“ தம்பியோவ்.. சைக்காலஜில்லாம் படிச்சிருக்கீரு, உங்க சைக்காலஜிய வச்சிக்கிட்டு என்னுடைய ஞாபக மறதிக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியுமாவோய்...” என்று அய்யாசாமி என்னிடம் கேட்டதும், “என்ன அண்ணாச்சி இப்புடி கேட்டுப்புட்டியே... கண்டிப்பா சொல்றேன். ஆனா, எனக்கு ஒரு வாரம் டைம் வேணும்”னு சொன்னேன். ஒரு வார்த்தை ஏன் எதுக்குன்னு கேட்கல அய்யாசாமி. ஒருவேளை கேட்கறதுக்கு மறந்துபோயிருப்பாறோன்னு நினைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
சின்சியர் சிகாமணியாய் காலையில 3 மணிக்கெல்லாம் தூங்கி முழுச்சி, என்னுடைய பழைய புக்கையெல்லாம் புரட்டி புரட்டி படிச்சதுல அய்யாசாமி கண்ணுமாதிரி, எனக்கும் கண்ணு ரெண்டும் வீங்கிப்போச்சு. காலையில அம்மா என் கண்ணை பாத்துட்டு, “ஏல.. கிறுக்குப்பயல அதான் படிப்பு முடிஞ்சு போச்சே.. இன்னும் அதை வச்சி என்ன பண்ணிக்கிட்டு கிடக்க” என்று அம்மா கேட்டதும் அவமானமா போச்சு. இருந்தாலும் அய்யாசாமியின் ஞாபகமறதிய மனசுல வச்சிக்கிட்டு, வழக்கமா எதிர்த்துப் பேசற அம்மாகிட்ட ஒரு வார்த்தை பேசாம விருட்டுன்னு அய்யாசாமி வீட்டுக்கு போயிட்டேன்.
“அண்ணே.. அண்ணே.. ” என்று வீட்டு வாசலில் நின்னுக்கிட்டு கூவினேன். “தம்பி வாடே.. என்ன வெளிய நின்னுக்கிட்டு கத்திக்கிட்டு கிடக்க...” என்று குரலை மட்டும் வெளியில் அனுப்பி வைத்தார் அய்யாசாமி. “அண்ணே நீங்களே கூப்பிடுவியன்னு எதிர்பார்த்தேன். ரெண்டு நாள் ரோட்டுல எதிர்த்தால பார்த்தும் ஒரு வார்த்தை பேசலையே...!.”
“என்னடே சொல்ற.. என்ன கேட்கணும்னு எதிர்பார்த்த என்று அய்யாசாமி கேட்டதும், என்னண்ணே மறந்துபோச்சா.. ஞாபக சக்தி சம்பந்தமா என்கிட்டக்கூட கேட்டுருந்தீங்களே.. ”
“ஏ..ஏ.. ஆ..ஆமா.. சுத்தமா மறந்தே போயிட்டேண்டே” என்று அய்யாசாமி சொன்னதும்தான் அவரின் ஞாபகமறதியின் அளவீட்டை புரிந்துகொண்டேன். “அண்ணே ரொம்ப சின்ன விஷயம்.. நான் சொல்றதை குறிச்சு வச்சிக்கிட்டு அதுபடியே நடந்தீங்கண்ணா கண்டிப்பா ஞாபக சக்தி வளர்ந்திடும்” என்று சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் இடையூராக.. “சின்ராசு கொஞ்சம் நில்லுடே, நான் ஒண்ணும் அவ்வளவு ஸ்பீடா எழுதிக்கிட மாட்டேன். அதனால செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிடறேன்” என்று அய்யாசாமி சொன்னதும் கம்பீரமா காலரை தூக்கிவிட்டுக்கிட்டு, சேர்ல நிமிர்ந்து உட்கார்ந்தேன். “அண்ணே காலையில செய்யற விஷயம் என்னான்னு மதியம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. மதியம் நடக்கறத சாயங்காலம் யோசிச்சுப் பாருங்க.. இதை இப்படியே பத்து நாளைக்கு செஞ்சிக்கிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு ஞாபக சக்தி இம்ப்ரூவ் ஆயிடும்”னு நான் சொன்ன ஒவ்வொரு விளக்கத்தையும் அப்படியே செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிட்டாரு அய்யாசாமி. எனக்கோ பயங்கர சந்தோஷம்.. மேல் எல்லாம் புல் அறித்தவாறே வீட்டுக்கு நடந்து சென்றேன், நான் கொண்டு வந்த சைக்கிளை மறந்துவிட்டு.
பத்து நாள் கடந்திருக்கும். பஜாருக்கு நடந்து போய்கிட்டு இருந்தேன். எதிர்த்தமாதிரி அய்யாசாமி நடந்து வந்துக்கிட்டு இருந்தாரு. நம்ம ட்ரீட்மெண்டு எப்படி இருக்குன்னு அய்யாசாமிக்கிட்ட கேட்டு தெரிஞ்சிப்போம்னு ஒரு ஆர்வத்துல.. என்னுடைய நடையை குறைத்துக்கொண்டு அய்யாசாமிக்காக நின்றுகொண்டிருக்க, மனுஷன் கண்டுக்காம என்னை கடந்து நடந்து போய்கிட்டு இருந்தாரு. எனக்கு லேசாக அதிர்ச்சி.. “யோவ் அண்ணாச்சி.. ” என்று கூப்பிட்டதும்தான் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தார். “என்னடே சின்ராசு.. நடுரோட்ல டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கிறே என்ன விஷயம்..?”
“இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..” எரிச்சல் தொற்றிக்கொண்டது எனக்கு. “அண்ணே ஞாபக மறதிக்காக ட்ரீட்மெண்ட் குடுத்தேனே இப்போ எப்படி இருக்கு..? ”
“ஏ.. ஆமாடே பாத்தியா சுத்தமா மறந்தே போயிட்டேன். ஆமா நீ சொன்னதைக் கூட என் பொண்டாட்டி, கமலம் கூட டைரியில எழுதி வெச்சாளே.. சரிதானடே நான் சொல்றது” என்று கேட்ட அய்யாசாமியை, உன் ஞாபக சக்தியில் இடி விழ என்று மனதில் திட்டிக்கொண்டு, அவர் கூப்பிட்டது கூட காதில் வாங்காமல் கோபமாய் நடையைக் கட்டிக்கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment