எனர்ஜி கார்னர்!
வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் விரும்புவதும், வேண்டுவதும் ஒன்றை மட்டும்தான். அது எது தெரியுமா... வெற்றி. தான் எதைத் தொட்டாலும் வெற்றி பெற்றுவிட வேண்டும். இந்த எண்ணம் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.
ஆனால், இந்த வெற்றி என்ற இந்தக் கனி எல்லாருக்கும் உடனடியாக கிடைத்து விடுகிறதா... என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
சிலருக்கு உடனே... சிலருக்கு கொஞ்ச நாள் கழித்து... ஆனால், சிலருக்கோ இந்த வெற்றிக்காக போராட்டம் மட்டுமே வாழ்வின் பாதி நாளை குடித்துவிடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் முதுமை மட்டுமே மிஞ்சுகிறது. வெற்றி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. நான் சொல்வது சரிதானே...!
வெற்றி என்பதை ஒருவர் சுவைத்துவிட்டால் போதும், இவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா... என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவோம்.
ஆனால், அவரிடம் போய்க் கேளுங்கள்... அதை அடைய அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அப்போது உங்களுக்குத் தெரியும்.
சமீபத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். ரொம்பவும் ஏழ்மையானவர்தான். ஆனால் திறமைசாலி. எந்த வித கெட்டப் பழக்க வழக்கங்களும் கிடையாது. நம்மில் இருக்கும் பலரின் குணாதிசயங்களின் அடையாளங்களாக அவர் ஒருவர் இருந்தார்.
இன்னும் வாழ்க்கையை வெல்வதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறார். என்றாவது ஒரு நாள் நானும் இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாவேன். என்ற தன்னம்பிக்கை ரேகை இன்னும் அவருள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இதே எண்ணம்தானே நமக்குள்ளும் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.
அவர் ஒரு திறமைசாலி என்று சொன்னேனே... முதலில் அதற்கு வருகிறேன். அந்த நண்பர் காகிதத்தில் அணிகலன்கள் செய்து வருகிறார். ஆங்கிலத்தில் அதை ‘பேப்பர் ஜுவல்ஸ்’ என்பார்கள். பலபேருக்கு தெரியாத இந்த அணிகலன்கள் வெளிநாட்டில் அவ்வளவு கிராக்கி.
இங்கே அவர் அந்த அணிகலன்களை வெறும் ஐம்பது ரூபாய்க்கும், நுõறு ரூபாய்க்கும் விற்று வருகிறார். கடும் உழைப்பு, கடும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவ்வளவு இருந்தும், அவர் இன்னும் நகரத்தில் ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் தெரியாத இடத்தில் ஐம்பதுக்கும், நுõறுக்கும் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்.
இதில் தவறு யாருடையது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தான் தயாரிக்கும் பொருளின் தேவை சந்தையில் இப்போது எப்படி இருக்கிறது? யார் விரும்புகிறார்கள். இதை எந்த வடிவத்தில் வடிவமைத்தால், சந்தைப் படுத்தல் இன்னும் எளிமையாக இருக்கும்? அல்லது தன்னுடைய திறமைகளுக்கான அங்கீகாரம் தருவதற்கு யாரும் தயாராக இருக்கிறார்களா...? என்பதைப் பற்றிய தேடலுக்கு அந்த நண்பர் தயாராகி இருந்தால், இன்று அவர் நகரத்தின் ஏதாவது ஒரு மூலையில் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்குமா...? மாட மாளிகை கட்டி, காரில் அல்லவா பவனி வந்திருப்பார்.
அவரும் சமுதாயத்தில் முக்கிய இடத்தை அடைந்திருப்பார் அல்லவா?
முன்பு சென்னையிலிருந்து டில்லிக்கு செல்லவேண்டுமானால், மூன்று நாட்கள் ஆகும். ஆனால், இன்று அப்படியா... இன்டர்நெட், ஊடகம், விஞ்ஞான வளர்ச்சி என்று இப்போது உலகம் சுருங்கிவிட்டது. நம்முடைய தேவைகளுக்கான ஆதாரங்கள் அனைத்தும் நம் கைக்கு எட்டும் துõரத்தில்தான் இருக்கிறது. ஆனால்... இவை எவையற்றுமையே தேடாமல், வாய்ப்பு தன்னைத் தேடி வரும் என்று அமர்ந்திருந்தால், அது எப்படி...?
உண்மையான உழைப்பு, நேர்மை இருந்து என்ன பயன்? வாய்ப்புகளை தேடி அலைய அவர் துணியவில்லையே... ஏன்? இந்தக் கேள்விக்கு ‘தான்’ என்ற அகந்தை, அகங்காரம் என்று ஏதாவது ஒன்றை பொருளாக வைத்துக்கொள்ளலாமா? இல்லவே இல்லை. இதற்கு இவைகள் காரணம் இல்லை. அப்போது வேறு என்னதான் காரணம்... ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். அதற்கு ஒரே விடை... கூச்சம்!
இந்த தடைக்கல்தான் நம் வளர்ச்சியின் எல்லா பக்கங்களையும் மூடிக்கொண்டு விடுகிறது. தன்னிடம் உள்ள திறமைகளை மற்றவர்களிடம் எடுத்துச் சென்று காட்டி, வாய்ப்புத் தேடி அலைந்தால், தன்னுடைய திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற தேவையில்லா அச்சம்தான், நம்மில் பெரிய பெரிய திறமைசாலிகளை முடக்கிப்போட்டுள்ளது.
உங்கள் திறமைகளை எடுத்துச்சொல்ல, உங்களைப் பற்றி சிறப்பாக சொல்ல இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்? யோசித்துப் பாருங்கள். யாரும் இல்லை... என்ற பதில்தான் வரும்.
யாரும் இல்லாத போது இந்த தயக்கத்தை இந்த கூச்சத்தை உடைத்து வெளியே வர வேண்டாமா?. திறமைகளைச் சொல்லி வாய்ப்புகளைக் கேளுங்கள். சில சமயங்களில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். அவமதிக்கப்படலாம். உங்கள் திறமைகள் நிராகரிக்கப்படலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் வெற்றி எட்டும் துõரத்தில்தான் இருக்கிறது. கண்டிப்பாக தொட்டுவிடுவீர்கள். அதைத் தொட்டப்பின், நீங்கள் சந்தித்த ஏமாற்றமும், அவமானமும், நிராகரிப்பும் உங்கள் துச்சமாய் தள்ளி நிற்கும். அது மற்றவர்களுக்கு படிப்பினையை சொல்லித்தரும் ஆசானாக இருக்கும். இன்று சமுதாயத்தில் பேரும், புகழும் பெற்றவர்களின் கதைகள் எல்லாம் ஏமாற்றம், அவமானம், நிராகரிப்பு இவற்றை எல்லாம் தாண்டி வந்ததுதான் என்பதை என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் படித்த ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு அரசனுக்கு ஒரு ஓவியன் எழுதிய கடிதம்...
‘யுத்த தளவாடங்கள் தயாரிப்பதில் தம்மை விற்பன்னர்களாகக் கூறிக்கொள்பவர்களின் தயாரிப்புகளைப் பார்த்தாலே அவை எவ்வளவு சாதாரணம் என்பது விளங்கும்.
மிகவும் லேசானதும் வலுவானதுமான பாலங்கள் என்னால் உருவாக்க இயலும். அவற்றை எளிதில் எடுத்துச் செல்லலாம், எதிரிகளிடமிருந்து தப்பிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்; தீயினாலும் யுத்தத்தினாலும் அழிக்க முடியாதபடி பாதுகாப்பானவை; கொண்டுபோய் நிர்மாணிப்பது எளிமையானது மற்றும் வசதியானது. அத்துடன் எதிரியின் பாலங்களை அழிப்பதற்கும் எரிப்பதற்குமான வழிவகைகளும் நான் வடிவமைத்த கருவிகள் செய்யும்.
ஓரிடம் முற்றுகையிடப்படும்போது, பதுங்கு குழிகளிலிருந்து தண்ணீரை அகற்றுவது எப்படி, தினுசு தினுசான பாலங்களை உருவாக்குவது எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியும்.
ஓரிடத்தை முற்றுகை இடுகையில் குண்டு வீசித்தாக்குதல் சாத்தியமற்றது; அப்படியான அரண்கள் பாறை மீது இருப்பினும் அழிப்பதற்கான வழிமுறைகள் என்னிடம் உள்ளன.
கடலில் நிகழும் யுத்தங்களுக்கேற்ற எல்லாவிதமான இயந்திரங்களும் உள்ளன; பெரிய துப்பாக்கிகளின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கும் மரக்கலன்களும் இருக்கின்றன.
குறிப்பிட்ட இடத்திற்கு, ஆற்றினுõடே கடந்து செல்வதாயினும், செல்லும் வகையில் ரகசியமானதும் சுற்றி வளைந்து போவதுமான சுரங்க வழிகளை ஏற்படுத்தும் உபாயங்களும் என்னிடம் கைவசம் உள்ளன.
பாதுகாப்பானதும், தாக்க முடியாததுமான எனது தேர்களின் பின்வரும் தரைப்படை, தங்குதடை இல்லாமல், காயம்படாமல் வந்து சேரும்; எதிரிப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டால் அவர்களால் தொட முடியாது போகும்.
தேவைப்பட்டால் பெரிய துப்பாக்கிகளையும் லேசான தளவாடங்களையும் செய்து தருவேன்.
குண்டு வீசித்தாக்குவது, தோற்றுவிடும் இடங்களில் பல்வேறான தாக்குதல்களையும் தற்காப்புகளையும் என்னால் வகுத்தளிக்க இயலும்.
மேலே குறிப்பிட்டவற்றில் ஏதேனும் சாத்தியமற்றதாக உங்களுக்கு தோன்றுமேயானால், சோதனை செய்து காட்ட நான் தயார்.’
இந்த கடிதம் முழுவதையும் படித்தீர்கள் அல்லவா? தன்னுடைய திறமைகளை தானே எடுத்துச் சொல்லும் கடிதம் இது. தன் மீதுள்ள அசாத்திய நம்பிக்கை. அதை நிரூபிக்கும் மனப் பக்குவம் எல்லாமே இந்தக் கடிதத்தில் இருக்கிறது. சரி... இந்தக் கடிதம் யார் எழுதியது தெரியுமா... மோனோலிசா என்ற உலகப் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் லியானார்டோ டாவின்ஸி எழுதியதுதான். இவ்வளவு உலகப் பிரசித்திப் பெற்ற ஓவியர் கூட ஆரம்ப காலத்தில், நான் திறமையானவன், என் திறமைகளை சோதித்துப்பாருங்கள் என்று பகிரங்கமாக வாய்ப்புக் கேட்டதால்தான், இன்று அவர் உலகறிந்த ஓவியரானார். அவரின் ஓவியங்கள் இன்று கோடி ரூபாய்க்கு மேல் விலை போகின்றன. அவருடைய மோனாலிசா ஓவியம், அறிஞர்களின் ஆராய்ச்சியில் இன்று வரை இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
திறமை யாரிடத்தில்தான் இல்லை... ஆனால், எத்தனை பேரால் கூச்சத்தை துறந்து மற்றவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்க முடிகிறது. சிந்தியுங்கள்... இந்த கூச்சத்தை உடைத்தால், நீங்களும் உலகின் தலைசிறந்த மனிதராகலாம். வாய்ப்பு பெறுவதற்கான சாவி உங்களிடத்தில்தான் இருக்கிறது. அதை வேறெங்கிலும் தேடி அலைய வேண்டாமே!
No comments:
Post a Comment