Tuesday, June 14, 2011

வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்





மனிதர்களை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற ஆய்வுப் பணிகள், தொடர்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த ஆய்வுக்கு எப்போதுமே ஒரு முடிவு கிடையாது. நாடுகளும் கண்டங்களும்தான் மாறுபடுமே தவிர தேடுதல்களும், ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

1938ஆம் ஆண்டு. சீனாவையும் திபெத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதி அது. இமயமலையில் ஒரு சிறிய பகுதியான பேயான் காரா உலா என்ற மலைச் சிகரம். சீ பு டீ என்ற சீன புதைபொருள் ஆராய்ச்சியாளர் தங்கள் குழுவினருடன் அந்த மலைப்பகுதியில் ஒரு மாத காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரின் ஆராய்ச்சிக்கான நோக்கம், மனிதர்களின் கலாசார முறைகளை தெரிந்துகொள்வது என்பது மட்டும்தான். ஆனால், அவரின் நோக்கத்திற்கான விடைகள் அந்த மலையில் கிடைத்தபாடில்லை. தேடுகிறார் தேடுகிறார் தேடிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் போதும் என்று சலிப்புத் தட்டி ஊருக்கு திரும்பிவிடலாம் என்று நினைக்கும் தருவாயில், அந்த மலைச் சிகரத்தில் ஒரு பகுதியில் குகை போன்ற ஒரு அமைப்பு கண்ணுக்கு தென்பட்டது. பார்ப்பதற்கு விசித்திரமான அந்த குகையைப் பார்த்ததும், சீ பு டீக்கு அந்த குகையைச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொள்ள, தங்கள் குழுவினருடன் அங்கு சென்றார்.

அந்த குகை இயற்கையாக தோன்றியது அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முற்பகுதியில் மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு குகையாகவே அது தோன்றியது. குகைக்குள் சென்றது, சீ பு டீயின் குழு. அந்த குகை ஒரு சிக்கலான ஒரு அமைப்பாகவே இருந்தது. சிறிய அளவிலான நீர் ஊற்று, பொருட்களை பாதுகாக்கும் அறைகள், சுவர்கள் முழுவதும் சதுரம் சதுரமாக அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அறை முழுவதும் உச்சக்கட்ட வெப்பம் சூழ்ந்திருந்தது.

குழுவினர் தங்கள் பணிகளை தொடங்கினார்கள். அந்த குகைப்பகுதியை சிறிய பள்ளமாக தோண்டியவுடன் குழுவினர் முகத்தில் பயங்கர அதிர்ச்சி. ஏனெனில் அவர்களின் கையில் சிக்கியது மனித எலும்புக்கூடு. ஒன்றல்ல இரண்டல்ல. கிட்டத்தட்ட நாற்பது எலும்புக்கூடுகள். அந்த எலும்புக்கூடுகள் சொல்லி வைத்தார்போல் 4 அடிக்கும் குறைவாக இருந்தது. அவற்றை தொடர்ந்து ஆய்வு ஆய்வு செய்தபோது, அந்த எலும்புக்கூடு மனிதர்கள் உடல் மிகவும் மெலிதானதாக, பலவீனமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவர்களின் தலைப் பகுதி மட்டும் உடல் பகுதியைவிட பெரிதாகவே இருந்திருக்கிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆராய்ச்சிக் குழுவினர், எலும்புக்கூடுகளுடன் கல்லினால் செதுக்கப்பட்ட வட்ட வடிவிலான 716 தட்டு போன்ற அமைப்பையும் கைப்பற்றியிருந்தார்கள். அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த தட்டுக்கள் அனைத்தும், அளவீட்டில் ஒரு சின்ன மாறுதல் கூட இல்லாமல் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. தட்டின் மையப்பகுதியில் அளவெடுத்து அமைக்கப்பட்டிருந்ததுபோல் ஒரு சிறிய அளவிலான ஓட்டை ஒன்று இருந்தது. இந்தத் தட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது, அது கிட்டத்தட்ட 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அந்தத் தட்டில் எகிப்து பிரமீட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் சாயலில் ஏதோ ஒரு விசித்திரமான எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த எழுத்துக்கள் என்னவென்று அவர்களால் சரியாக படிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 1962 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டாக்டர். சுவாம் உம் நூயி என்ற சீன ஆராய்ச்சியாளர், தட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை படித்துவிட்டு அதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியிருந்த விஷயம் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம். 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம் ஏதேனும் கோளாறினால், இந்த மலைச் சிகரத்தில் அவர்கள் தரை இறக்கியிருக்கலாம். தொடர்ந்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கலாம். திரும்பிச் செல்ல வழியில்லாததால் அவர்கள் இந்தக் குகையில் இருந்து, காலப்போக்கில் இறந்திருக்கலாம். அல்லது, பார்ப்பதற்கும் தோற்றத்திலும் மனித உருவத்திலிருந்து வித்தியாசமான அந்த தோற்றத்தைப் பார்த்ததும், சிகரத்தில் இருந்த பழங்குடியின மக்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை கொன்று இந்த மலைச் சிகரத்தில் புதைத்திருக்கலாம் என்று அனுமானமாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததோடு, வேற்றுக்கிரக வாசிகள்தான் அந்த மனிதர்கள் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார் நூயி.

இந்த ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பமாக 1968ஆம் ஆண்டு, செயிட்சூ என்ற ரஷிய ஆராய்ச்சியாளர் அங்கு கண்டெடுக்கப்பட்ட தட்டுக்களில் ஒன்றை தங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் நம்ப முடியாத ஆச்சர்யத்தை அந்த தட்டு செயிட்சூக்கு ஏற்படுத்தியது. ஏனெனில் அந்த தட்டு முற்றிலும் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிக சக்தி வாய்ந்த கோபால்ட் மற்றும் சில வேதிப்பொருட்கள் அதில் கலக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்தத் தட்டை அவர்கள் ஒரு சக்தியை புதுப்பித்துக்கொள்ளும் பேட்டரியாக அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். கண்டிப்பாக இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான். இத்தகைய அறிய மின் சீராக்கிச் சாதனம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூலோக வாசிகள் பயன்படுத்தியதாக எந்த வரலாறும் குறிப்பிடவில்லை. அப்படியானால் இந்தத் தட்டை மனிதர்களை விஞ்சிய ஒரு சக்திதான் உபயோகப்படுத்தியிருக்கும் என்று செயிட்சூவும் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, நூயி சொன்னதுபோல் இது வேற்றுக்கிரக வாசிகளாகவும் இருக்கலாம் என்றும் தன்னுடைய ஆராய்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் இந்த அகழ்வாராய்ச்சியும், அதைத் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனை விஞ்சிய சக்தி ஒன்ற இருப்பதை திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஆனால், அந்த சக்தி வேற்றுக்கிரக வாசிகள்தானா என்று நிரூபணம் செய்யவில்லை. அனுமானங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திய இந்த ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர்கள் வேற்றுக்கிரக வாசிகக்ஷிதானா?

இந்த கேள்விக்கான விடைதேடும் ஆராய்ச்சிகள் உலகத்தின் ஏதோ ஓர் பகுதியில் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. யார்கண்டது? இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முன்பாகக்கூட இதற்கான விடையை வெளிவந்திருக்கக் கூடும். ஏனெனில் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தானே பிரபஞ்சத்தில் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment