Friday, March 26, 2010

குட்டிச்சுவர்!

வழக்கமா காலேஜ் முடிஞ்சு வந்தா, கலையரங்கு பக்கத்துல உள்ள குட்டிச் சுவத்துலதான்
நான், வழுக்கன், செல்வம், கோபால் நாலுபேரும் உட்கார்ந்துகிட்டு அரட்டை
அடிச்சிக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்னைக்கும் எதிர்பார்த்துப் போனேன்.
அந்தச் சுவர் காலியாய் கிடந்தது. எனக்கு ஆச்சர்யம் ஒருபுறம் இருந்தாலும், பசங்க
நம்மகிட்ட சொல்லாம போக மாட்டாங்கேளன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் அந்த
குட்டிச் சுவத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தேன். அந்த வழியா தண்ணி எடுக்கப் போன
அம்பிகா அக்காவும், கோகிலா அக்காவும், ""என்னடே... விக்னேஷ் உன் சேக்காலிங்க ஒரு
பயலுகளையும் காணோம்.''
""தெரியலைக்கா... உங்க தம்பி எங்க போயிருக்கான்? ஏதாவது வீட்ல சொன்னானா?''
என்று கேட்டேன் கோபாலின் அக்கா அம்பிகாவிடம்.
""ஏய்... சும்மா புழுகாதடே... உன்ட்ட சொல்லாததையா என்ட்ட சொல்லிட்டு
போயிடப்போறான். எல்லாப் பயலுகளும் கூட்டுக் களவானிங்கதானடே... ஏதோ நல்ல
பிள்ளையாட்டம் கேக்குற...'' என்று சொல்லிவிட்டு ஊர்க்கதையை அளந்தபடியே
செல்ல, வேண்டா வெறுப்பாய் வீட்டுக்கு வந்தேன்.
""என்ன... மகராசன் விளக்கு வைக்கறதுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்த மாதிரி தெரியுது.
கூட்டாளிங்க யாரும் இன்னிக்கு கிடைக்கலையோ'' என்று கேலி பேசினாள் அம்மா.
""அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா... செமஸ்டர் லீவு விட்டாச்சுல்ல. எல்லாப்
பயலுகளும் நாகர்கோயிலுக்கு சினிமாவுக்கு போயிருப்பானுக. நீதான் உள்ளூர்
தியேட்டருக்கே, அப்பாவதான் துணைக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்லுவ. அந்தால
தனியா நாகர்கோயில் வரைக்கும் சினிமாவுக்கு ஒத்தையில பசங்க கூட விட்டுட்டாலும்...
உலகம் அழிஞ்சுடாது'' என்று பதிலுக்குச் சொன்னேன்.
""ஏல... ராசா அந்த காவாலிப் பசங்களையெல்லாம், அவனுக அம்மாமாரு தலையில
தண்ணிய தெளிச்சு அனுப்பிட்டாங்க. நீ அப்படியால..., நீ எங்களுக்கு ஒத்தைக்கோரு
பிள்ள... எங்க ராசாடா நீ. அந்த காவாலிப்பயலுகக் கூட சேர்ந்து சுத்தறது கொஞ்சம் கூட
அப்பாவுக்குப் பிடிக்கல. இருந்தாலும், நீ சந்தோஷமா இருக்கீயேன்னுதான் நானும் விட்டு
வச்சிருக்கேன்'' என்றாள் அம்மா.
அம்மாவின் அர்ச்சனைகள் தொடர்ந்தாலும், எனக்கு இந்தப் பயலுக எங்க
போயிட்டாணுங்க... என்று கேள்விக் கணைகள் தலையைக் குடைந்தது.
மறுநாள்...

காலை விடிஞ்சதும்தான் தாமதம். வழுக்கன் வீட்டிற்கு ஓடினேன். அவன் பேரு பெருமாள்.
முன் நெற்றி ஏறியிருக்கும். அதனால்தான் அவனுக்கு வழுக்கன் என்ற பட்டபேரு. அவன்
அம்மா கூட அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.
""அம்மா... வழுக்கன் இருக்கானா...?'' என்று முற்றம் தெளித்துக்கொண்டிருந்த அவன்
அம்மாவிடம் கேட்டேன்.
""இல்லையேப்பா... காலையிலேயே உன் சேக்காலிங்க எல்லாம் வந்து, பெருமாளை
கூட்டிக்கிட்டு போயிட்டாங்களே. நீ போகலையா..?''
""எங்கம்மா...?'' என்று புரியாமல் கேட்டேன்.
""உனக்கு விஷயமே தெரியாதா... நம்ம ஊருக்கு புதுசா குங்பூ சொல்லிக்கொடுக்கற
மாஸ்டர் ஒருத்தர் வந்திருக்காரு. அவருக்கிட்ட குங்பூ கத்துக்கிடறதுக்காகத்தான் இவனுக
எல்லாம் போயிருக்காணுங்க'' என்று சொன்னதும், எனக்கு கஷ்டமாய் போனது. இந்த
விஷயத்தை எதுக்காக என்னிடம் இருந்து மறைக்கணும் என்ற கோபம். வரட்டும்...
அவனுங்ககிட்ட கேட்காம விடக்கூடாது. வழுக்கன் வீட்டு வாசலிலேயே நின்று
கொண்டிருந்தேன்.
பத்து மணி இருக்கும், வழுக்கன், கோபால், செல்வம் எல்லாரும் ஆளுக்கொரு சைக்கிளில்
வந்தார்கள். என்னைப் பார்த்ததும், ""பாருல... வீட்டு வாசல்ல சுடலை மாதிரி நிக்கான்''
என்று வழுக்கன் சொல்ல, ""லேய்... ஏதோ ஒரு காட்டத்துலதாண்டே நிக்கறான்'' என்றான்
கோபால்.
""என்னடே விக்னேஷ்... எப்போ வந்த...?''
""ஏல பேசாத. நீங்க எல்லாம் ப்ரண்ட்ஸாடே... ஒரு வார்த்தை என்ட்ட சொல்லாம நீங்க
மட்டும் குங்பூ கத்துக்கப் போயிருக்கீங்க.''
""ஆமா... சொன்னா மட்டும் அந்தால புள்ள வந்துடுவான். இப்ப வரைக்கும், உங்கம்மா
முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தான் அலையற... சும்மா பேசாதடே'' என்று கோபால்
சொல்ல, மூன்று பேரும் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான்.
நான் ஒத்தைக்கு ஒரு பையன் என்பதால், வீட்டில் விளையாடக்கூட அதிகம் வெளியே
என்னை விடமாட்டார்கள்.
""கோபால்... மாஸ்டர் எப்படிடே... நல்லா சொல்லித் தாறாரா?'' என்று கோபத்தை ஒதுக்கி
வைத்துவிட்டு ஆர்வத்துடன் கேட்டேன்.
""சும்மா சொல்லக்கூடாது விக்கி, சும்மா ஜாக்கி சான் மாதிரி இருக்கார்டே... ஒரே நேரத்துல
6 பேரை அடிக்கார். நாங்கல்லாம் மிரண்டுட்டோம். அவரு முடியப் பார்த்தேன்னா...
அவ்வளவு நீளம் இருக்குடே...'' என்று கோபால் புகழ்ந்து தள்ள, ""ஏல விக்கி...
இன்னொரு முக்கியமான விஷயம்... குங்பூ கத்துக்கிடருத்து நேரடியா சீனாவுக்கே
போயிட்டு வந்திருக்காருடே...''
""எதை வச்சு இவ்வளவு கரெக்ட்டா சொல்லுத...?'' என்று அப்பாவியாய் கேட்டேன்.
""ஜாக்கிசான் கூட நின்னு போட்டோ எடுத்திருக்காருன்னா... அது பொய்யாடே'' என்று
அகல கண்களை விரித்தான் வழுக்கன். அவர்கள் சொல்ல சொல்ல மனதுக்குள் பொறாமை
எழுந்தாலும் அடக்கிக்கொண்டு, ஆற்றாமை தாங்காமல் அவர்களிடம் இருந்து
விடைபெற்று வீட்டிற்கு வந்தேன்.
இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும்.
கோபால், வழுக்கன், செல்வம் மூன்று பேர்களின் நடை, உடை பாவனையே
மாறியிருந்தது. நீளமாய் முடி வளர்ப்பதும், டைட்டாய் டீ சர்ட் போடுவதுமாய் எப்போது
பார்த்தாலும் குங்பூ மாஸ்டரைப் பற்றி புகழ்வதுதான் அவர்களின் வேலையே
என்பதுபோல் ஆகிவிட்டது.
இதற்கிடையில் குங்பூ மாஸ்டருக்குப் பிறந்தநாளாம். ஊர் முழுக்க இவனுங்களே செலவு
செய்து போஸ்டர் எல்லாம் ஒட்டியிருந்தார்கள். இதுபோக உள்ளூர் தியேட்டரில் ஆறு
பேரை ஒருத்தராய் நின்று அடித்து துவம்சம் செய்வது போல் சிலேடு வேறு. எனக்கு
எரிச்சலாய் வந்தது. இப்போதெல்லாம் கலையரங்கு குட்டிச்சுவர் காலியாய் கிடந்தது.
அவர்களுடனான அரட்டை முற்றிலும் குறைந்துபோய் இருந்தது. இது என் அம்மாவுக்கு
மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்கு கஷ்டமாய் இருந்தது.
மூன்றாவது மாதம் ஆரம்பம். ஒரு நாள் மாலை... பால் வாங்குவதற்காக கலையரங்கம்
பக்கம் போயிருந்தேன். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மூஞ்சை
தொங்கப்போட்டுக்கொண்டு, மூன்று பேரும் குட்டிச்சுவரில் அமர்ந்திருந்தனர். எனக்கு
தாங்க முடியாத மகிழ்ச்சி.
""என்னடே... இன்னிக்கு மூணுபேரும் குங்பூ கிளாஸ்க்கு போகலையா...?'' என்று
சிரித்துக்கொண்டே கேட்டேன்.
""ஏல... இவன் தெரிஞ்சிக்கிட்டே நம்மள கிண்டல் பண்ணுதான்'' என்றான் கோபால்.
எனக்கு ஒன்றும் புரியலை. ""என்னடே சொல்லுதீங்க... என்னடே விஷயம்...'' என்று
சீரியஸானேன்.
""ஏல... உனக்கு உண்மையிலேயே விஷயம் தெரியாதா...?''
""என்னடே விஷயம்... சத்தியமாய் தெரியாது சொல்லுங்கடே'' என்றேன்.
""எங்க மாஸ்டரை ஆஸ்பத்திரியிலே வச்சிருக்காங்க...'' என்று தலையை குனிந்தபடியே
சொன்னான் பெருமாள்.
""என்னடே சொல்றீங்க...?'' எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
""நேத்தைக்கு சாயங்காலம்... கிளாஸ் முடிஞ்சி நாங்கல்லாம் வந்துட்டோம். அப்போ அந்த
வழியா நம்ம காலேஜ் பொண்ணுங்க ரெண்டுபேர் போயிருக்காங்க... எங்க மாஸ்டர்,
அந்தப் பொண்ணுங்களை ஏதோ கிண்டல் பண்ணாராம். உடனே அந்தப் பொண்ணுங்க...
வீட்லபோய் விஷயத்தைச் சொல்ல, அந்தப் பொண்ணுங்களோட தம்பி, ரெண்டு மூணு
பேர் வந்து மாஸ்டரை நையப் புடைச்சிட்டாங்களாம். இப்போ மாஸ்டர் காயத்தோட
ஆஸ்பிட்டல்ல கிடக்கார்'' என்று மூஞ்சை தொங்கப் போட்டுக்கொண்டே பதில்
சொன்னார்கள் நண்பர்கள் மூவரும்.
""ஆறுபேரை ஒத்தையில நின்னு சமாளிக்கக்கூடியவர ரெண்டு பேரு எப்படி வந்து
அடிச்சிட்டுப் போனாங்கன்னு புரியவே இல்லை...'' என்று வழுக்கன் சோகமாய்
சொல்லிக்கொண்டே முகவாயைத் தடவ எனக்கு குபுக்குன்னு சிரிப்பு வந்தது.

No comments:

Post a Comment