Monday, September 3, 2012

கேரளத்து கதகளி!


ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அடையாளம். அந்த அடையாளம் அவனுடைய குணத்தை, பண்பை, செயலைக் காட்டும். அது, உடுத்தும் உடையாக இருக்கலாம். பேசும் பேச்சாக இருக்கலாம். உண்ணும் உணவாக இருக்கலாம். அதேபோல நாட்டின் கலாசாரம் ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தனியான அடையாளங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் இருக்கிறது. அது, உணவு, உடை, அலங்காரம், நாட்டியம் கட்டடக்கலை போன்ற பல்வேறு கூறுகளாக ஒரு மாநிலத்தின்  கலாசார அடையாளமாக தனித்து நிற்கிறது.
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தின்  பெயரைச் சொன்னவுடன், முகத்தில் கலர் கலராக வண்ணம் தீட்டி, கண்களை உருட்டி உருட்டி ஆடும், கதகளிதான் சட்டென்று கண்முன் வந்துபோகும். கதகளி என்பது கேரள மாநிலத்தின் கலாசார நடனம் என்றாலும், இந்த நடனத்தின் ஆரம்பப்புள்ளி இருந்தது கொல்கத்தாவில்தான். கதகளி நடனம் தோன்றியே கதையே கொஞ்சம் சுவராஸ்யம்தான்.
அது 17ஆம் நூற்றாண்டு. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விளங்கிய பகுதிதான் கொட்டாரக்கரா. இந்தப் பகுதியை தம்புரான் என்ற மகராஜா ஆண்டுகொண்டிருந்தார்.  தம்புரான் மகராஜாவிற்கு எப்போதும் நடனம், நாட்டியம், நாடகம் போன்றவற்றின் மீது அலாதிபிரியம். ஒரு முறை கல்கத்தாவிற்கு வணிக நோக்கில் பயணம் மேற்கொண்டிருந்தார்.  தம்புரானிற்கு புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்றால், அந்த இடத்தின் பாரம்பரியங்களை தெரிந்துகொள்வதில் முழுமையாக நேரத்தை செலவிடுவார்.
அன்  தன் அமைச்சர்கள் சகாக்களுடன்  வீதி உலா வந்துகொண்டிருந்தார். அப்போது வீதியில் கடவுள் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் கிருணன் ஆட்டம் எனும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உலா வந்த தம்புரான் நாட்டியத்துடன் கூடிய அந்த கிருஷ்ணன் கதை சொல்லும் நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப்போயிற்று. கிருஷ்ணன் ஆட்டம் முடியும் வரை பொருமையாக இருந்து வேடிக்கை பார்த்தவர், நாட்டிய அரங்கேற்றம் முடிந்த உடன் அந்த நடனக் கலைஞர்களை சந்திக்கச் சென்றார். அந்த நடனக் குழுவின் தலைவர் பெயர் சமோரின். சமோரின் கிருஷ்ணரின் தீவிர பக்கதர். கிருஷ்ணன்  மீது உள்ள காதலால், கிருஷ்ணர் பற்றி சமஸ்கிருதத்தில் பல்வேறு கதைகளை எழுதியுள்ளார். கதைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், கிருஷ்ணரின் வாழ்க்கையை நடனத்தோடு கதையை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் கிருஷ்ணன் ஆட்டம் என்ற பெயரில் உருவானது. சமோரினிடம், தம்புரான்  கிருஷ்ணன் ஆட்டம் வந்த கதைகளைப் பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்த நடனக் குழுவை அப்படியே கேரளத்திற்கு அழைத்து வர திட்டமிட்டார்.
இது சம்பந்தமாக சமோரினிடம் போய் கேட்டிருக்கிறார். ‘கேரளத்தில் இந்த நடனத்தை பிரபலப்படுத்த வேண்டும். கிருஷ்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை பட்டித்தொட்டியெல்லாம் கேரளத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் கேரளத்திற்கு வந்து , எங்கள் சமஸ்தானத்தில் தங்கியிருந்து கிருஷ்ணன் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஒரு மகாராஜா தன்னிடம் வந்து இப்படி கேட்டதற்கு சமோரினுக்கு பெருத்த மகிழ்ச்சிதான். ஆனால், அப்போது கேரளத்திற்கும், கல்கத்தாவிற்கும் இடையே உள்ள அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால், சமோரின் நடனக் குழுவை தம்புரானால் உடனடியாக கேரளத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கேரளத்திற்கு வந்த பிறகும் தம்புரானால், மனம் கிருஷ்ணன் ஆட்டத்தை விட்டு வெளிவரவில்லை. எப்படியாவாது அதேபோன்றதொரு ஒரு நாட்டிய நாடகத்தை கேரளத்திலும் உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சில நாட்டியக் கலைஞர்களை வைத்து ராமன் ஆட்டம் எனும் புது வகை நாட்டியத்தை உருவாக்கினார். கிருஷ்ணன் ஆட்டம் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஆனால், ராமன் ஆட்டத்தின் முழு கதையும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது. முதல் பகுதி முழுவதையும் தம்புரானே எழுதினார். ராமன் ஆட்டம் உருவாக்கியதில் தம்புரானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  ராமன் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்தது. ராமன் ஆட்டத்திற்கு பல்வேறு எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பித்தார்கள்.  ராமன் ஆட்டம் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கிய பெருமை எழுத்தாளர் இறையம்மன் தம்பியையே சாரும். காலங்கள் ஓட ஆரம்பித்தன . ராமன் ஆட்டம் எனும் நாட்டிய நாடகம் ஆட்டகதா என்ற பெயரில் (ஆட்டத்துடன் கதை கூறுவது என்று பொருள்) அந்த நாட்டியம் மெருகேற தோன்றியது. இந்த நடனத்தை மேலும் மெருகேற்றவும் நாட்டிய நாடகத்தை ஊரெங்கும் பரப்ப பெரிதும் பாடுபட்ட பெருமை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மகராஜாவா ஸ்வாதி திருநாள் ராம வர்மாவையே சேரும்.
தம்புரான் உருவாக்கிய ராமன் ஆட்டம், ஆட்டகதா நாட்டிய நாடகம்தான் கதகளியாக மாறியது.  17 ஆம் நூற்றாண்டு நாட்டிய நாடகமான இன்றிருக்கும் கதகளியில் கடவுள்தான் கதாநாயகர்கள்.  நடிப்பு, நடனம், அபிநயம், இசை, வாத்தியம் வாசித்தல் எனும் ஐந்துக் கலைகளை உள்ளடக்கியதுதான் கதகளி. இந்த ஐந்து கலைகளையும் தெரிந்த ஒருவரால் மட்டும்தான் கதகளியை திறம்பட ஆட முடியும் என்பது கதகளியின் கூடுதல் சிறப்பு. கதகளியில் கிட்டத்தட்ட 101 கதைகள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக பெரும்பாலான மேடைகளில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள் மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. ஊடகங்கள் பெருகாத அந்தக் காலக்கட்டத்தில், கேரளத்தில் கதகளி விடிய விடிய மக்கள் பார்த்து ரசிப்பார்களாம். ஆனால், தற்போது ஊடகங்கள் பெருகி இருந்தாலும், கதகளியின் ரசிப்புத் தன்மை மட்டும் இன்னும் கேரளத்து மக்களிடையே குறையவில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், கதகளி அரங்கேற்றம் மட்டும் இரவில் இரண்டில் இருந்து நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது.
கதகளி நாட்டிய நாடகம் பற்றிய ஆராய்ச்சி கேரளத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கதகளியில் கதாபாத்திரங்கள் அணிந்துவரும் நகைகள், புறத்தோற்றம், முகபாவங்களை வெளிக்காட்டுதல், நடன அசைவுகள் இவைகள் எல்லாம் தம்புரான் மகாராஜா 15 ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் உள்ள மட்டஞ்சேரி பகுதி கோயிலில் உள்ள சிற்பங்களின் அடிப்படையாக வைத்து நடனத்தை அமைத்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் புராணக்கதைகளை  நாட்டியம், நடனம், இசை, அலங்காரத்துடன் அட்டகாசமாக பட்டிதொட்டியெல்லாம் பரப்பியதோடு, தங்கள் மொழியின் உச்சரிப்பையும், தங்கள் மாநில கலாசாரத்தை மக்கள் மத்தியில் பரப்பிய கதகளி, இன்னும் பல நூற்றாண்டுகள் கேரத்தின் பெருமையை பறைசாற்றும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment