Friday, April 2, 2010

சண்டக்காரன்!




கணவனும், மகனும் வீட்டை விட்டு வேலைக்கு கிளம்பியதுமே மனதிற்குள் ஒருவித பய
உணர்வு தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மீனாட்சிக்கு.
""ஏண்டி... ஈஸ்வரி ஜன்னல் எல்லாத்தையும் நல்ல மூடிடு. இன்னிக்கு அந்தப் பய
வீட்லதான் கெடக்கான். ஏதாவது பிரச்னை பண்ணுவான். அதுவும் ஆள் இல்லாத நேரம்
பார்த்துதான் கத்த ஆரம்பிப்பான், அந்த எழவெடுத்துப் போறவன்...'' என்று மறுபடியும்
கத்த ஆரம்பித்தாள் அம்மா. இந்தளவிற்கு அம்மா கோபப்படுவதற்கான காரணம்
முத்தையா.
எங்க வீட்டுக்கு அடுத்தவீடுதான் முத்தையாவின் வீடு. வேலைக்கு போவான். ஆனா,
எப்போ போவான்னுதான் யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் பக்கத்து வீடுகள்ல
ஆம்பளைங்களாம் வேலைக்கு போன பிறகுதான் தன்னுடைய கதா காலட்சேபத்தை
நடத்துவான்.
எதையாவது காரணத்தை வச்சிக்கிட்டு சண்ட போடுவான். தாறுமாறா கத்துவான். ஏன்
கத்துறான் எதுக்கு கத்தறான்னு அவனுக்கே தெரியுமோ தெரியலையோ தெரியாது.
அவனைப் பார்த்தாலே எல்லாருக்கும் ஒரு வித அலர்ஜி. ஒதுங்கித்தான் போவார்கள்.
நாங்களும் அப்படித்தான்.
எங்கத் தெருவுல முத்தையாதான் பட்டம் சூடாத ரவுடி, தாதா... இப்படி எல்லாம்.
தெருக்குழாயில தண்ணீ வந்துச்சுன்னா முதல்ல அவன் பொண்டாட்டிதான் எடுக்கணும்.
இல்லாட்டி அவ்வளவுதான்... ரணகளம் பண்ண ஆரம்பிச்சுடுவான் முத்தையா.
ரணகளம்னா... வேட்டியை கழற்றி போட்டுக்கிட்டு, டவுசரோடு இங்கிருந்து அங்கே
ஓடுவான். அங்கிருந்து இங்கே ஓடுவான். பாக்கறதுக்கே கர்ண கொடூரமா இருக்கும்.
பொம்பளைங்க எல்லாம் கண்ண மூடிக்குவாங்க. அதனாலையே முத்தையா வீட்ல
இருந்தான்னா, தெருவே அமைதியா இருக்கும்... பொம்பளைங்க வெளியவே
வரமாட்டாங்க.
அவன் அப்பப்ப கட்டை, கம்பு, கத்தி அருவாள்னு எல்லாத்தையும் வீராவேசமா
துõக்குவான். கொடுவா மீசை வச்சிக்கிட்டு பார்க்கறதுக்கு பயங்கரமா இருக்கறதுனால,
வீட்டு ஆம்பளைங்களும் எதுக்குடா வம்புன்னு அவனை எதிர்த்துகூட பேசறதுல்ல.
அண்ணனுக்கு அவனைப் பார்த்தாலே கோபமா வரும். "என்ன ஆனாலும் சரி; அவனை
அடிக்காம விடக்கூடாது'ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சான். ஆனா, அப்பா
வாத்தியார்ங்கறதால... வாத்தியார் பையனும் இப்படி அடாவடி பண்றானேன்னு
ஊருக்குள்ள சொல்லிடக்கூடாதுன்னு, அப்பா அடக்கி வச்சிட்டார். அதனால அவனும்
வாயை திறக்கல.
முத்தையா சுத்திமுத்தி எல்லா வீடுகள்லயும் சண்ட போட்டுட்டான். அவன் சண்ட
போடாதது எங்க வீட்ல மட்டும்தான்.
ஆனா, என்னிக்கு வேணாலும் சண்டைய இழுத்துருவான்னு அம்மா பயந்துக்கிட்டே
இருந்தாங்க.
""ஏண்டி சொல்லிக்கிட்டே இருக்கேன்... காதுலையே வாங்காம அப்படி என்னதான்
யோசிச்சிக்கிட்டு இருப்பியோ''ன்னு சொல்லிக்கிட்டே வந்து ஜன்னல் ரெண்டையும்
பளார்னு மூடும்போதுதான் நிஜம் நினைவுக்கு வந்தது.
அம்மா இன்னமும் புலம்பிக்கிட்டுத்தான் கிடந்தாள்.
""இன்னிக்கு மத்தியானம் என்னம்மா பண்ணிருக்க...''
""இத மட்டும் நல்லா கேளு... கூடமாட ஒத்தாசைக்கு ஒரு வேல பாக்காத...''
""என்னம்மா எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்க... மத்தியானம் என்னதும்மா
சொல்லு...''
""புளிக்குழம்பு வச்சி, துவையல் அரைச்சிருக்கேன்.''
""ஏம்மா... நானே ஹாஸ்டல்ல காரக்குழம்பு சாப்ட்டு சாப்ட்டு நாக்கே
செத்துப்போச்சேன்னு சொல்லிக்கிட்டு கிடக்கேன். அதப் போய் வச்சிருக்கியே... பேசாம
இதுக்கு செமஸ்டர் லீவுல ஊரு பக்கம் வராம அப்படியே ஹாஸ்டல்லேய
உட்கார்ந்திருக்கலாம்.''
""இப்ப என்னடி வேணும்...''
""ஒரு ஆம்லட் மட்டும் போடும்மா...''
""சரிடி... போட்டு தொலைக்கறேன்...'' அம்மா கடுகடுத்தப்படியே செல்ல,
வெளியிலிருந்து முத்தையாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்தது.
""வீட்ல மனுஷன் குடியிருக்கணுமா... வேண்டாமா... எப்படி நாறுது. ஏய் வெளிய
வா...'' என்று குரல்.
""ஏம்மா.. முத்தையா கெடந்து கத்தறான். யாரம்மா ஏசறான்...'' என்று கேட்க,
""ஸ்ஸ்ஸ்...'' அமைதியா இருக்குமாறு அம்மா எச்சரித்துவிட்டு, கதவோரமாய் காதை
வச்சிக்கிட்டு நின்றிருந்தாள்.
""ஏய்... நான் கெடந்து கத்திக்கிட்டு கிடக்கேன்... ஏதாவது வெளிய வருதா பாரு... குளிக்கற
தண்ணியா, இல்ல கழுவுற தண்ணியா தெரியல... யம்மா... என்னா நாத்தம்...'' என்று
மூக்கை பொத்தியபடியே பேச ஆரம்பித்தான்.
அவன் மூக்கைப் பொத்திக்கொண்டு பேசியது... எனக்கு குபுக்கென்று சிரிப்பை
வரவழைத்தது.
""பெரிய வாத்தியானாம்... இவன் வீட்டுக்குள்ள சாக்கட போச்சுன்னா இவன்
ஒத்துப்பானா...?''
""அம்மா... அவன் நம்மள பத்திதான் பேசறான்...'' எனக்கு சட்டென்று கோபம் வந்தது.
""பொறுடி... அப்பா வேற வீட்ல இல்ல... எதையாவது கத்தி தொலைச்சிக்கிட்டு
போறான். பேசாம வாய மூடிக்கிட்டு உட்காரு.'' அம்மாவும் இப்போது அணிச்சையாய்
கையை வைத்து வாயை பொத்திக்கொண்டு நின்றிருந்தாள்.
""நான் என்ன லுõசுப் பயலா... தனியா நின்னு கத்திக்கிட்டு நிக்கறதுக்கு... இப்ப வெளிய
வரல... அவ்வளவுதான், நான் என்ன பண்ணுவேன்னே எனக்குத் தெரியாது'' என்று
சொல்லி முடிக்கவும், வீட்டுக் கதவில் "டமார்'னு ஒரு சத்தம்.
""அம்மா... அவன்தான் கல்லைத் துõக்கி வீசறான். கதவத் திறம்மா... என்னன்னு
கேட்ருவோம்.''
""ஏய்... நீ உட்காரு. நான் வெளிய போய் கேட்டுட்டு வர்றேன்...'' என்று சொல்லும்போது
அம்மாவின் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தது.
அம்மா கதவைத் திறந்துகொண்டு வெளியே நிற்க...
""ஏம்மா... இவ்வளவு கத்துறேன்... காது ரெண்டும் அவிஞ்சு போச்சா... இங்க பாரு...''
என்று அவன் கை நீட்டிய திசையை பார்த்தபோது எங்கள் வீட்டு சாக்கடை, லேசாக
உடைந்து சாக்கடைத் தண்ணீர் அவன் வீட்டு வாசலில் லேசாக தேங்கி நின்றது.
அம்மா அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.
அம்மா எதிர்த்துப் பேசாதது அவனுக்கு ஒருபுறம் வசதியாய்போனது. வாய்க்கு வந்தபடி
கத்த ஆரம்பித்தான். அவன் பேசிய பேச்சு காது கூசியது. என்னால் சுத்தமாய் கேட்க
முடியவில்லை. நான் மெதுவாக வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன்.
துõரத்தில் அண்ணன் வருவது தெரிந்தது.
அப்பாடா... ஒருவழியா அண்ணன் வந்துட்டான் என்று மனசு கொஞ்சம் நிம்மதியானது.
அம்மாவை அவன் சகட்டு மேனிக்கு காட்டுக் கூச்சலில் கத்த, பக்கத்து வீட்டுக்காரங்க
எல்லாம் அவங்கவங்க வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு
இருந்தாங்க. யாரும் விலக்கு புடிக்கல.
அண்ணன் பக்கத்துல வந்துட்டான்.
அம்மாவை... முத்தையா திட்டுறதப் பாத்த அண்ணன் பதறிப்போனான்.
""என்னம்மா ஆச்சு...?'' என்று அண்ணன் அம்மாவின் தோளைத் தொடவும், அம்மா
தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அண்ணனுக்கு விர்றுன்னு கோபம் வந்தது.
""ஏய்... உனக்கு என்னடா வேணும்?''னு சட்டுன்னு முத்தையா சட்டைய புடிச்சுட்டான்.
இத... முத்தையா மட்டுமல்ல நாங்களும் எதிர்பார்க்கல. அம்மா அப்படியே வாயடைத்துப்
போய் நின்றாள்.
""பொடிப்பய... நீ என் மேல கைய வச்சிட்டியா..'' என்று நாக்கை மடித்து முறைக்க,
சட்டென்று முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் அண்ணன். அவ்வளவுதான்... ""ஏய்...
அடிச்சிட்டில்ல.. இன்னிக்கு ஒரு கை பார்க்காம விடமாட்டேன்... ஏடி.. அருவாள
எடுத்துக்கிட்டு வா... இன்னிக்கு... இவன...'' என்று சொல்லிக்கொண்டு, சுத்தி சுத்தி
எதையோ தேடினான் முத்தையா.
""என்னடா தேடுத... நாயே... இன்னிக்கு நான் இருக்கணும். அல்லது நீ இருக்கணும்.
ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்...'' என்று அண்ணன் விருட்டென்று வீட்டிற்குள்
ஓடிவந்து, ஓட்டுப்பிறையில் செருகி வைத்திருந்த அரிவாளை எடுத்தான். அப்போது
அவன் கண்கள் ரத்தச் சிவப்பாய் இருந்தது. கை, கால்கள் எல்லாம் லேசாக பதற்றத்தில்
நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைய சொல்லப்போனா, அண்ணன் கையில் இருந்த
அருவா... ஒரு வாழைப்பழத்தைக்கூட சரியா வெட்டாது. ஆனா, அண்ணன் அதைப்பத்தி
எல்லாம் கவலைப்படாம துõக்கிட்டு அய்யனார் சாமிகணக்கா நின்னுக்கிட்டு இருந்தான்.
""டேய்... வேண்டாம்டா ராசா... உள்ள வாடா...'' அம்மா கெஞ்சிப் பார்த்தாள்.
""அம்மா...'' என்று ஒரு சத்தம்தான் அண்ணன் போட்டான். இதுவரை அந்தமாதிரி
அண்ணன் கோபப்பட்டு இதுவரை நான் பார்த்ததே இல்லை. டக்கென்று
அமைதியாகிப்போனாள் அம்மா.
ஆனால், அரிவாளை எடுக்க உள்ளே போன முத்தையா, இன்னும் வெளியே
வந்தபாடில்லை.
""டேய் நாயே வெளியே வாடா... நான் தெருவுலதான் நிக்கறேன். தைரியமான
ஆம்பளையா இருந்தா வெளியே வாடா...'' என்று அண்ணன் குரல் கொடுத்தான்.
எதிர் முனையில் எந்த சத்தமும் இல்லை. ஒரே நிசப்தம்... மையான அமைதி என்பார்களே,
அதேபோல் இருந்தது.
அண்ணன் முக்கால்மணிநேரமா அரிவாளோடு நின்று பார்த்தான். ஆனால், முத்தையா
வெளியே வந்தமாதிரி இல்ல... இப்போ அவன் வீட்டு முன்கதவு சாத்தப்பட்டிருந்தது.
""டேய்... உள்ள வாடா... அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு...'' என்று
அம்மா கண்ணீர் வடிக்க, வேறு வழியில்லாமல் வீட்டிற்குள் வந்தான் அண்ணன்.
அண்ணனைப் பார்த்து எனக்கு இப்போ பிரம்மிப்பா இருந்தது. இவ்வளவு பெரிய ரவுடிய
ஒத்த ஆளா நின்னுக்கிட்டு அண்ணன் எப்படி சமாளிச்சான்னு மனசுக்குள்ள ஒரு பூரிப்பு.
சாயங்காலம் அப்பா வந்தார். அப்பாவிடம் நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாய்
சொன்னாள் அம்மா. அண்ணனைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தார் அப்பா.
இப்போதும் முத்தையாவின் வீட்டுக் கதவு மூடிதான் இருந்தது.
""இவன் நமக்கு ஒத்தைக்கோர் பிள்ளை... அவன் பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்னு
அவன்ட்ட சண்டை போட்டுட்டான். நாளைக்கு இவன் ஒத்தசெத்தையா எங்கேயாவது
போய்ட்டு வரநேரத்துல அந்தப் பய வெட்டி போட்டுட்டான்னா, நமக்கு பிள்ள
கிடையாதுடி.''
""அப்படியெல்லாம் சொல்லாதீங்க...''
""உண்மைய சொல்லுதேன்... கசக்கத்தான் செய்யும். இவன பேசாம மதுரையில உங்க
அண்ணன் வீட்டுக்கு ரெண்டு மாசம் அனுப்பி வை. போய் இருந்துட்டு வரட்டும்.
அதுக்குள்ள... முத்தையாவப் பாத்து நான் சமாதானம் பேசிப் பாக்கறேன்'' என்று அப்பா
அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு காதில் விழுந்தது. ஆனால், அண்ணன்
எதுவும் பேசாமலே துõங்கிப் போனான்.
மறுநாள் காலை...
அம்மா வழக்கம்போல் முற்றத்தை சானம் போட்டு தெளிக்க வெளியே சென்றாள். நானும்
துணைக்கு வெளியே போனேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அடக்க முடியாத
சிரிப்பை வரவழைத்தது. எங்க வீட்டு சாக்கடையை ரொம்ப பொருப்பா மண்வெட்டியை
வைத்து வெட்டி ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான் முத்தையா.

No comments:

Post a Comment