Thursday, February 25, 2010

அபாயத்தைத் தொடும் விலை உயர்வு!



ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிலோ சாப்பாடு அரிசி பதினைஞ்சு ரூபாய்தான். தோசைக்கு அரிசி வெறும் 7 ரூபாய்தான். சோறு பொங்கினா அப்படியே மல்லிகைப்பூ மாதிரி உதிரி உதிரியா அழகா இருக்கும். ஆனா, இப்போ நல்ல அரிசி வாங்கி சாப்பிடணும்னா ஒரு கிலோ அரிசிக்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது.
சரி இவ்வளவு விலை கொடுத்து வாங்குறோம். ஆனா, வாங்குற அரிசி நல்லா இருக்குதா... ம்ஹும். சோத்துல தண்ணீர் ஊத்தி வைச்சா... மறுநாள் காலைல அத மாடுகூட சாப்பிடாது. அந்தளவிற்கு சோறு கெட்டுப்போயிடுது. ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு நாள் பொங்கிய சோறை மூணு நாள் வச்சி சாப்பிடலாம்... இந்த ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ்நாடு இல்லீங்க... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தர மக்களும் புலம்பிக்கிட்டு இருக்காங்க.
அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கு.
இப்படியே விலை அதிகரிச்சுக்கிட்டு போச்சுன்னா என்னதான் செய்யறது. இந்த பயம் எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது.
என்னதான் நடக்கிறது நம் நாட்டில்? இவ்வளவு உயர்வுக்கு என்ன காரணம்? உணவுப் பொருள் உற்பத்தியே இல்லாமல் போய்விட்டதா? அல்லது உணவுப்பொருட்கள் அனைத்தையும் வெளிநாட்டில் இருந்துதான் கொள்முதல் செய்கிறோமா...? ஏன் இந்த விலை உயர்வு என்று ஏகப்பட்ட கேள்விகள் எழத்தான் செய்கிறது.
இப்படி தாறுமாறாக ஒருபுறம் விளைபொருட்கள் விலையேறிக் கொண்டிருக்க... மறுபுறம் விவசாயிகள் போதுமான வருமானம் இன்றி விளைநிலங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், இப்படி தாறுமாறாக போகும் பணங்கள் எங்கு, யாரிடம் போய்ச் சேருகிறது என்பதுதான் இப்போது நம் முன்னால் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த விலை உயர்வு பிரச்னைக்கு காரணம் தாராளமயமாக்கல், ஊகபேர வணிகம், ஆன்லைன் டிரேடிங் என்று பலபுரியாத பெயர்களை ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் சொல்லிக்கொண்டிருந்தாலும்... எல்லாருக்கும் புரியும்படியான ஒரே வார்த்தை பதுக்கல் என்பது மட்டும்தான்.

டிசம்பர் 2007 வரை ஆண்டு விலைவாசி உயர்வு 4 விழுக்காடு என்று இருந்தது, 2008 மார்ச் இறுதியில் 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்திய சேமவங்கி கூறுகிற அபாய அளவான 5 விழுக்காட்டையும் தாண்டி மிக அபாய அளவை நோக்கி விலை உயர்வு விரைந்து செல்கிறது. இந்தக் கணக்குக்கூட மொத்த விலைவாசிக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவதாகும். உண்மையில் மக்கள் சந்திக்கிற சில்லரை விலை உயர்வு இதைவிடப் பன்மடங்கு அதிகம்.

எடுத்துக்காட்டாக, 2008 மார்ச்சுடன் முடிந்த கடந்த 12 மாதங்களில் வனஸ்பதியின் (டால்டா) விலை மொத்த வணிகத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லரை வணிகத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. அரிசி விலை மொத்த சந்தையில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. சில்லரைச் சந்தையில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் மொத்த வணிகத்தில் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சில்லரைச் சந்தையில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கோதுமை மாவு 0.5 சதவீதம் மொத்த வணிகத்தில் விலை உயர்ந்துள்ள போது சில்லரைச் சந்தையில் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இரும்புக் கம்பிகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை ஒவ்வொரு நாளும் கணிக்க முடியாத வகையில் உயர்ந்தும் மாறியும் வருகிறது. உயிர் காக்கும் மருந்துகள் சில்லரைச் சந்தையில் 300 சதவீதம் உயர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட 1960களின் இறுதியில் சந்தித்த விலைவாசி உயர்வை இன்று இந்தியா சந்தித்து வருகிறது. அன்றைக்கு ஏற்பட்ட உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தார்கள். ஆனால் இன்று அந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த உணவுப் பஞ்சம் உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. செனிகல், கேமரூண், கென்யா, வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலவரம் நடந்துவருகிறது. காசு கொடுத்தாலும் உணவு கிடைக்காதவர்களும், உயர்ந்துள்ள உணவுப் பொருள் விலையை எதிர்கொள்ள முடியாதவர்களும் இந்நாடுகளில் மோதிக் கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment