Saturday, November 26, 2011

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்டீரியர் டெக்கரேஷன்!





 ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கத்தானே செய்யும். அந்த ஆரம்ப ரகசியம் என்ன என்பதுதான் இப்போதைக்கு எல்லோருடைய தேடலும். இதுதான் முடிவு என்று எதையும் சொல்லிவிடாதபடிதான் மனிதர்கள் குறித்த நம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கின்றன. தொடக்க காலத்தில் மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்? தற்போது பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே இயல்புடன்தான் ஆதிமனிதன் இருந்திருப்பானா? அல்லது நம்மைவிட திறமைசாலிகளாகவும், அதி புத்திசாலிகளாகவும் இருந்திருப்பானா? என்ற தேடல்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டிருக்கின்றன.
 தற்போதைய மனிதனின்  ரசனைத்தன்மையும், ஆதிமனிதனின் ரசிப்புத் தன்மையும் எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைதான் இது. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் ரசனைக்குத் தகுந்தவாறு வீட்டை அமைத்திருப்போம். வரவேற்பரை ஆரம்பித்து, வீட்டு சமையல் அறை உள்பட அனைத்து அறைகளிலும், தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு அறைகளை அழகுப்படுத்தி பார்ப்பது மனிதனுடைய இயல்பு. இந்த இயல்பு நம் முன்னோர்களுக்கு இருந்திருக்குமா? இருந்திருக்கும் ஆனால், கொஞ்சம் குறைச்சலாக இருந்திருக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் வசதிவாய்ப்புகள் அப்போது இல்லையே! என்றுதான் நம் மனம் சொல்லும். ஆனால், நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நம்மைவிட வீட்டை அழகுப்படுத்துவதில் நம்மைவிட ரசனைத்தன்மையும், ரசிப்புத் தன்மையும் நம்மைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அந்த நாடு இந்த நாடு என்று ஆராய்ச்சியை நோக்கியே நாம் செல்லவேண்டாம்.
நாம் தினமும் வணங்கும் கோயிலுக்குச் சென்று பாருங்கள். நம் முன்னோர்களின் ரசிப்புத் தன்மை தெரியும். கரிகாலன் கட்டிய கல்லணை ஆரம்பித்து, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வரை மலைக்கத்தானே செய்கிறது. இந்த அளவு தொழில்நுட்பம் அப்போது இல்லை. இந்த அளவுக்கு வாகன வசதிகளோ, நவீன கருவிகள் இல்லாதபோது, அவ்வளவு பெரிய கல்லணையும், இவ்வளவு பிரமிக்க வைக்கும் கோயிலை அவர்களால் கட்ட முடிந்திருக்கிறது. இடி, மின்னல், பல இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி இன்னும் அவர்களின் கட்டடக்கலையை நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்மைவிட அறிவியலில் சிறந்தவர்களாத்தானே இருக்க முடியும். ஆனால், இன்று அதைப்போல் ஒன்றுகூட நம்மவர்களால் அமைக்க முடிவதில்லையே. இந்த விஷயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்க்கும்போது, நம்முடைய ரசிப்புத் தன்மையுடைய நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த நம் முன்னோர்கள் ரசிப்புத் தன்மையும், அறிவியல் அறிவும் நம்மைவிட அதிகமாக பெற்றிருந்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
வாழ்க்கையின் சூட்சுமத்தையும், இல்லறத்தின் ரகசியத்தையும், ஒரு சில சிற்பங்களால் காட்டத் தெரிந்திருக்கிறது என்றால் நம்மைவிட எல்லா விஷயத்திலும் அறிவுப்பூர்வமானவர்களாகத்தானே இருந்திருக்கவேண்டும். இம்மாதிரியான பல கேள்விகள்தான்  ஆராய்ச்சியாளர்களின் மண்டையையும் குடைந்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நம்மைவிட நம் முன்னோர்கள் விஞ்சியவர்களா என்பதை தெரிந்துகொள்வதைவிட அவர்களின் ரசிப்புத் தன்மையை மட்டும் சரியாக கணித்துவிட்டால், அவர்களின் அறிவியல் அறிவை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் அறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையில்தான்  அந்த ஆராய்ச்சியும் நடந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் அமைந்துள்ளது விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் எனும் பல்கலைக்கழகம் இந்த பல்லைக்கழகத்தில் மனிதனின் ரசனை குறித்த ஆராய்ச்சிக் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தது பேராசிரியர் கிறிஸ்டோபர் ஹென்சில்வுட் தலைமையில் அமைந்த  ஆய்வுக்குழு. மனிதன் ரசிப்புத் தன்மை நவீன காலத்தில்தான் அதிகம். ஆதி மனிதர்களுக்கு நம்மைவிட ரசிப்புத் தன்மை குறைவுதான் என்பதுதான் இவர்களின் ஆய்வுக்கான அடித்தளம். இதுசம்பந்தமான ஆய்வுக்கான பயணத்திற்கு கிறிஸ்டோபர் கிளம்பும்போதே இன்று தனக்கான விடை கிடைத்துவிடும் என்று அதிதீவிர நம்பிக்கையுடன் தன் சகாக்களுடன் பயணித்தார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுண் பகுதிக்கு அப்பால் காடும், மலையும் சூழ்ந்த பகுதியை அவர்கள் நெருங்கியிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த அடர்ந்த காட்டின் உள்ளே உள்ள குகைகள்தான் இவர்களின் ஆராய்ச்சிக்கான பகுதி. அதைத் தேடித்தான் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்ததால், மறுநாள் காலை பயணத்தை தொடர்ந்துகொள்ளலாம் என்று கிறிஸ்டோபர் சொல்ல  மற்றவர்களும் ஆரம்பித்தார்கள். கூடாரத்தை அமைக்க முற்படும்போது, குழுவின் இருந்த ஒருவர் தூரத்தில் ஒரு குகை தெரிவதுபோல் இருக்கிறது. இங்கு கூடாரம் அமைத்து தங்குவதற்கு அங்கு போய் ஓய்வு எடுக்கலாமே என்று சொல்ல, ஆய்வுக் குழுவினர் அந்த குகையை அடைந்தார்கள்.
கும்மென்று இருட்டு. வவ்வால்களின் சத்தம், வண்டுகளின் ரீங்காரத்தைத் தவிர நிசப்தமாக இருந்தது அந்தப் பகுதி. கொண்டு வந்த விளக்குகள் உதவியுடன் படுத்து உறங்குவதற்கான பணிகளை குழுவினர் மேற்பார்வையிட கிறிஸ்டோபர் தன்  கையில் வைத்திருந்த டார்ச் விளக்கின் ஒளியை குகையின் மேற்புறச் சுவற்றின் மேல் பாய்ச்சினார். கரடுமுரடாக இருந்த கற்களுக்கு ஊடே சிவப்பும் கறுப்புமாக நெளிவு சுளிவுகளாக கோடுகள். இது ஆதிமனிதன் விட்டுச்சென்ற மனிதர்களின் ரசனை வடிவங்கள் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை. அசதியில் படுத்து தூங்கிவிட்டார்கள். பொழுது புலர ஆரம்பித்தது. ஓரளவு குகைக்குள்  சூரிய வெளிச்சம் ஊடுருவ ஆரம்பித்திருந்தது. டக்கென்று விழிப்புத் தட்டியது கிறிஸ்டோபருக்கு. உடனடியாக லென்சும், பிரஷ்ஷும் சகிதமாக குகையின் மேற்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தார். நிச்சயமாக ஆதி மனிதனின் கைவண்ணம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார். குகையின் படிகத்தை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பியபோது, அது ஒரு லட்சம் ஆண்டுக்கு முந்தையது என்பது கிறிஸ்டோபருக்கு தெரியவந்தது. ஆச்சர்யம் தாங்கவில்லை கிறிஸ்டோபருக்கு. ஒரு லட்சம் ஆண்டுக்கு  முந்தைய மனிதர்கள் இப்படி ஒரு ஓவியம் எப்படி வரைய முடிந்தது என்பதுதான் அவருக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்திற்கு காரணம். ஓவியத்தில் அப்படி ஒரு நுணுக்கம். இப்படி ஓவியம் வரைய தனிப்பட்டக் கருவிகள் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஓவியத்திற்கான கலவைகள் எப்படி தயாரித்திருப்பார்கள் என்பது போன்ற விஷயங்கள் கேள்விகளாக கிளம்பவே குகைகளைச் சுற்றி தொடர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளின் கூறிய எலும்புகள், கற்களின் கூழ் இவற்றைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அதிசய மக்கள் எச்சம் சொச்சமாக கிடைத்தது சின்ன சின்ன அடையாளங்கள் கிடைத்தது கிறிஸ்டோபருக்கு.
ஆய்வின்  கடைசியில் கிடைத்தது, ஆதி மனிதர்கள் வாழ்ந்த பிளாம்போஸ் குகைதான் அது. அவர்கள் பல ஆண்டுகள் தன் வாரிசுகளுடன்  வாழ்ந்த பகுதியாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். தாங்கள் வாழ்ந்த பகுதியை கலைவண்ணத்துடன் இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்த இண்டீரியர் டெக்கரேஷன்தான் அந்த ஓவியங்கள் என்பதுதான் கிறிஸ்டோபரின் அளித்த ஆய்வறிக்கையின் முடிவு. நம்மைவிட சிறந்த வகையில் யோசித்திருக்கிறார்கள். இருக்கும் உபகரணங்களை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்தலாம் என்று அவர்களுக்கு யோசிக்கத் தெரிந்திருக்கிறது என்பதுதான் கிறிஸ்டோபரின் ஆய்வு முடிவு.
இதுவரை நாம் பார்த்த ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சி முடிவுகளும் சொன்ன விஷயம்தான் இந்தக் கட்டுரையும் சொல்கிறது. விஞ்ஞானமும், அறிவியலும், உச்சத்தைத் தொடாத ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய அந்த ஆதிமனிதர்கள் கலைநயமும், ரசனைத்தன்மையும் மிக்கவர்களாக இருந்திருக்கும் பட்சத்தில் நம்மைவிட நிச்சயமாக அறிவுஜீவிகளாகத்தானே இருந்திருக்க முடியும். ஆனால், அவர்களை விட அறிவிலும், சிந்தனையிலும் நாம் பின்தங்கியிருப்பதற்கு காரணம் வளர்ச்சியடைந்த அறிவியலாலா? கேள்விகளுக்கான பதிலைத்தேடி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment