Thursday, February 25, 2010

விண்ணை முட்டும் விலைவாசி!

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும், இவ்வேளையில் சினிமா டிக்கெட் முதல் சகல தேவைகளையும், ’ஆன்-லைன்’ மூலம் பெற்றுக் கொள்வது சுலபமாகி உள்ளது. வீட்டில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடி உலகின் எந்த மூலையில் உள்ள பொருளையும், இன்டர்நெட் வழியாகக் கண்டறிந்து வாங்கலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை; புத்தகங்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை என்று எல்லாமே இப்போது ஆன்லைன் மயம்தான். இந்தியாவில் தற்போது 10 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் 16 சதவீதம் பேர் ஆன்-லைன் வர்த்தகத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ஆன்-லைன் வியாபாரத்தில் மும்பை முதலிடம் வகிக்கிறது. அனைத்து பொருள்களையும் மக்கள் ஆன்-லைனில் போட்டி போட்டு வாங்குகின்றனர். பல சுலபமான வழிமுறைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்தாலும், சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு, இந்த ஆன்-லைன் வர்த்தகம் பாதிப்பையே ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சில்லறை வியாபாரத்தில் ஆன்-லைன் வர்த்தகம், ஊக வணிகம் ஆகியவை முறைகேடுகள் நடக்க பெரும் பங்கு வகிக்கிறது.

கிரிகெட்டில் ஊகத்தின் அடிப்படையில் எந்த அணி வெல்லும் என்று பணம் கட்டுகின்றனர். யார் வேண்டுமானாலும் ஊகத்தின் அடிப்படையில், ஒரு சிறு தொகை பணம் கட்டி எந்த ஒரு பொருளையும் பதுக்கி, நிறுத்தி வைத்து விடலாம். தங்கத்தை போல விலை ஏறியவுடன் மற்றவர்க்கு விற்று விடலாம். இப்படி செய்பவர்க்கு கிடங்கு தேவை இல்லை. பொருளை ஊர்தியில் ஏற்றி, இறக்க தேவையில்லை. பொருள் யாருடையது, எங்குள்ளது என்று இணையதள ஆட்டத்தை நடத்தும் நிறுவனங்களுக்குத் தான் தெரியும். ஒரே பொருளின் மீது பலர் பணம் கட்டுவதாலும், பல பேர் பதிவு செய்வதாலும் வரி, மேலும், மேலும் கூடி விடுகிறது. இருந்தாலும் அரசுக்கு சேவை வரி, வாங்குபவரின் மூலமாக கிடைத்து விடுகிறது. விற்பவரிடம் இருந்தும் அரசுக்கு சேவை வரி கிடைக்கும். 1997ம் ஆண்டு வரை உணவு தானியங்களை பெருமளவில் தனியார் கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு பின் வந்த அரசுகள் ‘ஏதோ ஒரு காரணத்திற்காக’ முன்பதிவு வர்த்தகத்தை அமல் படுத்தியது. அப்போதிருந்துதான் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர ஆரம்பித்தது.
இதற்கு முன் நடந்த வர்த்தகத்தாலும், வியாபாரத்தாலும், அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கு மட்டும்தான் விற்பனை வரி போய் சேரும். மத்திய அரசுக்கு இதன்மூலம் எந்த பயனும் இருக்காது. ஆனால், இந்த முன்பதிவு வர்த்தகத்தால் மத்திய அரசுக்கு கணிசமான அளவு வருமானம் வர ஆரம்பித்தது. ஆனால், மாநில அரசுக்கு இந்த விற்பனை வரியில் எந்த வித பங்கும் கிடையாது.
அதனால்தான் என்னவோ இந்த ‘பதுக்கல்’ விற்பனைக்கு மத்திய அரசு துணைபோகிறது.

இதுவரை ஊக வணிகத்தில், 7,000க்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்களும், மொத்த கொள்முதல் வியாபாரிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏஜன்ட்கள், விளையும் இடத்திற்கே சென்று விவசாயிகளை சந்திக்கின்றனர். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். உழுவதற்கும், விதைப்பதற்கும் கூடக் கடன் கொடுக்கின்றனர். இதனால், விளை பொருள்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. அவர்களே, நல்ல விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர். விவசாயிகளுக்கும், ஏற்றுமதி, இறக்குமதி செலவு மிச்சம் என்பதாலும், இருக்கும் இடத்திலேயே நல்ல வருமானம் வருவதால், பொருட்களை ஏஜன்ட்களிடமே விற்று விடுகின்றனர்.
இவ்வாறு விவசாயிகளுக்கு, ஏஜன்ட்கள் கடன் கொடுக்கும் போதே, உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. அதுவும் விவசாயிகள் விலையை நிர்ணயம் செய்துவிடுவதில்லை. விலையையும் அதன் தரத்தையும் முற்றிலுமாக அந்த ஏஜென்டே தீர்மானம் செய்கிறார். இந்த ஏஜன்ட் என்று இங்கு சொல்கிறேனே இவர்கள் யார் என்று தெரியுமா... நமது சமூகத்தில் முன்னணியில் உள்ள பெரும் தனியார் நிறுவனங்கள்தான்.

எடுத்துக்காட்டாக விவசாயிகளுக்கு ஒரு சொர்ப விலையை கொடுத்து விளைபொருட்களை வாங்கிக்கொள்ளும், ஒரு பெருவணிகர் தன்னிடம் 1 இலட்சம் மூட்டை எள் இருப்பதாக அறிவித்து அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை இணைய தளத்தில் அறிவிக்கிறார். இதைப் பார்க்கிற இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இன்னொரு வணிகர் இதில் 10 ஆயிரம் மூட்டையை “வாங்குவதற்கு” முன்வருவதாக அறிவிக்கிறார். இப்படி “வாங்குகிறவர்” உடனடியாக முழுப்பணத்தையும் செலுத்தி விடுவதில்லை. 10 விழுக்காடு தொகையை பெருவணிகரின் கணக்கில் செலுத்திவிட்டால் போதும். அந்தப் 10ஆயிரம் மூட்டை இவருக்கு உரியதாகக் குறிக்கப்படுகிறது.

மீதமுள்ள தொகையை அவர் எப்போது செலுத்துகிறாரோ அப்போது தனது சரக்கை கிட்டங்கியிலிருந்து எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இவர் உடனடியாக மீதத் தொகையைச் செலுத்தி சரக்கை எடுக்கமாட்டார். அதற்கு பதிலாக இந்த 10 ஆயிரம் மூட்டையை தனக்குத் தேவையான லாபத்தையும் சேர்த்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனது இணையதள முகவரியில் அறிவிப்பார். அதைப் பார்க்கிற சிறுவணிகர் அந்தத் தொகையைக் கொடுத்தால் இவரிடமிருந்து சரக்கை எடுத்துச் செல்லலாம். இவ்வாறுதான் ஆன் லைன் வர்த்தகம் நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் என்ன மாதிரியான லாபத்தைப் பெருகிறார்கள்? இடையில் இருக்கும் தரகர்கள் எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!
இவர்கள் செய்யும் பேரத்தால் இன்னும் சில ஆண்டுகளில் பட்டினிச் சாவு என்பது நமது இந்தியாவிலும் சர்வ சாதாரணமாகிப் போகும் என்பது மட்டும் என்னவோ உண்மை!
அது எப்படி...?

No comments:

Post a Comment