Friday, February 26, 2010

உயிரைக் குடிக்கும் உணவுப் பொருள்கள்!!பாலில் ஆரம்பித்து தண்ணீர் வரை அனைத்திலும் கலப்படம் இல்லாமல் இல்லை. இந்த கலப்படத்தை நிறுத்த என்ன தான் வழி...?
கலப்படம் செய்பவர்கள் திருந்தினாலே தவிர இந்த கலப்படத்தைக் குறைக்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால், இதிலிருந்து ஓரளவிற்காவது தப்பித்துக்கொள்ள நாம்தான் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டியதிருக்கிறது.
முன்பெல்லாம் வாழைப்பழம் வீட்டிற்கு வாங்கி வந்தால், ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். ஆனால், பெருநகரங்களில் வாழைப்பழத்தை வாங்கி வந்த அன்றே சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால், மறுநாள் நீங்கள் அந்தப் பழத்தை சாப்பிடவே முடியாது. அந்தளவிற்கு அந்தப் பழம் சாப்பிடும் பருவத்தை தாண்டி நிற்கும். முன்பெல்லாம் வாழைப்பழத்தை மூட்டம் போட்டு பழுக்க வைக்கிறார்கள். ஆனால், வியாபார ரீதியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அதற்கும் கல் வைத்து பழுக்க வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். வாழைப்பழம் இப்படி என்றால், பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதற்காக ஆப்பிள் பழத்தில் மெழுகை தடவி விற்பனை செய்கிறார்கள்... இப்படியே சென்றால், பழத்தை யார்தான் வாங்கி சாப்பிடுவார்களோ...
பெரியவர்கள் சாப்பிடும் ஐட்டங்களில் இப்படிப்பட்ட கலப்படங்கள் என்றால், சிறுவர்களையும் கலப்படக்காரர்கள் விட்டுவைப்பதில்லை. நம்ம குட்டீஸ்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச உணவு என்று கேட்டவுடன், எந்தக் குழந்தைகளும் கீரை, பருப்பு, சோறு என்று சொல்வதில்லை... மாறாக, ஐஸ்கிரீம், சாக்லேட்... இம்மாதிரியான வகையறாக்களை பட்டியலிடுகிறது.
தற்போது குழந்தைகள் இரண்டரை வயதில் இருந்தே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துவிடுவதால், குழந்தைகளுக்கு விளையாட நேரம் கொடுப்பதில்லை. விடுமுறை நாட்களிலேயும், எக்ஸ்ட்ரா கோச்சிங் கிளாஸ் என்று எதிலேயாவது பிள்ளைகளை சேர்த்து அறிவு ஜீவிகளாக்க முயற்சிக்கிறோம். இதன் விளைவு... மிதமிஞ்சிய எடை உயர்வு, ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி இதெல்லாம் ஏற்பட்டுவிடுகிறது.
ஏங்க இதற்கும் உணவு கலப்படத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? மொட்டை தலைக்கும், உள்ளங்காலுக்கும் ஏன் முடிச்சுப் போடுறீங்கன்னுதானே கேட்கறீங்க...
விஷயம் இருக்கு...
குழந்தைகள் பெரியவர்களைப் போல் மிதமிஞ்சிய எடை உயர்வுக்கு என்ன காரணம்...? விளையாட்டு ஒன்றுதான் காரணமா...?
இல்லவே இல்லை. விளையாட்டும் ஒரு காரணம்... மற்றொரு முக்கிய காரணம் என்ன தெரியுமா...? உடம்பில் அபாயகரமான அளவில் கூடும் கொழுப்பு.
ஏங்க... குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாங்கள் மிகவும் பார்த்து பார்த்துதான் சாப்பாடு எல்லாம் கொடுக்கிறோம். பின்னே எங்கேயிருந்து கொழுப்பு சேரும்னு நீங்க கேட்கிற கேள்வி புரியுது.
குழந்தைங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுதுன்னு... பெற்றோர்களாகிய நாம் தேடித் தேடி ஐஸ்கிரீம்களை வாங்கி கொடுக்கிறோமே... இதுதாங்க வினை. அதிலும் ஒரு சில பெற்றோர்கள்... சே... ரோட்டில் விற்பனையாகிற ஐஸ்கிரீம் எல்லாம் அந்த அளவுக்கு சுத்தம் கிடையாது. என் குழந்தைக்கு நல்ல பிராண்டடு ஹை கோலிட்டியான ஐஸ்கிரீம்களைத்தான் வாங்கிக்கொடுக்கிறேன்னு சொல்லக்கூடிய பெற்றோர்களா நீங்கள்...? அப்படீன்னா... குழந்தைகளை அதிக அளவிற்கு ஆபத்தில் தள்ளக்கூடிய பெற்றோர்கள் சாட்சாத் நீங்கள்தான்.
ஏனெனில் பெரு நகரங்களில் விற்பனையாகிற குறைந்த ஐஸ்கிரீம் வகையறாக்களில் இருந்து விலை உயர்வான ஹைகிளாஸ் மக்கள் சாப்பிடும் ஐஸ்கிரீம் வரை எதுவுமே... குழந்தைகள் சாப்பிடும் அளவிற்கு தரமானது கிடையாதுன்னு ஒரு ஆய்வு சொல்லியிருக்கு.
அதாவது, இம்மாதிரியான ஐஸ்கிரீம் நீங்கள் நினைத்த மாதிரி ரொம்ப ரொம்ப சுத்தமாகவே தயாரிக்கப்படுகிறது. இருந்தாலும், அதில் சேரும் பால் பொருள்கள், செயற்கை நிறமூட்டிகள், வாசனைப் பொருட்கள் இவை யாவும், குழந்தைகள் உடல் ஜீரணிக்கும் அளவிற்கு சக்தி கொண்ட உணவுப் பொருட்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல், இம்மாதிரியான ஐஸ்கிரீம்களை சோதனை செய்து பார்த்தபோது இதில் உள்ள கொழுப்பு பெரியவர்களுக்கே ஜீரணமாவது அவ்வளவு சிரமம். அப்படியிருக்கையில் குழந்தைகள் உடல் இந்த ஐஸ்கிரீமை எப்படி ஜீரணிக்கும். இப்படியாக வாங்கி வாங்கி கொடுக்கும் ஐஸ்கிரீமால் மிதமிஞ்சிய கொழுப்பு நம் குழந்தைகளின் உடலில் சேர்கிறது. இதனாலேயே மிதமிஞ்சிய உடல் எடை அதிகரிப்பும் அதனால், விபரீதமான பின் விளைவுகளையும் நாம் சந்திக்கிறோம். ஐஸ்கிரீம் எப்படியோ... அதேபோலத்தான் தற்போது சந்தையில் விற்பனையாகிக்கொண்டிருக்கும் சாக்லேட் வகையறாக்களும்.
லண்டனில் உள்ள நுகர்வோர் அகிலம் என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக்கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து மோசமான உணவுக்கான விருது என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என சிபாரிசு வேறு!
அப்படீன்னா... குழந்தைகளுக்கு என்னதான் சத்தான ஆகாரங்களை கொடுக்கறது... என்று உங்கள் ஆதங்கம் புரிகிறது?
உங்கள் தாத்தா பாட்டி காலத்தில் குழந்தைகளுக்கு சாக்லேட்டும், ஐஸ்கிரீமுமா கொடுத்தார்கள்... இல்லையே... கடலை மிட்டாய், கடலை உருண்டை, சுசியம், பொரி உருண்டை... இதைத்தானே கொடுத்தார்கள். அதையே நீங்களும் உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். ஏனென்றால், பணை வெல்லத்தில் அந்த அளவிற்கு இரும்பு சத்துக்கள் இருக்கிறது. அது உங்கள் குழந்தையின் உடலை கண்டிப்பாக ஆரோக்கியத்துடன்தான் வைத்திருக்கும். கொஞ்சம் கொடுத்துத்தான் பாருங்களேன்... உங்கள் குழந்தைகள்... முன்பை விட பலசாலியாக மாறுவார்கள்.
சரிங்க... எல்லாம் சொன்னீங்க... கலப்படத்தை தடுக்கறதுக்கு சட்டம் ஏதும் இல்லையா...?
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006ம் ஆண்டு இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள்தான் இந்த கட்டுரைக்கு சரியாகப் பொருந்தும்.
நம் உடல் நிலை, குழந்தையின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் உணவு முறைகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் மட்டுமே... இந்த கலப்பட சமுதாயத்தில் இருந்து கொஞ்சம் பிழைக்கலாம்.

No comments:

Post a Comment