொண்டே மறுபடியும் அடிக்க ஆரம்பித்தார். போத்தி அழுது கூப்பாடு போட்டவாறே என்னைப் பார்த்தான். நானும் அவனை சோகமாய் பார்த்தேன். நல்லவேளை சவ்மிட்டாய்க்கு நான்தான் திட்டம் போட்டுக்கொடுத்தேன்னு ஒரு வார்த்தைக் கூட அவன் சொல்லலை.
ஒரு வழியாய் அடித்து முடித்து ஓய்ந்து போனார், போத்தியின் அப்பா.
கருக்கல் நேரம்... நான் வெளியே தனியாய் நின்று பம்பரம் விட்டுக்கொண்டிருந்தேன். “ஏல... முருகா”ன்னு பக்கத்தில் வந்து நின்றான் போத்தி!
அவனைப் பார்க்க பாவமாத்தான் இருந்தது. “முருகா... பாத்தியா... எங்க ஐயா அடிச்ச அடியில முதுகு, கை கால் எல்லாம் வீங்கி போச்சு.” என்று கை, கால் எல்லாம் காட்டினான். உண்மையாகவே வீங்கிப்போய்தான் இருந்தது.
“ஏம்ல... நம்ம செஞ்சது அவ்வளவு தப்பா? சவ் மிட்டாய் செஞ்சி துட்டு சம்பாதிச்சி நாம தனியாவா வக்கப்போறோம். வீட்லதானே கொடுக்கப்போறோம். அது தெரியாம இவங்க ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னே தெரியலை. ஆனா, ஒன்னு முருகா... நாம செஞ்சது எல்லாம் கரெக்ட்தாமுல. ஆனா, என்ன தப்பு செஞ்சோம்னுதான் தெரியல... பாகு சட்டியில புடிக்க ஆரம்பிச்சுடுச்சு; இதை மட்டும் சரிசெஞ்சிட்டோம்னு வையேன். சவ் மிட்டாய் செஞ்சே நாம பணக்காரனா ஆயிடாலாம்ல...” என்று அம்பானி மாதிரி எனக்கு யோசனை சொல்ல ஆரம்பித்தான் போத்தி.

Thursday, March 4, 2010

வேட்டைக்காரன்!





‘ஏ... மாயாண்டி சுடலைய்ய்ய்யாண்டி...’ என்று கணியான் கூத்து காது சவ்வை பிய்க்காத குறையாய் கத்திக்கொண்டிருந்தது.
“மாப்ள... 8 வருஷம் கழிச்சு நம்ம சுடலைக்கு கொடை வச்சிருக்கோம். சும்மா கிளப்பிரணும்டா...”
“யோவ் மச்சான்... இப்படித்தான் அப்பவும் சொன்னோம்... ஆனா, பாத்தில்ல... என்னாச்சுன்னு பிளான் பண்ணி கொடை நடக்காம பண்ணிட்டான் அந்த பாலு மாமா.”
“ஆமா மாப்ள... தண்ணிய போட்டுக்கிட்டு அவன் சாமியாடி, சேர்ந்தமரம் மயினி கைய புடிச்சு இழுக்கலைன்னா இந்த தகராறு வந்திருக்காது. ஆனா, பாவிப்பய... அப்படியே எஸ்ஸாகி ஓடிட்டானடே... பயபுள்ள, இவன் ஓடினது பத்தாதுன்னு கூட்டத்துல நின்னுக்கிட்டு கிடந்த மிச்ச சொச்ச பேரையல்லாம் உசுப்பேத்திவிட்டு, ஊரே சண்டக்காடாயில்ல கிடந்துச்சு. எட்டு வருஷம் கொடை நடக்காம பண்ணிட்டானே” என்று கவலையில் மூஞ்சி தொங்கிப்போனது.
“ஆனா, பாரு மாப்ள... இந்த வருஷமும் அவன் ஏதாவது கொசர் பண்றதுக்காவே திமிறிக்கிட்டு அலைவான். அவன விட்றக்கூடாதுடே... என்று மாணிக்கம் சொல்ல, ஆமா மச்சான்... இந்தத் தடவை அப்படி ஏதும் வராத அளவுக்கு ஒரு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்.”
“என்னடே ஏற்பாடு...”
“நீங்களே பாருங்க மச்சான்... சாமக்கொடை முடியறதுக்கு முன்னாடி அது என்னன்னு நீங்களே தெரிஞ்சுப்பீங்க” என்று பீடிகையோடு வேட்டியை உசத்தி மடிச்சிக்கெட்டிட்டு, “ஏல மகராசன்... சாமக்கொடைக்கு சுடலைக்கு கொடுக்க எத்தனை சேவல்டே வந்திருக்கு...!”
“பத்து வந்திருக்குண்ணே... சேர்மாதேவிலயிருந்து மாமா வந்துட்டாங்கன்னா இன்னும் மூணு நாலு கூடும். ஏய் மகராசா... சேவல் ஏதும் திருட்டுப்போயிராமடே... நல்லா பாத்துக்கோ, பக்கத்துலயே உக்காந்துக்கோடே. நைசா லவட்டிக்கிட்டுப் போயிடுவானுக. ஏய்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். நம்ம பாலு மாமா பொண்டாட்டி மட்டும் இந்தப் பக்கம் வராம பார்த்துக்கோ, நாட்டு சேவல், கோயில் சேவல்னு வித்தியாசம்லாம் பாக்க மாட்டா, திருடிட்டு போய் வித்துருவாடே... ஜாக்கிரதை!”
“ஏண்ண... பாலு மாமாவலதான் எட்டு வருஷத்துக்குப் முன்னாடி பிரச்னை வந்துச்சு. பின்ன எதுக்குண்ண மறுபடியும் அவனை கூப்ட்றீங்க... பேசாம அவன ஒதுக்கி வச்சிறவேண்டியதுதானே...”
“சண்ட போட்டாலும், சொந்தம்லாடே... விட்ற முடியாதுல்லா...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலு மனைவி தங்கம் தலைவிரி கோலமாய் நாக்கைத் துருத்திக்கொண்டு ஓடிவந்தாள்.
அவள் ஓடிவருவதைப் பார்த்ததும், தப்பு அடித்துக்கொண்டிருந்த கணியான் குழுவினர் தாளம் போடுவதை இன்னும் சுதி ஏத்தினர்.
“ம்ம்ம்... எட்டு வருஷம் கொட நடக்காம போச்சே; எனக்கு என்ன குறைன்னு யாராவது கேட்டீங்களா...” என்று நாக்கை துருத்திக்கொண்டு, மொத்த திருநீரையும் முகத்திலும், வாயிலும் போட்டபடி பத்ரகாளியாய் நின்றுகொண்டிருந்தாள் பாலு மனைவி தங்கம்.
“ஏய்... மகராசன் பாத்தில்ல... ஆரம்பிச்சுட்டா... இப்படியே ஆடி ஆடியே கோழி பக்கம் வந்து ஆட்டைய போட்டுருவா, ஜாக்ரதடே... நான் போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வர்றேன்”னு பம்மி பம்மி தங்கத்தை நெருங்கினான் கோபால்.
கோபால் பக்கத்தில் வருவதைப் பார்த்ததும், ஏய்... இவன் குசும்பு புடிச்சவன்லா. ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்பானேன்னு பயந்து வேறு பக்கம் பார்த்து ஆட ஆரம்பித்தாள் தங்கம். கணியான் கூத்து பார்த்துக்கொண்டிருந்த ரெண்டு மூணு பெருசுகளும், இளவட்டங்களும் தங்கம் பக்கத்தில் நின்னு உண்மையிலேயே சாமிதான் வந்திடுச்சோன்னு கண்ணத்தில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்.
“ஏ... அத்த நில்லு... என்ன வேணும் உனக்கு?” என்று தங்கத்தை பிடித்து உலுக்கினான் கோபால்.
“ஏய்... யாரு கையடே பிடிக்க; நான் யாரு தெரியுமா... நான்தான் இசக்கி வந்திருக்கேன்...! நான் ரொம்ப மனக்கவலையா நிக்கேன்... அங்க பாரு நான் அழறது உனக்கு தெரியல?” என்று கேட்டவாறே... நேர் எதிரில் இருந்த சிலையைப் பார்த்து கையை நீட்டினாள் தங்கம்.
“அத்த முதல்ல கண்ண திறந்து பாரு... உனக்கும் உன் புருஷனுக்கும் இது ஒரு பொழப்பாவே போச்சு” என்று தலையில் அடித்துக்கொண்டான் கோபால்.
“என்னடே உளர்ற...” என்று மெதுவாய் கண்ணை திறந்து பார்த்தாள் தங்கம்.
எதிரில் உக்கிரமாய் நாக்கை துரத்துயபடி, அரிவாளும் கையுமாக சுடலை கம்பீர சிலை பயமுறுத்திக்கொண்டிருந்தது. “இது என்ன பூடம் தெரியுதா... சுடலை. அந்தப் பக்கம் இருக்கு பாரு அதுதான் இசக்கி. பூடம் தெரியாம சாமியாடாத... மொதல்ல போயி மாமாவ வரச்சொல்லு”ன்னு சொன்னதும், அவ்வளவு நேரம் பத்ரகாளியாய் ஆடிக்கொண்டிருந்த தங்கம் சட்டென்று கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு, “அய்யா சுடலை... மன்னிச்சுக்கோய்யா... தெரியாம உன் மக தப்பு பண்ணிட்டா” என்று கண்ணத்தில் போட்டுக்கொண்டு, என்று சாஸ்தாங்கமாய் மண்டியிட்டு வணங்கியவள், படையல் போடும் இடம் நோக்கி நடந்தாள்.
“ஏய் பாத்தியாடே மகராசன்... சொன்னம்லா... ஆட்டைய போடறதுக்கு எப்படியல்லாம் நடிக்கா பாத்தியா... சரோஜாதேவியல்லாம் மிஞ்சிருவாடே...” என்று கோபால் நக்கலடித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்து பாலு வந்துகொண்டிருந்தார்.
“ஏய் பொண்டாட்டி போய்ட்டா; புருஷன் வர்றான்.”
“என்னடே கோவால் எப்படியிருக்க...? இந்த வருஷ கொடைய அசத்திபோடணும்டே... சாமத்துல வேட்டைக்கு போணும்லா. அதுக்குத்தான் கொஞ்சம் பூஜையில இருந்தேன். மேளம் யாருடே... நம்ம ராசுக்குட்டி செட்டா...!” என்று கேட்டதும், “ஆமா மாமா... அவங்கதான்” என்று பவ்யமாய் பதில் சொன்னான் கோபால்.
“என்னடே அவங்க எப்ப பார்த்தாலும், குடிச்சுப்போட்டு தகராறுல்லா பண்ணுவாங்க...” என்று பாலு சொல்லவும், “இல்ல மாமா, இந்த தடவை அப்படியெல்லாம் நடக்காது. இந்த வருஷம் பணகுடியில இருந்து கரகம் ஏற்பாடு பண்ணியிருக்கோம்”.
“ஏய்... சொல்லவே இல்ல பாத்தியா...! யாருடே நம்ம பட்டம்மா செட்டாடே...” கண்கள் என்றும் ஆர்வத்தில் விரிந்தன பாலுவுக்கு.
“ஆமா மாமா...!”
“ஏய்... பிராயத்துப் பசங்க நல்லாதாண்டே யோசிச்சு பண்றீங்க.. செய்ங்கடே செய்ங்க” என்று கடவாய் பல்வரை ஈன்னு இளித்தவர், “ஆமா... கரக செட்டு எங்கடே இருக்கு...”
“நம்ம மகாலிங்க சித்தப்பா வீடு சும்மாதானே கிடக்கு. அங்கதான் கூட்டிக்கொண்டு வச்சிருக்கோம்.”
“சரிடே... நீங்க வேலையெல்லாம் பாருங்க... மாமா ஒரு எட்டு பார்த்துட்டு வந்துட்றேன்.”
“என்ன மாமா இப்படி சொல்லீட்டிங்க... வேட்டைக்கு போற நீங்க அங்கல்லாம் போகலாமா...?”
“யேய்... ரெண்டு மூணு நாளா ஒரே காய்ச்சல். தலை வேற லேசா வலிக்கி. இன்னிக்கு சுடலை புண்ணியத்துல ஏதோ நடமாடிட்டு இருக்கேன். பிராயத்துப் பசங்க யாராவது பொருப்ப எடுத்துக்கிட்டு வேட்டைக்குப் போங்கடே... நமக்குத்தான் வயசாயிடுச்சுல்லா... பொறுப்பை யார்ட்டயாவது கொடுக்கணும்லா. சரியா... புரிஞ்சிக்கோங்கடே...” நான் ஒரு எட்டு போயிட்டு வந்துட்றேன்...” என்று இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து மைனர்போல் தோளில் தோங்கப்போட்டுக்கொண்டு, மகாலிங்கம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“மாமாவ எப்படி அனுப்புனேன் பாத்தியாடே மகராசன்.”
“என்னண்ணே ... கரகம் ஏற்பாடு பண்ணியிருக்கீங்களோ... என்ட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா...?”
“இல்லடே தம்பி... எல்லாமே ஒரு டூப்பு. மகாலிங்கம் வீட்டுக்கு பக்கத்துல... நம்ம தென்காசி மாமா பசங்கள நிக்க வச்சிருக்கேன். இவரு வர சேதிய அவங்ககிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன். அவங்க இவரு சாமக்கொடை வரை கோயில் பக்கம் வராத மாதிரி பாத்துக்கிடுவாங்க...” என்று ஏதோ சாதிச்சது போல் சிரித்தான் கோபால்.
பதிலுக்கு சிரித்துக்கொண்டே சேவல் கிடையை பார்த்த மகராசனுக்கு அதிர்ச்சி. மூணு சேவல் மிஸ்சிங். “கோபால்ண்ணே... சேவல் போச்சுன்னே...” என்று கத்தியதும், கோபாலின் கண்கள் கோவில் முழுவதும் தேட ஆரம்பித்தது. பாலு மனைவி தங்கமும் காணாமல் போயிருந்தாள்.