Monday, September 3, 2012

போர்க்களத்தில் பிறந்த வில்லுப்பாட்டு!


ஒவ்வொரு மாநிலத்தையும்.. ஏன் ஒவ்வொரு நாட்டையும் தனியாக அடையாளப்படுத்த இசை, நடனம், ஓவியம், பேச்சு, உடை, கட்டடம் என்று ஒவ்வொன்றும் கருவியாய் இருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகள் தவிர்த்து, கிழக்கு கேரளம் வரை மக்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயம்தான் வில்லுப்பாட்டு.
வில்லுப்பாட்டு என்பது இசையோடு புராணங்கள், பக்தியை சொல்லும் இசை நிகழ்ச்சி என்றுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால், வரலாற்றில் வில்லுப்பாட்டுக்கு தனியொரு இடம் உண்டு. இந்தத் தலைமுறையினர் வரை ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் வில்லுப்பாட்டு, நாகரிக வளர்ச்சி, ஊடகங்கள் பெருக்கங்களினால் அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள முடியாத அழிவுறும் விளிம்பு நிலைக்கு  வில்லுப்பாட்டு என்ற ஒரு கலை தள்ளப்பட்டுவிடுமோ அச்சம் நம்மிடம் தொற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.
தென் தமிழக மாவட்டங்களில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவது எல்லோரும் அறிந்ததே. பெரும்பாலும் ஏப்ரல் மே மாதங்களில்தான் சிறு தெய்வங்களை வழிபடும் திருவிழாக்கள் அதிக அளவில் தென் மாவட்டங்களில் ஊருக்கு ஊர் நடைபெறும். இந்த திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு சிறுதெய்வ கோயில்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு என்று தனியொரு இடம் உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் சிறு தெய்வங்களுக்கு பூஜைகள் இரவு 7 மணியில் ஆரம்பித்து 8 மணிக்கு முடிந்துவிடும். அதையடுத்து நடு இரவு ஒரு மணிக்கு சாமி காடு செல்லும் சடங்கு நடைபெறும். அதையொட்டி நடுநிசி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையை பார்க்க பக்தர்கள் விழித்து இருப்பதற்காக, சிறு தெய்வ சிலைக்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் சிறு தெய்வகளின் புராணக் கதைகளை கூறுவார்கள். தமிழர்களின் பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறை எல்லாமே இந்தக் கதையோடு ஒட்டி நகைச்சுவை கலந்து மெட்டு இசைத்துப் பாடுவார்கள் வில்லுப்பாட்டு கலைஞர்கள்.
இன்று கோயில்களிலும் திருவிழாக்களிலும் காணும் வில்லுப்பாட்டு வந்த கதை கொஞ்சம் சுவராஸ்யமானது. கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டு காலம் அது. மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்ட காலம். விலங்குகளை வேட்டையாட அந்தக் காலக்கட்டத்தில் மனிதன் வில் போன்ற ஆயுதத்தையே பயன்படுத்தினான். தான் தேடிச்சென்ற விலங்கு கிடைக்காதபோதும், வேட்டை சரியாக அமையாதபோதும், தங்கள்  சோர்வு தெரியாமல் இருக்க, வில்லை கவிழ்த்தி, காய்ந்த சருகுகளை ஓட்டையிட்டு அதை வில்லின் நாணில் கோர்த்து, கைகளை நாணில் தட்டி இசைப்பார்களாம். வில்லுப்பாட்டு முதன் முதலில் அரங்கேறியது நடுக்காட்டில் விலங்குகளை வேட்டையாடியபோதுதான்.
காலங்கள் உருண்டோடியது. விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த வில், போர் ஆயுதமாக உருவெடுத்தது. போர் வீரர்கள் போர்க்களத்தில் சோர்ந்து போய் நின்றுகொண்டிருக்கும்போது, ஏதேனும் ஓர் போர் வீரன் வில்லை தலைகீழாய் கவிழ்த்தி அதில் மணிகளை கோர்த்து, போர் வீரர்களின் சோர்வை நீக்கவும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் வகையிலும், தங்கள் சாகசங்களையும், தங்கள் மூதாதையர்களின் போர்த்திறமைகளையும், போரில் வெற்றிபெற்ற கதைகளையும் உரக்க  சப்தமிட்டு பாடுவார்களாம். இந்த வீர எழுச்சிப் பாட்டைக் கேட்டும் ஒவ்வொரு வீரருக்கும் வீரம் கொப்பளிக்குமாம். சோர்வை விரட்டி, போரில் சண்டையிடுவார்கள் என்கிறது வரலாற்று ஆய்வேடு.  எந்த இலக்கணத்திற்கும் உட்படாமல், குரலும், மனமும் போன போக்கில் உக்கிரமான மகிழ்ச்சியை அள்ளித்தரும் விஷயமாகத்தான் வில்லுப்பாட்டின் முதற்படி அமைந்தது.
15 ஆம் நூற்றாண்டின் காலத்தில் அரசர்களின் புகழ் பாட அரசவையில் அருதக்குட்டி எனும் புலவரால் வில்லுப்பாட்டுக்கு இலக்கணம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், புலவரின் பெயர் குறித்த சர்ச்சையும் வரலாற்று ஆய்வாளர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்த வரலாற்று ஆய்வாளர்களும், 15 ஆம் நூற்றாண்டில் வில்லுப்பாட்டக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டதை யாரும் மறுக்கவில்லை. வில்லுப்பாட்டு ஒரு வடிவத்திற்கு வர ஆரம்பித்தது. கி.பி. 1550 ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில்தான்.
 வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வில்லுப்பாட்டின் முக்கிய அங்கமாக விழங்கும் வில்லானது ஆரம்ப காலக்கட்டத்தில் முற்றிலும் பனை மரத்தாலேயே செய்யப்பட்டது. வேறு வேறு மரங்களில்  வில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பனை மரத்தில் செய்யப்பட்ட வில்லில் இருந்து கிடைக்கும் இசையின் நயம், மற்ற மரங்களில் அமைக்கப்பட்ட வில்லில் கிடைக்கவில்லையாம்.  நடுவில் தடிமனாகவும், இரண்டு ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் இந்த வில்லின் ஓரங்களில் நாண் ஏற்றப்பட்டு, மணிகள் தொங்கவிடப்பட்டு இசைக்கப்படுகிறது. இந்த வில்லுடன், கடம், ஜால்ரா போன்றவை பக்க வாத்தியமாக இருந்தாலும், பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிலுக்கு கொண்டு சென்று மேடையை தெய்வீகமயமாக்கியது உடுக்கை என்ற இசைக்கருவிதான். ஆனால், தற்போது அரங்கேற்றப்படும் வில்லுப்பாட்டில் உடுக்கை பயன்படுத்துவது இல்லை மாறாக தபேலா, ஆர்மோனியம், பம்பை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வில்லுப்பாட்டில் ஆறு இசைக்கலைஞர்கள் இருப்பார்கள். இதில் ஒருவர் நகைச்சுவை கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்? ஒருவர் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சிலேடை கேள்விகளை கேட்பார். மற்றவர்கள் இசைக்கருவிகளை இசைக்க ஒருவர் முக்கியக் கதையை பாட்டோடு இசைத்து பாடுவார். மன்னர்களின் வரலாறு, புராணக்கதைகள், சிறு தெய்வ வரலாறு என்பது மட்டுமே முன்னர் வில்லுப்பாட்டுக்கு பாடு பொருளாக இருந்தது. ஆனால், தற்போது காலத்திற்கு தகுந்தவாறு வில்லுப்பாட்டில் அறிவியல் விஷயங்களும் பாடுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரையறுக்கப்பட்ட மெட்டுக்கள் கிடையாது; குரலில் இனிமை வேண்டும் என்ற கட்டுப்பாட்டும் கிடையாது; இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இப்படி இசைக்கே உண்டான அத்தனை முக்கிய அம்சங்களையும் புரந்தள்ளிவிட்டு, பார்ப்பவர்களின் எண்ணங்களை தூண்டி, கலாசாரத்தை வளர்க்க உதவியாய் அமைந்ததுதான் வில்லுப்பாட்டு. இன்றளவேணும் தென் மாவட்ட மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துகிடக்கும், வாழ்வியலையும், பண்பாட்டையும் இசையோடு பேசு மொழியில் மனதில் பதியவைத்த இந்த வில்லுப்பாட்டு தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றுதானே!

1 comment:

  1. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Fisch Küche Brienz | Seehotel Bären Brienz | Boutique Ganesha

    ReplyDelete