Tuesday, June 14, 2011
எங்கே ஆதிமனிதன்?
இயற்கை தந்த கொடையில் ஆயிரம் ஆயிரம் விடைதெரியாத மர்மங்கள் ஒழிந்துகொண்டுதான் இருக்கின்றன. அது என்ன என்ற ஆராய்ச்சியில்தான், ஆராய்ச்சியாளர்களும் பகுத்தறிவாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். மர்மங்களும், அமானுஷ்யங்களும் இயற்கையில் மட்டுமல்ல, இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கிறது. அந்த வகையில் மனிதனும் ஒரு தேடலுக்கான கருதான். அவனும் அமானுஷ்யம் சார்ந்த ஒரு கேள்வியின் மையம்தான்.
நாம் வழிவழியாய் கேட்டுவந்த கதையின் கருவையும், கண்ட செய்திகளையும் வைத்துத்தான் இந்தக் கட்டுரையில் மனிதனைப்பற்றி ஆராயவிருக்கிறோம். சொல்லும் விஷயங்கள் அனைத்தும் கட்டுக்கதை அல்ல. வரலாறும் ஆராய்ச்சியும், புராணங்களும் தந்த செய்திகள்தான்.
தினப்படியான செய்தித்தாள்தான். வழக்கம்போல அரசியல், கொலை, கொள்ளை, கற்பனை, கற்பழிப்பு செய்திகளுக்கு ஊடே ஒரு கணம் நம் மனதில் இனம்புரியாத ஆச்சர்யத்தையும், சொல்லமுடியாத கேள்வியுமாய் தாங்கி வந்தது படத்துடன் வந்த அந்த செய்தி.
அது 2001 ஆம் ஆண்டு. அரபு நாட்டில் ஒரு மூலையில் மிகப்பெரிய மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாய் செய்தி. மனித எலும்புக்கூடு அருகே இன்றைய மனிதர்கள். 50லிருந்து 60 தற்கால மனிதர்களைச் சேர்த்தால் கிடைக்கும் மனித எடையில் இருந்தது, அந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு. அந்தப் படத்தைப் பார்ப்பதற்கே திகைப்பாய் இருந்தது. இது உண்மையா...? கிராபிக்ஸா...? புரியவில்லை. ஆனால், மனதை மட்டும் பிசைந்தது ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.
அதேபோல 2004ஆம் ஆண்டு, இந்தியாவில் பாலைவனப்பகுதியில் கிட்டத்தட்ட 13 மீட்டர் உயரத்தில் அதேபோல ஒரு மனித எலும்புக்கூடு. செய்தித்தாள் ஆரம்பித்து இணையதளம் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. ஏற்கனவே கேள்விப்பட்ட செய்தி. அப்படியானால், இது ஓரளவு உண்மையாய் இருக்கலாமா என்று திகைப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய உடல்வாகில் மனிதன் பூமியில் வாழ்ந்திருக்க முடியுமா? அப்படி வாழ்ந்திருந்தால், அவன் வாழ்வாதாரம் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை விரிந்துகொண்டே போக, இதெல்லாம் சும்மா கிராபிக்ஸ். கப்சா... பேப்பர் விக்கிறதுக்காக பண்ற டிரிக் என்ற பேச்சு மறுபக்கம். நாள்கள் ஓட ஓட அந்தச் செய்தியையும் காற்றோடு கலந்துபோய்விட்டது.
இவ்வளவு உயரத்தில், அசுர தோற்றத்தில் மனிதன் ஏன் வாழ்ந்திருக்கக்கூடாது? சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் நம்பும் நமக்கு, சாஸ்திரங்களிலும், புராணங்களில் கூறப்பட்ட கதாபாத்திரங்கள் ஏன் உண்மையாகக் இருக்கக்கூடாது...?
இலங்கை நாட்டில் கண்டியில் உளள அருங்காட்சியகத்தில் புத்தரின் பல், பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்லின் அளவை வைத்துப் பார்க்கும்போது, புத்தரின் உயரத்தை கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு உயரமானவரா? என்ற கேள்வி நம்முன் எழும். அதுமட்டுமல்லாமல் மாநில தலைநகரங்களில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் போர்த் தளவாடங்களைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய வாள், இவ்வளவு எடைகொண்ட கவச உடைகளை அணிந்துகொண்டு எப்படி மனிதர்கள் போரிட்டிருப்பார்கள்? இவ்வளவு எடையை தாங்கும் சக்தி அவர்களுக்கு இருந்தால், அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்ற கற்பனையும் நம் மனதில் எழாமல் இல்லை.
வேதத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் தோன்றிய இனம் நெஃபிலிம். இந்த இனத்தில் உள்ள மனிதர்கள் மிக மிக உயரமானவர்களாக இருந்ததாக விவிலியம் கூறுகிறது. அதற்குப் பின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இயற்கை மாற்றத்தினால், அத்தகைய இனம் கூண்டோடு அழிந்துபோய்விட்டது என்று ஆராய்ச்சி சொல்கிறது. அதற்குப் பின் இஸ்ரேல் நகரத்தில் கோலியாத் போன்ற மிக உ<யரம் கொண்ட மனிதன் சக மனிதர்களை அடித்துக்கொன்று துன்புறுத்திக்கொண்டே இருப்பான். அந்த அரக்க மனிதனை அதே நகரத்தில் வசித்து வரும் ஆடு மேய்க்கும் தாவீது என்ற சிறுவன் கவன் மூலம் அடித்துக்கொல்வதாய் கதை இருக்கும். இந்தக் கதை உண்மை என்பதை, பிரான்ஸ் நாட்டில் 13ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஓவியம் பரைசாற்றுகிறது.
இந்துப் புராணங்களில் உள்ள கதையைப் படிக்கும்போது தேவர்களை அசுரர்கள் அடித்து துன்புறுத்துவதாய் படித்திருப்போம். அசுரர்களும் மிக மிக உயரம் கொண்டவர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்லாமியத்தில், முகமது நபியும் மிக மிக உயரம் கொண்டவராகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான்,
ரோமானிய இனம், கிரேக்கம், பல்கேரியன், நார்ஸிய இனத்தவர்களின் மதப் புராணங்களில் தங்களின் கடவுள் மிக உயரம் கொண்டவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்.
நிஃப்லிம் இன மனிதர்கள் கோலியாத்தின் உயரத்தைவிட நான்கு மடங்காக இருந்திருக்கிறார்கள் என்றால், கோலியாத்தின் காலத்தில் நிஃப்லிம் இனத்தை விட உயரம் குறைந்துபோயிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இன்றைக்கு இருக்கும் மனிதனின் சராரசரி உயரம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும்...?
புராணங்களில் கூறப்பட்ட கதை மாந்தர்களும், கடவுளர்களும் மிக உயரமான மனிதர்களாக இருந்திருப்பார்களேயானால், அன்றைய வாழ்க்கை நிலையும் சமுதாயமும் எப்படி இருந்திருக்கும். அத்தகைய மனிதர்கள் எப்படி அழிந்துபோனார்கள். தற்போது கூட கோடியில் ஒன்று, உலகத்தில் ஏதோ ஒரு சில இடங்களில் 7.3 அடி உயர அதிசய மனிதர், 7.5 அடி உயர மனிதர் என்று நாம் படிக்கும் செய்திகள் கூட நம் மூதாதையர்களின் ஜீனின் தொட்டக்குறை விட்டக் குறைதானோ?
கதை, கற்பனை என்று நாம் நம்பிக்கொண்டிருந்த சில விஷயங்கள் நம் கண் முன் ஆதாரமாய் மண்ணைப் பிளந்து வந்துகொண்டிருக்க, பல்வேறு கேள்விகள் நம் எண்ணங்களிலும் கற்பனைகளிலும் புதிது புதிதாய் முளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், விடைகள் மட்டும் அமானுஷயமாய் நம்மை மிரட்டிக்கொண்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment