Saturday, June 9, 2012

பேனா செய்த உதவி!


நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். விக்னேஷ் ஒரு தொழிற்கல்வி படிப்பில் இரண்டாண்டுகளை முடித்துவிட்டு மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர், நல்லிப்பாளையம் UCO  வங்கியில் கல்விக் கடன் பெற்று  படித்து வருகிறார்அவர்  வட்டிக்கு அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர். ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கான வட்டியைக் கட்டினால்தான் மூன்றாமாண்டுக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார்  கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றொருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.


கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. இந்தத் தகவல்களைச் சென்ற வாரப் புதிய தலைமுறையில்  வெளியிட்டிருந்தோம்
கல்விக் கடன் பெறுவது எப்படி என்பது பற்றிய தகவல்களைத் திரட்டி கிருஷ்ணா எழுதியிருந்தார். அதில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீநிவாசனின் பேட்டியையும் வெளியிட்டிருந்தோம்

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்  ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு  தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் வங்கி மேலாளரை போனில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும் அது எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றனஎன்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையையும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8)  வங்கியின்  துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். சிறிது நேரத்தில்  வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு  அடுத்த செமிஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய  வரைவோலையை வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.
இது போல் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற தன் கவலையை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா தான் திங்கள் கிழமை  (ஜூன் 11ம் தேதி) வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

புதிய தலைமுறையால் ஒரு மாணவனுக்கு விடிந்திருக்கிறது. இன்னும் பலருக்கும் தீர்வு கிடைக்கலாம்.