Thursday, February 25, 2010

விண்ணை முட்டும் விலைவாசி!விலைவாசி உயர்வால் மக்கள் படும் அவஸ்தையைப் போக்க மத்திய அரசும், மாநில அரசும் என்னதான் நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று உங்களின் பலருக்கு கேள்வி எழலாம்.
இந்த விலைவாசி உயர்வு ஆள்பவர்களுக்கு தெரியாமல் இல்லை. இதுகுறித்து பிரணாப்முகர்ஜி ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது விலைவாசி உயர்வு தன்னை மிகவும் கவலைக்கொள்ள வைத்திருக்கிறது. இது விரைவில் கட்டுக்குள் வரும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று வழக்கமாக தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு தொகுப்பிலும் மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய உணவுத் தானியக் கையிருப்பு இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
எதிர்காலத் தேவையை ஒட்டி இரண்டு லட்சம் டன்கள் வரை உணவுத் தானியங்களை, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகவும் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இப்படியிருக்க, விலை உயர்வுக்கும், ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லும் முன்பேர வர்த்தகத்திற்கும் தொடர்பில்லை என்று என்.சி.டி.இ.எக்ஸ். முன்பேர நிறுவன நிர்வாகத் தலைவர் ஆர்.ராமசேஷன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உணவுப் பொருட்களான பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்த தடை விதித்தது.
ஆனால், தடை விதிக்கப்பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததுதான். அதோடு, முன்பேர வர்த்தகத்தால் மக்களுக்கு நன்மையே தவிர அதனால், எவ்வித பாதிப்பும் கிடையாது என்பது அவருடைய வாதம்.

மத்திய அரசு தொகுப்பிலும், மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய அளவு உணவு தானியம் கையிருப்பு இருப்பதாக அரசு சொல்கிறது. அப்படியிருக்கையில், விலைவாசி விஷம் போல ஏறிக்கிடக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசு உறுதியுடனும் தொலைநோக்குடனும் நடந்துகொள்ள வேண்டாமா?.
கையிருப்பில் இருக்கும் உணவுப் பொருள்களை சந்தையில் இறக்கினாலே, விலைகள் தானாகவே வீழ்ச்சி அடைந்துவிடாதா?.

இதைவிடக் கொடுமை தேசிய மற்றும் மாநில சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் மெத்தனத்தால், பெரும்பாலான பல ஆயிரம் டன் உணவுப் பொருள்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. இது எந்தளவிற்கு உண்மை என்பதை ரேஷனில் மக்கள் வாங்கும் அரிசியே சாட்சி. இதையெல்லாம் முறைப்படுத்தினாலே, சந்தைக்கு இன்னும் கூடுதலான நல்ல தரமான பொருள்கள் வந்து சேரும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.


இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த விலைவாசி உயர்வு இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணங்கள்; விவசாய உற்பத்தி திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. பயோ டீசலுக்கு என்று உணவு தானியங்கள் திருப்பி விடப்படுகிறது. இருக்கின்ற கொஞ்ச விவசாயப் பொருட்களும் முன்பேர வர்த்தகம் என்ற பெயரில் திறந்துவிடப்பட்டுள்ளதும், சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எண்ணெய் விலை உள்ளிட்டவையும்தான். இவற்றை ஆளும் அரசுகள் முறைப்படுத்த தொடங்கிவிட்டால், சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தலாம்.

தேவைக்கேற்ப உற்பத்தி இருந்தால், விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மையானால், சர்க்கரை, சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலைகள் உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் ரூ.13க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை இன்று ரூ.17 ஆக அதிகரித்துவிட்டது. கடந்த மூன்றே மாதங்களுக்குள் கட்டுமானக் கம்பிகளின் விலை 20 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. அதேபோலத்தான் சிமெண்ட்டின் விலையும்.
எனவே, உற்பத்திப் பெருகுவதற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் நேரடித் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, உற்பத்தியிலும், விநியோகத்திலும் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் விஷம்போல் ஏறிக்கிடக்கும் இந்த விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.

No comments:

Post a Comment