Friday, March 12, 2010
ராங் நம்பர்!
அன்றைக்கு வீக்கெண்ட். பேச்சுலரான நானும், பேமிலி மேனான ராஜேஷûம் திக்கஸ்ட் பிரண்ட்ஸ். ரெண்டு பேருமே ஒரு பத்திரிகையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம்.
எனக்கு சொந்த ஊர் மதுரைப் பக்கம் அருப்புக்கோட்டை. ராஜேஷûக்கும் மதுரைதான். அதுதான் எங்கள் நட்புக்கான அடித்தளம்னு கூட சொல்லலாம்.
ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு நாலு மணிக்கெல்லாம் நானும், ராஜேஷûம் ஆபீஸிலிருந்து வெளியே வந்தோம். “டேய் கண்ணா... அப்படியே மயிலாப்பூர் வரை ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோமா...”
“யாரு... மூர்த்திய பார்க்கறதுக்கா...”
“ஆமாண்டா...”
“அட போங்கண்ணே... உங்களுக்கு ஒரு வேலையே கிடையாது. அவன் எப்பவாவது நம்மளத் தேடி வர்றானா...? ஏண்ணே... நீ மட்டும் இப்படி இருக்க?”
“டேய்... மதுரையிலிருந்து பொழைக்க வந்திருக்கோம். நாலு பேரை தெரிஞ்சி வச்சிக்கிட்டாத்தாண்டா நம்ம பீல்டுக்கு கரெக்ட்டா இருக்கும். கோழி கெடையில கிடக்கறமாதிரி எப்பப் பார்த்தாலும், ரூமிலேயே அடக்காத்து கிடக்கக்கூடாது. இப்படி நாலு பிரண்ட்ஸ பார்த்தாதான் பழக்கம் கிடைக்கும்.”
“அடப் போங்கண்ணே... இப்படியேத்தான் சொல்லிக்கிட்டு திரியறீங்க... இன்னிக்கு வரைக்கும் ஒருத்தரையும் கண்ல காட்டமாட்டேக்கறீங்க... மூர்த்தி அவனத் தெரியும் இவனத் தெரியும்னு சொல்றானேத் தவிர ஒருத்தனையாவது இன்னிக்கு வரைக்கும் கண்ல காட்டிருப்பானா... அவன் மூஞ்சே எனக்குப் பிடிக்கலண்ணே... பிராடுக்காரனா தெரியறான்.” “சரிடா கண்ணா... இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் அவனைப் போய் பார்த்துட்டு வருவோம். கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் இல்ல...”
“டைம் பாஸாகிறதுக்கு பதினைஞ்சு ரூபா செலவழிக்கணும்மாண்ணே...” என்று தலையில் அடித்துக்கொண்டேன்.
அரைமணி நேரம் பஸ் பயணத்திற்கு பிறகு மயிலாப்பூர் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பத்து நிமிஷம் நடந்தால் மூர்த்தி ஆபீஸ். கழுகுக்கு மூக்குல வியர்க்கற மாதிரி எப்படித்தான் தெரியுமோ தெரியல... கரெக்ட்டா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் மூர்த்தி.
“யேய் வாப்பா ராஜேஷ்... வீக்கெண்ட் ஏதாவது ஸ்பெஷல் உண்டா?” என்று கண்ணடித்தான் மூர்த்தி. அவனைப் பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கொண்டு வந்தது. ஆனால், இதுவரை மூர்த்தி எனக்கு எந்தவித கெடுதலோ, துரோகமோ செய்துவிடவில்லை. இருந்தாலும், என்னவோ தெரியல. என்ன மாயமோ தெரியல... அவனப் பார்த்தாலே எனக்கு ஆகறதுல்ல.
“இல்ல மூர்த்தி சும்மாத்தான் வந்தோம். நீ வேற எங்கயும் வெளியே போறீயா...?”
“இல்லப்பா... வீட்டுக்குத்தான்...”
“டீ சாப்ட்றீங்களா...”
நான் வேண்டாம் என்று தலையாட்டுவதற்குள், ராஜேஷ் “வாங்குப்பா” என்று முந்திக்கொண்டான்.
எனக்கும் சேர்த்து மூர்த்தி மூன்று டீக்கு ஆர்டர் கொடுத்தான். மூர்த்தி எங்களுக்கு மெட்ராஸுல தெரிஞ்ச ஒரே நண்பன் நீதான். ஏதாவது பெரியாட்கள் பழக்கம் இருந்துச்சுன்னா... எங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்தி வெச்சேன்னா... பின்னாடி எங்களுக்கும் கொஞ்சம் வசதியா இருக்கும்...” என்று ராஜேஷ் லேசாக பிட்டைப் போட்டான்.
“உமா மகேஷ்வரன் தெரியுமா... பெரிய ரைட்டர். நம்ம பிரண்டுதான். ஏற்கனவே எங்க பத்திரிகையில சப் எடிட்டரா இருந்தவர்தான். போய் பார்த்துட்டு வர்றீங்களா...? நல்ல பேசுவாரப்பா... போயிட்டு வாங்க” என்று அவர் செல் நம்பரை எங்களுக்கு தந்ததோடு, அவருக்கும் எங்கள் முன்னாடியே போன் செய்து நாங்க வரப்போறதா சொன்னார்.
எனக்கு அப்போதான் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டுச்சு. உமா மகேஷ்வரன் பெரிய எழுத்தாளர். அவருடைய கதைகள் நிறைய படிச்சிருக்கேன். அவர் மூர்த்தியோட பிரண்டா... நம்பவே முடியலை. இருந்தாலும், அவன் அறிமுகப்படுத்தறேன் என்று சொன்னதும், என்னையும் அறியாமல் அவனிடம் நன்றியைச் சொன்னேன்.
“ஆமா மூர்த்தி அவரு வீடு எங்க இருக்கு...?”
“வடபழனி பக்கத்துலதான்” என்று முழு முகவரியையும் தந்தான். மூர்த்தியிடம் விடைபெற்றுக்கொண்டு, பஸ்சில் ஏறினோம். அப்பவே மணி ஆறை தொட்டிருந்தது. டிராப்பிக்கில் பஸ் மிதந்து கடைசியில் வடபழனியில் போய் சேருவதற்கு எட்டு ஆகிவிட்டது. பஸ்சில் இறங்கியதும் உமாவிற்கு போன் செய்தான் ராஜேஷ்.
“சார்... நாங்க இப்போ வடபழனி பஸ்ஸ்டாண்டில் நிக்கறோம்.”
“அப்படியே நடந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ஸ்ட்ரைட்டா வந்திங்கேண்ணா ஒரு முட்டு சந்து வரும். அங்க வந்துருங்க...” என்று எதிர்முனையில் பேசிய எழுத்தாளர் போனை துண்டித்தார்.
நாங்களும் ஒவ்வொருவரிடம் விசாரித்து, வெக்கு வெக்குன்னு நடந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
ரெண்டு பேருக்கும் வியர்த்துக் கொட்டியிருந்தது. எனக்கோ உமாவை பார்ப்பதற்கான ஆர்வம் இன்னும் அதிகமாய் இருந்தது. அவர் எழுதிய நுõல்களை மெல்லமாய் ஞாபகப்படுத்திப்பார்த்தேன். இரண்டு மூன்று நாவல்களின் பெயர்கள்தான் அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தது. ஐயய்யோ இப்படி மறந்துபோச்சே... என்று அந்த நேரத்தில் நொந்துகொண்டதோடு என்னவெல்லாம் பேசவேண்டும் என்று ராஜேஷûக்கு தெரியாமல் குறிப்பெடுத்துக்கொண்டேன்.
ராஜேஷ் ஆர்வமாய் போனை எடுத்து ரீடயல் அழுத்தினார். முகத்தில் லேசான கலவரம்...
எனக்கு ஒன்றும் புரியலை. “என்னண்ணே ஆச்சு...” என்றேன் லேசான பதட்டத்துடன்.
“டேய் கண்ணா... போன் சுவிட்ச் ஆப்னு வருதுடா...”
“அண்ணே... ரெண்டு மூணு தடவை உடாம ட்ரை பண்ணுங்கண்ணே கிடைக்கும். நெட்வொர்க் கிடைக்கலன்னாலும் இப்படித்தான் இருக்கும்” நான் ஆறுதல் சொன்னேன்.
ராஜேஷ் விடாமல் ரீ டயல் செய்துப் பார்த்தார்... “இல்லடா கண்ணா... சுவிட்ச் ஆப்தான் பண்ணி வச்சிருக்கான்” என்று எழுத்தாளர் மீதான மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.
அந்தப் பகுதியில் அவரைப் பற்றி விசாரிச்சுப் பார்த்தோம்... யாருக்கும் அவரைப் பற்றி தெரியலை.
அரைமணி நேரம் அந்த இடத்திலேயே வெயிட் பண்ணி பார்த்துவிட்டு, என்னுடைய செல்போனில் இருந்து தொடர்பு கொண்டேன். அதிசயம்... அவர்தான் போனை எடுத்தார்.
“சார்... நாங்க மூர்த்தியோட பிரண்ட்ஸ். நீங்க சொன்ன எடத்துலதான் நிற்கிறோம். எப்படி சார் வரணும்”னு சொல்லி முடிப்பதற்குள்ளேயே...
“யோவ் மண்டையில அறிவில்ல... நேரங்கெட்ட நேரத்துலயா வீட்டுக்கு வர்றது...”
“சார்... உங்ககிட்ட கேட்டுட்டுத்தானே...” என்று இழுத்தேன்.
“படிச்சவன்தானே... வீக்கெண்ட் டைம்ல அர்த்த ராத்திரியிலே வந்தா தொந்தரவு கொடுப்பாங்க...?” என்று டக்கென்று போனை கட் செய்தார்.
எனக்கு இப்போ முன்பை விட வியர்த்துக் கொட்டியது. மணியைப் பார்த்தேன் மணி சரியாக எட்டரை ஆகியிருந்தது. இதுவா இவனுக்கு அர்த்த ராத்திரி... கோபம் கண்களில் சிவப்பு நிறத்தில் தெரிந்ததை, ராஜேஷ் புரிந்து கொண்டார்.
“என்னடா கண்ணா...”
“வாண்ணே போலாம்... நல்லா ஆளாப் பார்த்து அனுப்பி வச்சான் மூர்த்தி.”
“ஏண்ணே... இவனல்லாம் ஒரு படைப்பாளியாண்ணே... வயசு ஆக ஆக பக்குவப்படணும். கட்டிப்போட்ட நாய் மாதிரி குரைக்கறான். நாய்ப்பய...” என்னால் ஆத்திரத்தை அடக்க முடியல.
“என்னடா ஆச்சு...” என்று மெதுவாய் கேட்டார் ராஜேஷ்.
“பின்ன எண்ணண்ணே... அவன்தான நம்மள வரச்சொன்னான். மயிலாப்பூர்ல இருந்து வடபழனிக்கு பஸ்சுல வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு அவனுக்கு தெரியாது. அப்பவே வரவேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்னு சொன்னா... நம்ம வந்துருப்பமாண்ணே... தீவட்டிப் பய... இவன விடக்கூடாதுண்ணே...”
“சரி... வுடுடா. வீக்கெண்ட்ல தண்ணிய போட்டு மப்புல கெடப்பான். இந்த நேரத்துல வர்றாங்களேன்னு எரிச்சல்ல பேசியிருக்கான் விடுடா...”
ராஜேஷ் அமைதிப்படுத்தினாலும் என்னால் அடக்க முடியலை. இவனை விடக்கூடாது. பெரிய எழுத்தாளன்னா... அவன் திமிரை அவனோட வச்சிக்கணும். என்ன பண்ணப்போறேன் பாரு... என்று மனதுக்குள் உக்கிரம் இன்னும் அதிகரித்தது.
“சரிடா வா போலாம்...”
“இல்லண்ணே... நீ போ... மனசு சரியில்ல நான் மெதுவா வர்றேன்.” என்று ராஜேஷை அனுப்பிவிட்டு வேகவேகமாக அருகில் இருந்த கட்டண கழிப்பிடத்திற்கு சென்றேன். உமா என்ற அவனின் பாதிப் பெயரை எழுதி ‘காண்டக்ட் மீ ’என்று அவனின் செல் நம்பரை எழுதிவிட்டு வந்தேன். அந்த கட்டண கழிப்பிடத்திற்கு நேர் எதிர்புறம் டாஸ்மாக் வேறு இருந்தது. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அவனை ஏதோ பழிதீர்த்த சந்தோஷத்தில் ரூமிற்கு வந்தேன்.
மறுவாரம்... அதே வீக்கெண்ட். அதே மயிலாப்பூர். மூர்த்தி வழக்கம்போல ராஜேஷிற்காக காத்திருக்க, ராஜேஷ் எழுத்தாளர் செய்த லீலைகள் எல்லாவற்றையும் சொன்னார். மூர்த்தி முகத்திலும் லேசான கலவரம். அவரை திட்டுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள... ‘இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்ற தகவல் வந்தது. மூர்த்தியும், ராஜேஷûம் திருதிருவென்று முழிக்க. எனக்கு எல்லா அர்த்தமும் புரிந்து மனதிற்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment