Sunday, March 28, 2010
என்ன செய்யப் போகிறோம்...?
கடந்த மார்ச் 15ம் தேதி... பாராளுமன்றத்தில் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் செய்யப்படவிருந்து, பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மசோதா தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இதுவும் சிவில் அணுசக்தி ஒப்பந்தந்தைப்போல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கையெழுத்தானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அது என்ன... அணுவிபத்து நஷ்டஈடு மசோதா...? அமெரிக்கா சார்பில் இந்தியாவில் அணுமின் நிலையம் ஆரம்பிப்பார்கள். ஆனால், அணுமின் நிலைய கட்டுமான குறைகளாலோ, அல்லது ஏதாவது விஷவாயு கசிவால் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கு எவ்விதமான நஷ்டஈடும் அமெரிக்கா தராது. இதற்கு சம்மதித்து இந்தியா கையெழுத்து இட வேண்டும். இதுதான் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா.
சில அமெரிக்க நிறுவனங்களின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனை காவு கொடுக்கும் மறைமுகதிட்டம்தான் இது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
2008ம் ஆண்டில் இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பலகட்ட பாராளுமன்றம் ஒத்திவைப்பு, போராட்டங்களுக்கு இடையே கையெழுத்தானது. மசோதா மட்டுமே கையெழுத்தானது. ஆனால், இது நடைமுறைக்கு வரவேண்டுமானால்,
அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் ஆக வேண்டும்.
பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அணு உலைகளை அமைத்திருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த நாடுகள் இம்மாதிரியான ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்லி எந்த ஒரு நிபந்தனையையும் இதுவரை விதிக்கவில்லை.
ஆனால், அமெரிக்கா மட்டும் நிபந்தனை விதிப்பது, இந்தியாவின் தார்மீக உரிமையில் கையை வைப்பதற்காகத்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து.
மிக அரும்பாடுபட்டு சிவில் அனுசக்தி ஒப்பந்தத்தை பல பேராட்டங்களுக்கு இடையே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிறைவேற்றியுள்ளது. அதேபோல அனுசக்தி நஷ்டஈடு மசோதாவையும் நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு தன்மானப் பிரச்னை. இதை நிறைவேற்றாவிட்டால்,
அமெரிக்கா முன் இவர்கள் அவமானப்பட்டு நிற்கவேண்டியதிருக்கும்.
இவர்கள் அவமானப்படாமல் இருப்பதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனில் கைவைப்பது எவ்வகையில் நியாயம்? போபால் விஷவாயுவால் இறந்தவர்களின் பட்டியலை மறந்துவிட்டதா நமது மத்திய அரசு?
இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் நிலை என்ன? என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
இலங்கைத் தமிழர் பிரச்னை முதல், காவிரி பிரச்னை வரை முதல்வர் அறிக்கை விடுவதும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதுவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு எதிரான இந்த மசோதா தாக்கல் விவகாரத்தில்
தம்முடைய பலத்த எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய கடமை, நம் முதல்வருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், நடக்கும் சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, நாட்டுப் பற்றைவிட காங்கிரஸ் பற்றுதான் அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. இல்லையென்றால் அவர்கள் சார்ந்த தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் குறைந்தபட்சம் இந்தச் செய்தியையாவது வெளியிட்டு இருக்கலாமே!.
ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே நாட்டுக்கு எதிரான இந்தப் பிரச்னைக்குறிய செய்தியை வெளியிட்டது. நாட்டு மக்களின் அறியாமையை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நித்யானந்தா விவகாரத்தை துவம்சம் செய்த முன்னணி வார இதழ்கள் கூட இந்தச் செய்தியை வெளியிடாதது, ஏனோ...?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment