Friday, February 26, 2010

சாக்லேட் பரீட்சை!



தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களா நீங்கள்...? அப்படீன்னா, நீங்கள் இதய நோயைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். சாக்லேட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வராது என்று எகிப்து விஞ்ஞானிகள், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் (நாம நேருல போய் தேடியா பார்க்கப்போறோம்... அந்த தைரியம்) என்று ஏதாவது ஒரு நாட்டு விஞ்ஞானிகளின் பெயரைப் போட்டு (முக்கியமா, வாயில நுழையாத பெரைச்சொல்லி, இவர்தான் அந்த விஞ்ஞானின்னு சொல்லிடுவாங்க) சொன்னாங்கன்னு... பெருசா விளம்பரம் எல்லாம் செஞ்சு... இதய நோய்க்காரர்களை எல்லாம் விளம்பரம்போட்டே, புத்தகத்தை வாங்க வச்சிடுவாங்க.
இதை உண்மையிலேயே படிச்சுப் பார்த்த கிழக்கு லண்டனில் உள்ள கிழக்கு ஏங்கிலியா பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஏகப்பட்ட குழப்பம். என்னப்பா இது... சாக்லேட் சாப்பிட்டா இதய நோய் வராதா...? ஆச்சர்யமாய் இருக்கே... என்று மிரண்டு போன விஞ்ஞானிகள், இந்த அதிசயத்தை நாமும் எப்பாடு பட்டாவது கண்டுபிடிச்சாகனும்னு முடிவு பண்ணியதோடு, நல்ல உடல் நல ஆரோக்கியமான பெண்கள் 40 பேர் தேவை. என்று தங்கள் ஆராய்ச்சிக்குழு சார்பா பத்திரிகையில விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
இவங்களோட ஆராய்ச்சி இதுதாங்க... உடல் நல ஆரோக்கியமுள்ள 40 பெண்கள், பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட உயர்தரமுள்ள 2 சாக்லேட்டுகளை தினமும் ஒருஆண்டு முழுவதும் சாப்பிட்டு வரவேண்டும். ஒரு வருடம் கழித்து அவர்கள் சாப்பிட்ட சாக்லேட்டால், உண்மையில் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏதும் நிகழாமல் இருக்கிறதா... என்பதை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிடுவார்கள்.
இந்த ஆராய்ச்சிக்குத்தான் 40 பெண்களை தேடும் படலம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு வருடம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கப்போகும் இந்தப் பெண்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதோடு, செலவுக்கு கைநிறைய பணமும் அள்ளிக்கொடுக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தயாராக இருக்கிறதாம். பட்... பெண்கள்தான் வரமாட்டேங்கறாங்களாம்... (தெரிஞ்சே யாராவது புதைகுழியில வந்து விழுவாங்களா...?)
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பீட்டர் கர்டிஸ் கூறும் போது, ”ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இதற்காக செலவு செய்வதில் தயங்க மாட்டோம்‘ என்றார்.
ஓராண்டுக்கு ’இனிப்பான’ வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் 40 பெண்களை இன்னும் முடிவு செய்யவில்லையாம் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment