Friday, June 17, 2011

அய்யாசாமி ரிட்டர்ன்!

“ தம்பியோவ்.. சைக்காலஜில்லாம் படிச்சிருக்கீரு, உங்க சைக்காலஜிய வச்சிக்கிட்டு என்னுடைய ஞாபக மறதிக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியுமாவோய்...” என்று அய்யாசாமி என்னிடம் கேட்டதும், “என்ன அண்ணாச்சி இப்புடி கேட்டுப்புட்டியே... கண்டிப்பா சொல்றேன். ஆனா, எனக்கு ஒரு வாரம் டைம் வேணும்”னு சொன்னேன். ஒரு வார்த்தை ஏன் எதுக்குன்னு கேட்கல அய்யாசாமி. ஒருவேளை கேட்கறதுக்கு மறந்துபோயிருப்பாறோன்னு நினைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
சின்சியர் சிகாமணியாய் காலையில 3 மணிக்கெல்லாம் தூங்கி முழுச்சி, என்னுடைய பழைய புக்கையெல்லாம் புரட்டி புரட்டி படிச்சதுல அய்யாசாமி கண்ணுமாதிரி, எனக்கும் கண்ணு ரெண்டும் வீங்கிப்போச்சு. காலையில அம்மா என் கண்ணை பாத்துட்டு, “ஏல.. கிறுக்குப்பயல அதான் படிப்பு முடிஞ்சு போச்சே.. இன்னும் அதை வச்சி என்ன பண்ணிக்கிட்டு கிடக்க” என்று அம்மா கேட்டதும் அவமானமா போச்சு. இருந்தாலும் அய்யாசாமியின் ஞாபகமறதிய மனசுல வச்சிக்கிட்டு, வழக்கமா எதிர்த்துப் பேசற அம்மாகிட்ட ஒரு வார்த்தை பேசாம விருட்டுன்னு அய்யாசாமி வீட்டுக்கு போயிட்டேன்.
“அண்ணே.. அண்ணே.. ” என்று வீட்டு வாசலில் நின்னுக்கிட்டு கூவினேன். “தம்பி வாடே.. என்ன வெளிய நின்னுக்கிட்டு கத்திக்கிட்டு கிடக்க...” என்று குரலை மட்டும் வெளியில் அனுப்பி வைத்தார் அய்யாசாமி. “அண்ணே நீங்களே கூப்பிடுவியன்னு எதிர்பார்த்தேன். ரெண்டு நாள் ரோட்டுல எதிர்த்தால பார்த்தும் ஒரு வார்த்தை பேசலையே...!.”
“என்னடே சொல்ற.. என்ன கேட்கணும்னு எதிர்பார்த்த என்று அய்யாசாமி கேட்டதும், என்னண்ணே மறந்துபோச்சா.. ஞாபக சக்தி சம்பந்தமா என்கிட்டக்கூட கேட்டுருந்தீங்களே.. ”
“ஏ..ஏ.. ஆ..ஆமா.. சுத்தமா மறந்தே போயிட்டேண்டே” என்று அய்யாசாமி சொன்னதும்தான் அவரின் ஞாபகமறதியின் அளவீட்டை புரிந்துகொண்டேன். “அண்ணே ரொம்ப சின்ன விஷயம்.. நான் சொல்றதை குறிச்சு வச்சிக்கிட்டு அதுபடியே நடந்தீங்கண்ணா கண்டிப்பா ஞாபக சக்தி வளர்ந்திடும்” என்று சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் இடையூராக.. “சின்ராசு கொஞ்சம் நில்லுடே, நான் ஒண்ணும் அவ்வளவு ஸ்பீடா எழுதிக்கிட மாட்டேன். அதனால செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிடறேன்” என்று அய்யாசாமி சொன்னதும் கம்பீரமா காலரை தூக்கிவிட்டுக்கிட்டு, சேர்ல நிமிர்ந்து உட்கார்ந்தேன். “அண்ணே காலையில செய்யற விஷயம் என்னான்னு மதியம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. மதியம் நடக்கறத சாயங்காலம் யோசிச்சுப் பாருங்க.. இதை இப்படியே பத்து நாளைக்கு செஞ்சிக்கிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு ஞாபக சக்தி இம்ப்ரூவ் ஆயிடும்”னு நான் சொன்ன ஒவ்வொரு விளக்கத்தையும் அப்படியே செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிக்கிட்டாரு அய்யாசாமி. எனக்கோ பயங்கர சந்தோஷம்.. மேல் எல்லாம் புல் அறித்தவாறே வீட்டுக்கு நடந்து சென்றேன், நான் கொண்டு வந்த சைக்கிளை மறந்துவிட்டு.
பத்து நாள் கடந்திருக்கும். பஜாருக்கு நடந்து போய்கிட்டு இருந்தேன். எதிர்த்தமாதிரி அய்யாசாமி நடந்து வந்துக்கிட்டு இருந்தாரு. நம்ம ட்ரீட்மெண்டு எப்படி இருக்குன்னு அய்யாசாமிக்கிட்ட கேட்டு தெரிஞ்சிப்போம்னு ஒரு ஆர்வத்துல.. என்னுடைய நடையை குறைத்துக்கொண்டு அய்யாசாமிக்காக நின்றுகொண்டிருக்க, மனுஷன் கண்டுக்காம என்னை கடந்து நடந்து போய்கிட்டு இருந்தாரு. எனக்கு லேசாக அதிர்ச்சி.. “யோவ் அண்ணாச்சி.. ” என்று கூப்பிட்டதும்தான் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தார். “என்னடே சின்ராசு.. நடுரோட்ல டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கிறே என்ன விஷயம்..?”
“இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..” எரிச்சல் தொற்றிக்கொண்டது எனக்கு. “அண்ணே ஞாபக மறதிக்காக ட்ரீட்மெண்ட் குடுத்தேனே இப்போ எப்படி இருக்கு..? ”
“ஏ.. ஆமாடே பாத்தியா சுத்தமா மறந்தே போயிட்டேன். ஆமா நீ சொன்னதைக் கூட என் பொண்டாட்டி, கமலம் கூட டைரியில எழுதி வெச்சாளே.. சரிதானடே நான் சொல்றது” என்று கேட்ட அய்யாசாமியை, உன் ஞாபக சக்தியில் இடி விழ என்று மனதில் திட்டிக்கொண்டு, அவர் கூப்பிட்டது கூட காதில் வாங்காமல் கோபமாய் நடையைக் கட்டிக்கொண்டிருந்தேன்.

Tuesday, June 14, 2011

வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்

மனிதர்களை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற ஆய்வுப் பணிகள், தொடர்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த ஆய்வுக்கு எப்போதுமே ஒரு முடிவு கிடையாது. நாடுகளும் கண்டங்களும்தான் மாறுபடுமே தவிர தேடுதல்களும், ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

1938ஆம் ஆண்டு. சீனாவையும் திபெத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதி அது. இமயமலையில் ஒரு சிறிய பகுதியான பேயான் காரா உலா என்ற மலைச் சிகரம். சீ பு டீ என்ற சீன புதைபொருள் ஆராய்ச்சியாளர் தங்கள் குழுவினருடன் அந்த மலைப்பகுதியில் ஒரு மாத காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரின் ஆராய்ச்சிக்கான நோக்கம், மனிதர்களின் கலாசார முறைகளை தெரிந்துகொள்வது என்பது மட்டும்தான். ஆனால், அவரின் நோக்கத்திற்கான விடைகள் அந்த மலையில் கிடைத்தபாடில்லை. தேடுகிறார் தேடுகிறார் தேடிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் போதும் என்று சலிப்புத் தட்டி ஊருக்கு திரும்பிவிடலாம் என்று நினைக்கும் தருவாயில், அந்த மலைச் சிகரத்தில் ஒரு பகுதியில் குகை போன்ற ஒரு அமைப்பு கண்ணுக்கு தென்பட்டது. பார்ப்பதற்கு விசித்திரமான அந்த குகையைப் பார்த்ததும், சீ பு டீக்கு அந்த குகையைச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொள்ள, தங்கள் குழுவினருடன் அங்கு சென்றார்.

அந்த குகை இயற்கையாக தோன்றியது அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முற்பகுதியில் மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு குகையாகவே அது தோன்றியது. குகைக்குள் சென்றது, சீ பு டீயின் குழு. அந்த குகை ஒரு சிக்கலான ஒரு அமைப்பாகவே இருந்தது. சிறிய அளவிலான நீர் ஊற்று, பொருட்களை பாதுகாக்கும் அறைகள், சுவர்கள் முழுவதும் சதுரம் சதுரமாக அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அறை முழுவதும் உச்சக்கட்ட வெப்பம் சூழ்ந்திருந்தது.

குழுவினர் தங்கள் பணிகளை தொடங்கினார்கள். அந்த குகைப்பகுதியை சிறிய பள்ளமாக தோண்டியவுடன் குழுவினர் முகத்தில் பயங்கர அதிர்ச்சி. ஏனெனில் அவர்களின் கையில் சிக்கியது மனித எலும்புக்கூடு. ஒன்றல்ல இரண்டல்ல. கிட்டத்தட்ட நாற்பது எலும்புக்கூடுகள். அந்த எலும்புக்கூடுகள் சொல்லி வைத்தார்போல் 4 அடிக்கும் குறைவாக இருந்தது. அவற்றை தொடர்ந்து ஆய்வு ஆய்வு செய்தபோது, அந்த எலும்புக்கூடு மனிதர்கள் உடல் மிகவும் மெலிதானதாக, பலவீனமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவர்களின் தலைப் பகுதி மட்டும் உடல் பகுதியைவிட பெரிதாகவே இருந்திருக்கிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆராய்ச்சிக் குழுவினர், எலும்புக்கூடுகளுடன் கல்லினால் செதுக்கப்பட்ட வட்ட வடிவிலான 716 தட்டு போன்ற அமைப்பையும் கைப்பற்றியிருந்தார்கள். அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த தட்டுக்கள் அனைத்தும், அளவீட்டில் ஒரு சின்ன மாறுதல் கூட இல்லாமல் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. தட்டின் மையப்பகுதியில் அளவெடுத்து அமைக்கப்பட்டிருந்ததுபோல் ஒரு சிறிய அளவிலான ஓட்டை ஒன்று இருந்தது. இந்தத் தட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது, அது கிட்டத்தட்ட 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அந்தத் தட்டில் எகிப்து பிரமீட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் சாயலில் ஏதோ ஒரு விசித்திரமான எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த எழுத்துக்கள் என்னவென்று அவர்களால் சரியாக படிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 1962 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டாக்டர். சுவாம் உம் நூயி என்ற சீன ஆராய்ச்சியாளர், தட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை படித்துவிட்டு அதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியிருந்த விஷயம் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம். 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம் ஏதேனும் கோளாறினால், இந்த மலைச் சிகரத்தில் அவர்கள் தரை இறக்கியிருக்கலாம். தொடர்ந்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கலாம். திரும்பிச் செல்ல வழியில்லாததால் அவர்கள் இந்தக் குகையில் இருந்து, காலப்போக்கில் இறந்திருக்கலாம். அல்லது, பார்ப்பதற்கும் தோற்றத்திலும் மனித உருவத்திலிருந்து வித்தியாசமான அந்த தோற்றத்தைப் பார்த்ததும், சிகரத்தில் இருந்த பழங்குடியின மக்கள் தங்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை கொன்று இந்த மலைச் சிகரத்தில் புதைத்திருக்கலாம் என்று அனுமானமாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததோடு, வேற்றுக்கிரக வாசிகள்தான் அந்த மனிதர்கள் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார் நூயி.

இந்த ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பமாக 1968ஆம் ஆண்டு, செயிட்சூ என்ற ரஷிய ஆராய்ச்சியாளர் அங்கு கண்டெடுக்கப்பட்ட தட்டுக்களில் ஒன்றை தங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் நம்ப முடியாத ஆச்சர்யத்தை அந்த தட்டு செயிட்சூக்கு ஏற்படுத்தியது. ஏனெனில் அந்த தட்டு முற்றிலும் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிக சக்தி வாய்ந்த கோபால்ட் மற்றும் சில வேதிப்பொருட்கள் அதில் கலக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்தத் தட்டை அவர்கள் ஒரு சக்தியை புதுப்பித்துக்கொள்ளும் பேட்டரியாக அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். கண்டிப்பாக இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான். இத்தகைய அறிய மின் சீராக்கிச் சாதனம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூலோக வாசிகள் பயன்படுத்தியதாக எந்த வரலாறும் குறிப்பிடவில்லை. அப்படியானால் இந்தத் தட்டை மனிதர்களை விஞ்சிய ஒரு சக்திதான் உபயோகப்படுத்தியிருக்கும் என்று செயிட்சூவும் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அதோடு, நூயி சொன்னதுபோல் இது வேற்றுக்கிரக வாசிகளாகவும் இருக்கலாம் என்றும் தன்னுடைய ஆராய்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் இந்த அகழ்வாராய்ச்சியும், அதைத் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனை விஞ்சிய சக்தி ஒன்ற இருப்பதை திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஆனால், அந்த சக்தி வேற்றுக்கிரக வாசிகள்தானா என்று நிரூபணம் செய்யவில்லை. அனுமானங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திய இந்த ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர்கள் வேற்றுக்கிரக வாசிகக்ஷிதானா?

இந்த கேள்விக்கான விடைதேடும் ஆராய்ச்சிகள் உலகத்தின் ஏதோ ஓர் பகுதியில் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. யார்கண்டது? இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முன்பாகக்கூட இதற்கான விடையை வெளிவந்திருக்கக் கூடும். ஏனெனில் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தானே பிரபஞ்சத்தில் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது.

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!


முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.
அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.
திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சர்யங்கள் விரியும்.

எரியும் மனிதர்கள்
உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் ஆங்காங்கே நடக்கும் சில அதிபயங்கரமான விஷயங்கள், செய்திகளாக இருந்தால் கூட, நமக்கு விந்தையாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு விந்தையான செய்திதான் இது.

திடீர் திடீரென்று மனிதர்கள் உட்கார்ந்த மாத்திரத்திலேயே இறந்துபோவது, இதுதான் அந்த ஆச்சர்ய செய்தி. செய்தியைச் சொன்னதுமே புருவங்கள் விரிகிறது அல்லவா? அதெப்படி மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற நம்முள் எழும் சாதாரண கேள்விகள்தான் விஞ்ஞானிகளுக்கும்... இது போன்ற சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளில் 200 சம்பவங்கள் நடந்துள்ளது. 300 வருஷத்திற்கு இவ்வளவுதானே என்று எளிதாக ஒதுக்கிவிடும் விஷயம் அல்ல இது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதை நாம் படித்திருப்போம். அதேபோல காய்ந்த சருகுகள், உச்சபட்ச வெய்யிலில் தீப்பற்றி எரிவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், சற்றும் நம்ப முடியவே முடியாதபடி மனிதன் எப்படி தானாக எரிய முடியும்?

1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்டநாள் நடந்த பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் இறுதி நாளும் வந்தது. இந்த வழக்கில், கணவர் குற்றமற்றவர்; அவர், மனைவியை தீ வைத்து கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது. மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தானாக தீப்பற்றி எரிந்துபோவதை ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.
இதேபோல ஒரு சம்பவம் 1951ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி வாக்கில் நடந்தது. இம்முறையும் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் மேரி ரீசர் 67 வயதான இந்த மூதாட்டியை பார்க்க அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் ஏதோ எரிந்துபோன நெடி வீசியது. பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு,மேரி ரீசர் நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை இப்படி எல்லா பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் மேரி ரீசர் தானாக எரிந்துபோயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.
இதேபோல 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஒரு இரவு விடுதியில் மேபல் ஆண்ட்ரூஸ் என்ற இளம்பெண் தன் ஆண் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று, அந்தப் பெண்மணியின் பின்புறம், மார்புப் பகுதி, தோள்பட்டை என்று உடலின் அங்கங்கள் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சற்றும் எதிர்பாராத அவரது நண்பர் அவளை விட்டு விலகி நின்று அதிர்ச்சியாய் பார்த்திருக்கிறார். ஆனால், அவளின் மேல் படர்ந்த தீ, அறையில் எந்தப் பகுதியையும் பாதிக்கவில்லை. உடனடியாக மேபல் மீது எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மேபல் கூறும்போது, எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் மது அருந்திவிட்டு என் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று இதுவரை நான் உடலில் உணரமுடியாத வெப்பம் என்னுள் இருந்து புறப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் என் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் பற்றி எரிய ஆரம்பித்தது. நீல நிற ஜூவாலையுடன் அந்த நெருப்பு என்னைப் பற்றிக்கொண்டது. இது எதனால் என்று என்னால் உணர முடியவில்லை என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்.

இந்த மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி செய்தியை எல்லாரும் ஆச்சர்யமாக படித்தார்களே தவிர இதனுள் மறைந்துகிடந்த விபரீதத்தை யாரும் உணரவில்லை. முதன்முதலில் ஸ்பாண்டேனியஸ் ஹுயூமன் கம்பஷன் என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் வெளியிட்டார்.

இந்தக் கட்டுரையின் தாக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, சார்லஸ் டிக்கன் என்பவர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை மையக் கருவாகக் கொண்டு பிளீக் ஹவுஸ் என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதையில் நாயகி தானே தீப்பிடித்து இறந்துபோவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அவள் இறந்த காரணத்தையும் கதையாசிரியர் சொல்லியிருப்பார். அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தானாக தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தை சொல்லியிருப்பார். இந்தக் காரணம் கதைக்காக சொல்லப்பட்ட காரணமாக இருந்தாலும், இதிலும் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.

இதுவரை உலகம் முழுவதும் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் மூலம் எரிந்துபோனவர்களில் 80 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் மிக அதிகமான உடல் எடையும், அதிக அளவு மது அருந்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எரிந்துகிடந்த உடல் அருகில் மஞ்சள் நிற எண்ணெய் போன்ற திரவம் கசிந்திருக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மார்புப் பகுதி, இடுப்பு மற்றும் அடிவயிறு பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்துபோயிருக்கிறது. ஆல்கஹாலை வினைப்படுத்தும்போது அது ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் மீத்தேன் அல்லது ஈத்தேன் போன்று ஒரு எரிவாயுவையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.

இவர்களில் பெரும்பாலனவர்கள் அருந்திய கட்டுக்கடங்காத ஆல்கஹால்கள் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, இது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். உடலில் அளவிற்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின்தூண்டலில் உடல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள், ஆய்வறிக்கையை வெளியிட்டனர். நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ அமானுஷ்யங்கள் கிடையாது. தானாக மனிதன் எரிவது ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும், மது உடலை அழிக்கும் என்ற போதனையையும் இந்தக் கட்டுரை உணர்த்தாமல் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே!

மனிதனை விஞ்சிய சக்தி!
ஆண்டவன் படைப்பிலேயே மிக உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பு ஆகும். இதை ஆன்மிகம் மட்டுமல்லாது, அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பூமி இவ்வளவு அரிய கண்டுபிடிப்புகளையும், விண்ணைத் தாண்டி செல்லக்கூடிய ஆற்றலையும் பெற்றது மனிதனால் மட்டும்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பூமியில் மனிதனைத் தாண்டிய ஆற்றலும், வல்லமையும் இந்த பிரபஞ்சத்தில் யாருக்கும் கிடையாது என்ற மமதையை முதல் முதலில் உடைத்தது பறக்கும் தட்டு என்ற இன்றைக்கு வரைக்கும் ஆராய்ச்சிக்குள்ளான ஒரு பொருள்தான்.

1088ஆம் ஆண்டின் இடைப்பட்டப் பகுதி அது. சீன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷென் குயோ. இவர் சிறந்த ஒரு கண்டுபிடிப்பாளர். வித்தியாசமான பொருள், வித்தியாசமான உயிரிகள் இவற்றைப் பற்றியெல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடுவதுதான் இவரது வழக்கம். அந்த ஆண்டும் அப்படித்தான் ட்ரீம் பூல் என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த கட்டுரை ஏட்டில் ஒரு பக்கத்தில் சீனாவில் ஒரு கிராமப் பகுதியான யாங்க்சௌ என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் அன்ஹூய் மற்றும் ஜியாங்சு என்பவர்கள் தாங்கள் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து தட்டு போன்ற ஒரு பெரிய பொருள் பறந்து வந்தது. அந்தப் பொருளில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்து கண்கூசத்தக்க ஒளி பாய்ந்து வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல், பத்து மைல் தூரம் வரை நீண்டு இருந்து இருந்ததாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்தக் கட்டுரை வெளிவந்ததும், வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஷென் குயோ மீது கடுமையான எரிச்சல். ஷென் தேவையில்லாமல் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், இதுகுறித்து ஷென் எந்த பதில் விளக்கமும் அளிக்கவில்லை. தான் கூறியது எந்த விததத்திலும் தவறில்லை என்றே வாதிட்டார். இந்த சம்பவம் எல்லாம் நடந்தது 11 ஆம் நூற்றாண்டு.

ஆண்டுகள் உருண்டோடின. விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்துக்கொண்டிருந்த சமயம் அது. ஆனால், இந்தத் தடவை சீனா அல்ல. இது டெக்ஸாஸ் மாநிலம். 1878ஆம் ஆண்டு. வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டென்னிசன் என்ற தினசரியில் பெரும் பரபரப்பான செய்தி வெளியானது. ஏ ஸ்ட்ரேன்ஜ் பினோமினா (புதுமையான பெயர் தெரியாத உருவம்) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுருந்தது அந்தப் பத்திரிகை. இதுதான் அன்றைய முதல் பக்கச் செய்தி. அந்தச் செய்தியில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின் என்பவர், தான் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் தான் கண்டதாகவும், அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் தன் ஆச்சர்யத்தை வெளியிட்டிருந்தார்.

அதேபோல 1904ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து சரக்குக் கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்கு முகமாக பயணித்துக்கொண்டிருந்தபோது, மூன்று பிரகாசமான முட்டைவடிவ மற்றும் வட்ட வடிவ பொருள்கள் அணிவரிசையாக வேகமாக பறந்து சென்றதும், பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் அக்கப்பல் மாலுமி.

இதையடுத்து தொடர்ச்சியாக 1916 ஆம் ஆண்டு, 1926 என்று ஒவ்வொருவரும் மாறி மாறி தாங்கள் ஒரு அதிசய பறக்கும் தட்டை கண்டதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் போர் விமானங்களைப் பின்பற்றி சில ஒளிப்பந்துகள் தொடர்ந்து பின்பற்றி வந்ததாகவும் செய்திகள் வெளியாயின. 1942ஆம் ஆண்டு வானியல் ஆய்வாளர்கள், அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வான்கலம் அதாவது கண்ணாலும் சரி; ராடாராலும் சரி காண முடியாதபடி கலிபோர்னியா பகுதியில் லாஸ் ஏன்ஜெல்ஸ் மீது பறந்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

வெளியான செய்திகளும், கண்ட காட்சிகளும் உண்மையா? பறக்கும் தட்டு என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி ஒன்று இருந்தால், அதை இயக்குவது யார்? ஒளியின் வேகத்தில் பறந்து செல்லும் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை உருவாக்கும் அளவுக்கு மனிதனை விஞ்சிய சக்தி பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற விஞ்ஞானிகளின் மில்லியன் டாலர் கேள்விகளுக்கான பதில் இன்னும் ஆராய்ச்சி வடிவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மனிதனை விஞ்சிய சக்தி ஏன் பூமியைப் போன்ற வேறொரு கிரகத்தில் இருக்கக் கூடாது? சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கோள்தான் பூமி. விண்ணியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கண்களில் புலப்படாத கோள்கள் இன்னும் ஆயிரம் இருப்பதாக நாசாவே ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த கோள்களையெல்லாம் உற்றுநோக்கும்போது, பூமி மிக மிக சிறிய கோளாகத்தான் தோன்றுகிறது என்பதும் அவர்களின் கருத்து. செவ்வாயிலும், நிலவிலும்தான் மனிதன் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருக்கின்றன. ஆனால், இன்னும் ஆராய்ச்சிக்குள் சிக்காத பல்வேறு கோள்கள் பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது. அதில் ஏதேனும் ஒன்றில் மனிதனை விட ஆற்றலிலும், அறிவிலும் விஞ்சிய உயிரிகள் ஏன் வாழந்துகொண்டு இருக்கக் கூடாது? அந்த உயிரிகளின் கண்டுபிடிப்பாகக் கூட இந்த பறக்கும் தட்டு இருக்கலாம் அல்லவா?

சர்ச்சை மற்றும் ஆராய்ச்சிக்குள் இருக்கும் விடைதெரியாத அத்தனையும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. அதுவும் ஒரு கட்டத்தில் நிஜமாய் உருவெடுக்கலாம். இன்று நாம் பார்த்துக்கொண்டு ரசித்த அவதார் படத்தில் வரும் வேற்று கிரக மனிதர்கள் இன்னும் சில நூறு ஆண்டுகளில் நம் கண்ணிற்கு சகஜமாகத் தோன்றலாம். ஏனென்றால், கண்டுபிடிக்கும் வரைதான் கற்பனை.

இரவு நேரம் நிலவு தோன்றும் வானத்தை உற்றுநோக்கும்போது பல்லாயிர நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே ஒரு சில நட்சத்திரங்கள் உருகி வேகமாய் நம்மை நோக்கி விரைந்து வந்து விழுவது போல் தோன்றும். யார் கண்டது அது கூட வேற்றுக் கிரகத்தின் பறக்கும் தட்டாய் இருக்கலாம்!

அபாய டிராகன்பெர்முடா முக்கோணம்... இந்தப் பெயரை நாளிதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு பரிட்சயமான ஒரு செய்திதான். றுதரியாதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். இந்த அபாயகரமான முக்கோணம் அமைந்திருக்கும் இடம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு கிழக்குப் பகுதிக்கு அப்பால் கரீபியன் தீவுக்கு அருகில் உள்ள கடல் பரப்பு. இந்தக் கடற்பரப்பில் செல்லும் கப்பல்கள், பரப்பின் மேல் பரக்கும் விமானங்கள் திடீர் திடீரென்று காணாமல் போய்விடும். இதுதான் இந்த பெர்முடா முக்கோணத்தின் செய்தி. இதுவரை இந்த மர்மத்திற்கு விடை கிடைக்கவில்லை.
ஆராய்ச்சியாளர்களின் விடைதெரியாத கேள்விகளுள் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய செய்தி. இதேபோல கடற்பரப்பு, பிலிப்பைன்ஸ் கடற்பகுதியிலும் இருக்கிறது. அதாவது ஜப்பானின் மேற்கு கடற்பகுதி, டோக்கியோவின் வடக்கு கடற் எல்லைப் பகுதி. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், சீனா மற்றும் கிழக்கு ஜப்பான் கடற்பரப்பு, தாய்வான் போன்ற பகுதிகளை இணைக்கும் கடற்பகுதி அது.பெரும் திகிலும், மர்மமும் அந்தக் கடற்பரப்பு முழுவதும் விரிந்து கிடக்கிறது.
இப்படி ஒரு அமானுஷ்யமான, ஆபத்தான கடற்பகுதி தங்கள் கடற்பரப்பில் இருக்கிறது என்று தைரியமாக செய்தி வெளியிட்டது ஜப்பான். அது, 1950ஆம் ஆண்டு, ஜப்பான் கப்பற்படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று,சிற்சில வீரர்களோடு கடல் எல்லைப் பாதுகாப்பிற்காக பயணித்துக்கொண்டிருந்தது. கப்பலின் ரேடார் தொடர்பு, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால்,கப்பல் ஜப்பானின் கிழக்கு கடற்பகுதி எல்லையும், பிலிப்பைன்ஸ் கடற் எல்லையும் தொடும் இடத்திற்கு சென்ற ஒரு சில நிமிஷத்திற்குள் சட்டென்று தொடர்பு முற்றிலும் அறுந்துபோனது. எந்த ஒரு சமிக்ஞைகளும் அந்த கப்பலில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை.
ஒன்றும் பிடிபடவில்லை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளுக்கு, எதிரி நாட்டு கப்பல்களோ, அண்டை நாட்டுக் கப்பல்கள் வந்ததற்கான எந்த ஒரு சமிக்ஞைகளும் கிடைக்காதபட்சத்தில், இந்தக் கப்பலின் தொடர்பு துண்டித்துப்போனது எதனால், என்று குழம்பிப்போய் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான, ஹெலிகாப்டர், படகுகளும் தேடுதலுக்கு உடனடியாக முடுக்கப்பட்டன. சல்லடைப்போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை, அந்த பாதுகாப்பு கப்பல்.
அதற்குப் பிறகுதான், 1950ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் இந்தக் கடற்பகுதி முற்றிலும் அபாயகரமானது. இந்தக் கடற்பரப்பில் எவரும் பயணம் செய்யவேண்டாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பை ஜப்பான் அரசு பகிரங்கமாய் வெளியிட்டது. அந்த இடத்திற்குப் பெயர் டிராகன் முக்கோணம் என்றும் ஜப்பான் அறிவித்தது.
கடற்பரப்பின் ஆழ்பகுதியில் டிராகன் உறங்கிக்கொண்டிருக்குமாம். கடற்பரப்பின் மேற்பகுதியல் செல்லும் கப்பலின் அதிர்வு சத்தம், டிராகனின் தூக்கத்தை கலைத்து விடுமாம். இதனால், ஆத்திரம் கொள்ளும் டிராகன் ஆவேசமாய் எழுந்திருக்குமாம், அப்போது கடல் அலைகள் பெரிய அளவில் ஆர்ப்பரிக்குமாம், பெரிய சூராவளிக் காற்று அப்பகுதியில் வீசி, அப்பகுதியில் வரும் கப்பலை காவு வாங்குமாம் என்று சூபி கதைகளைப்போல் டிராகன் முக்கோணமும் ஜப்பான் வாசிகளுக்கு கதைப்பொருள் ஆனது.
காணாமல் போன கப்பல்கள் குறித்த தேடுதல்கள் ஒருபுறம் இருக்க, செய்திகளில் வராமல் பல கப்பல்கள் காணாமல் போய்க்கொண்டுதான் இருந்தன. இந்நிலையில் 1989ஆம் ஆண்டு சார்லஸ் பெர்லிட்ஸ் எனும் எழுத்தாளர் தி டிராகன் டிரை ஆங்கிள் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். அந்த வருடத்தில் ஜப்பானில் அதிகப்படியாய் விற்பனையானது இந்தப் புத்தகம்தான். டிராகன் முக்கோணத்தில் இருக்கும் அமானுஷ்யம்தான் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலேயே அனைத்துப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்துபோயின. அதில் சார்லஸ் முக்கியமாய் குறிப்பிட்டது மூன்று விஷயங்கள். பெர்முடா முக்கோணத்தைப்போல, டிராகன் முக்கோணமும் சர்ச்சைக்குரிய பகுதிதான்.
1950ஆம் ஆண்டு ஜப்பான் அரசின் பாதுகாப்புப் படை கப்பல் காணாமல் போன செய்தியோடு, 1952 ஆம் ஆண்டு வாக்கில், ஜப்பானின் பாதுகாப்புப் படையில் உள்ள ஐந்து கப்பல்கள் இதே பகுதியில் காணாமல் போயிருக்கிறது. இந்தக் கப்பல்களில் இருந்த 700 பேரின் கதி என்ன என்பது குறித்து ஜப்பான் அரசு விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஜப்பான் அரசு ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியது. கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகள் திடீர் திடீரென்று வெடிப்பதாலேயே கப்பல்கள் விபத்துக்குள்ளாகி காணாமல் போகின்றன என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை என்பதும் காலப்போக்கில் வந்த ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின. டிராகன் முக்கோண ஆராய்ச்சிகளுக்காக ஜப்பான் அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறது. ஆனால், இன்னும் ஆராய்ச்சிகள்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஒரு செய்தி, கடல் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஜப்பான் மாணவர்களுக்கு, டிராகன் முக்கோணம்தான் முக்கிய கருப்பொருள். அத்துடன் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வேண்டிய செலவினங்களை ஜப்பான் அரசே மேற்கொண்டு வருகிறது.
ஆனால், இதற்கிடையில் 1972ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளிவரும் சாகா என்று ஒரு இதழ். இந்த இதழில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஐவான் டி. சான்டர்சன் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு கட்டுரையை எழுதுகிறார். விடைதெரியாத கேள்விகளை ஆராய்ச்சிசெய்வதில் வல்லவர் சான்டர்சன். இவர் கடற்பரப்பில் செல்லும் கப்பல், விமானங்கள் திடீர் திடீரென்று காணாமல் போவது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் உலக கடற்பரப்பில் சில பகுதிகளில் மட்டும் எலக்ட்ரோ மேக்னட்டிக் திறன் அதிகளவில் இருக்கிறது. இதனால், அந்தப் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை முழுவதும் இழந்து, விபத்துக்குள்ளாகிறது என்று அவர் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். ஆனால், இது உண்மையா என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதோடு அவர் விட்டுவிடவில்லை. பெர்முடா முக்கோணம், டிராகன் முக்கோணம் போன்று உலகம் முழுவதும் கடற்பரப்பில் 12 இடங்கள் இருக்கின்றன. நம்மை மிரட்டிக்கொண்டிருப்பவை பெர்முடா முக்கோணமும், டிராகன் முக்கோணமும் மட்டும்தான். மீதியுள்ள திகில் கடற்பகுதிகள் எப்போதுவேண்டுமானாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்கே ஆதிமனிதன்?இயற்கை தந்த கொடையில் ஆயிரம் ஆயிரம் விடைதெரியாத மர்மங்கள் ஒழிந்துகொண்டுதான் இருக்கின்றன. அது என்ன என்ற ஆராய்ச்சியில்தான், ஆராய்ச்சியாளர்களும் பகுத்தறிவாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். மர்மங்களும், அமானுஷ்யங்களும் இயற்கையில் மட்டுமல்ல, இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கிறது. அந்த வகையில் மனிதனும் ஒரு தேடலுக்கான கருதான். அவனும் அமானுஷ்யம் சார்ந்த ஒரு கேள்வியின் மையம்தான்.
நாம் வழிவழியாய் கேட்டுவந்த கதையின் கருவையும், கண்ட செய்திகளையும் வைத்துத்தான் இந்தக் கட்டுரையில் மனிதனைப்பற்றி ஆராயவிருக்கிறோம். சொல்லும் விஷயங்கள் அனைத்தும் கட்டுக்கதை அல்ல. வரலாறும் ஆராய்ச்சியும், புராணங்களும் தந்த செய்திகள்தான்.
தினப்படியான செய்தித்தாள்தான். வழக்கம்போல அரசியல், கொலை, கொள்ளை, கற்பனை, கற்பழிப்பு செய்திகளுக்கு ஊடே ஒரு கணம் நம் மனதில் இனம்புரியாத ஆச்சர்யத்தையும், சொல்லமுடியாத கேள்வியுமாய் தாங்கி வந்தது படத்துடன் வந்த அந்த செய்தி.
அது 2001 ஆம் ஆண்டு. அரபு நாட்டில் ஒரு மூலையில் மிகப்பெரிய மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாய் செய்தி. மனித எலும்புக்கூடு அருகே இன்றைய மனிதர்கள். 50லிருந்து 60 தற்கால மனிதர்களைச் சேர்த்தால் கிடைக்கும் மனித எடையில் இருந்தது, அந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு. அந்தப் படத்தைப் பார்ப்பதற்கே திகைப்பாய் இருந்தது. இது உண்மையா...? கிராபிக்ஸா...? புரியவில்லை. ஆனால், மனதை மட்டும் பிசைந்தது ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.
அதேபோல 2004ஆம் ஆண்டு, இந்தியாவில் பாலைவனப்பகுதியில் கிட்டத்தட்ட 13 மீட்டர் உயரத்தில் அதேபோல ஒரு மனித எலும்புக்கூடு. செய்தித்தாள் ஆரம்பித்து இணையதளம் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. ஏற்கனவே கேள்விப்பட்ட செய்தி. அப்படியானால், இது ஓரளவு உண்மையாய் இருக்கலாமா என்று திகைப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய உடல்வாகில் மனிதன் பூமியில் வாழ்ந்திருக்க முடியுமா? அப்படி வாழ்ந்திருந்தால், அவன் வாழ்வாதாரம் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை விரிந்துகொண்டே போக, இதெல்லாம் சும்மா கிராபிக்ஸ். கப்சா... பேப்பர் விக்கிறதுக்காக பண்ற டிரிக் என்ற பேச்சு மறுபக்கம். நாள்கள் ஓட ஓட அந்தச் செய்தியையும் காற்றோடு கலந்துபோய்விட்டது.
இவ்வளவு உயரத்தில், அசுர தோற்றத்தில் மனிதன் ஏன் வாழ்ந்திருக்கக்கூடாது? சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் நம்பும் நமக்கு, சாஸ்திரங்களிலும், புராணங்களில் கூறப்பட்ட கதாபாத்திரங்கள் ஏன் உண்மையாகக் இருக்கக்கூடாது...?

இலங்கை நாட்டில் கண்டியில் உளள அருங்காட்சியகத்தில் புத்தரின் பல், பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்லின் அளவை வைத்துப் பார்க்கும்போது, புத்தரின் உயரத்தை கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு உயரமானவரா? என்ற கேள்வி நம்முன் எழும். அதுமட்டுமல்லாமல் மாநில தலைநகரங்களில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் போர்த் தளவாடங்களைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய வாள், இவ்வளவு எடைகொண்ட கவச உடைகளை அணிந்துகொண்டு எப்படி மனிதர்கள் போரிட்டிருப்பார்கள்? இவ்வளவு எடையை தாங்கும் சக்தி அவர்களுக்கு இருந்தால், அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்ற கற்பனையும் நம் மனதில் எழாமல் இல்லை.

வேதத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் தோன்றிய இனம் நெஃபிலிம். இந்த இனத்தில் உள்ள மனிதர்கள் மிக மிக உயரமானவர்களாக இருந்ததாக விவிலியம் கூறுகிறது. அதற்குப் பின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இயற்கை மாற்றத்தினால், அத்தகைய இனம் கூண்டோடு அழிந்துபோய்விட்டது என்று ஆராய்ச்சி சொல்கிறது. அதற்குப் பின் இஸ்ரேல் நகரத்தில் கோலியாத் போன்ற மிக உ<யரம் கொண்ட மனிதன் சக மனிதர்களை அடித்துக்கொன்று துன்புறுத்திக்கொண்டே இருப்பான். அந்த அரக்க மனிதனை அதே நகரத்தில் வசித்து வரும் ஆடு மேய்க்கும் தாவீது என்ற சிறுவன் கவன் மூலம் அடித்துக்கொல்வதாய் கதை இருக்கும். இந்தக் கதை உண்மை என்பதை, பிரான்ஸ் நாட்டில் 13ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஓவியம் பரைசாற்றுகிறது.
இந்துப் புராணங்களில் உள்ள கதையைப் படிக்கும்போது தேவர்களை அசுரர்கள் அடித்து துன்புறுத்துவதாய் படித்திருப்போம். அசுரர்களும் மிக மிக உயரம் கொண்டவர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்லாமியத்தில், முகமது நபியும் மிக மிக உயரம் கொண்டவராகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான்,
ரோமானிய இனம், கிரேக்கம், பல்கேரியன், நார்ஸிய இனத்தவர்களின் மதப் புராணங்களில் தங்களின் கடவுள் மிக உயரம் கொண்டவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்.
நிஃப்லிம் இன மனிதர்கள் கோலியாத்தின் உயரத்தைவிட நான்கு மடங்காக இருந்திருக்கிறார்கள் என்றால், கோலியாத்தின் காலத்தில் நிஃப்லிம் இனத்தை விட உயரம் குறைந்துபோயிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இன்றைக்கு இருக்கும் மனிதனின் சராரசரி உயரம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும்...?
புராணங்களில் கூறப்பட்ட கதை மாந்தர்களும், கடவுளர்களும் மிக உயரமான மனிதர்களாக இருந்திருப்பார்களேயானால், அன்றைய வாழ்க்கை நிலையும் சமுதாயமும் எப்படி இருந்திருக்கும். அத்தகைய மனிதர்கள் எப்படி அழிந்துபோனார்கள். தற்போது கூட கோடியில் ஒன்று, உலகத்தில் ஏதோ ஒரு சில இடங்களில் 7.3 அடி உயர அதிசய மனிதர், 7.5 அடி உயர மனிதர் என்று நாம் படிக்கும் செய்திகள் கூட நம் மூதாதையர்களின் ஜீனின் தொட்டக்குறை விட்டக் குறைதானோ?
கதை, கற்பனை என்று நாம் நம்பிக்கொண்டிருந்த சில விஷயங்கள் நம் கண் முன் ஆதாரமாய் மண்ணைப் பிளந்து வந்துகொண்டிருக்க, பல்வேறு கேள்விகள் நம் எண்ணங்களிலும் கற்பனைகளிலும் புதிது புதிதாய் முளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், விடைகள் மட்டும் அமானுஷயமாய் நம்மை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

கடலுக்கடியில் பிரமிடு!


உலகம் எப்படி தோன்றியிருக்கும். ஒரு செல் உயிரி அமீபாவில் தோன்றி அப்படியே பல்கிப் பெருகி இருசெல் உயிரி தோன்றியி மனித இனம் தோன்றியிருக்குமா? என்ற ஆய்வு இன்னும் நடந்துகொண்டிருக்க, இல்லை.. இல்லை.. முதலில் உலகத்தில் பிறந்தது ஆதாமும், ஏவாளும்தான் அதற்குப்பிறகுதான் மனிதச் சமூகம் பல்கிப் பெருகியது என்று ஆன்மீக ரீதியாக விவிலியம் எடுத்துரைக்க, எப்படியிருந்தாலும், மனிதனின் ஆராய்ச்சி மட்டும் இன்னும் விட்டபாடில்லை. எப்படி இந்த பூமிப்பந்து உருவாகியிருக்கும். பூமிப்பந்து உண்øயிலேயே கொலம்பஸ் சொன்னது மாதிரி கோள வடிவில்தானா என்ற ஆராய்ச்சியும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
எப்படியிருப்பினும் பூமி எப்படி உருவாகியிருக்கும் என்ற மனிதனின் ஆர்வமும், ஆசை மட்டும் இன்னும் அடங்கவில்லை. டைனோசர் கண்டுபிடிப்பிலிருந்து எகிப்தில் கிடைத்திருக்கும் மம்மிக்கள் கூட மனிதனின் பிறப்பு ரகசியத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலின் ஒரு நிலை என்று சொன்னால்கூட அதை மறுப்பதிற்கில்லை. எலக்ட்ரானையும், நியூட்ரானையும் மோத வைப்பதன் மூலம் அண்டம் எப்படி உருவாகியிருக்கும் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்ற உலக நாடுகளின் பில்லியன் டால் செலவில் மேற்கொண்டிருக்கும் அண்ட வெடிப்பு ஆராய்ச்சிக்கூட மனிதனின் பிறப்பு ரகசியத்தை தெரிந்துகொள்வதற்காக மட்டும்தான்.
இந்தச் செய்திகளை செய்திகளாக படிக்கும்போதும், கேள்விப்படும்போதும் மற்ற செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இத்தகைய செய்திகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கத்தான் செய்கிறோம். போகும்போது எங்க போற என்று கேட்டால், போகிற காரியம் உருப்படாது, கெவிலிச் சத்தம், தும்மல் போன்றவற்றைக் கூட நடக்கப்போகும் விஷயத்தின் சமிக்ஞைகளாக எடுத்துக்கொள்ளும் நம்மவர்களுக்கு, இப்போது அடிக்கடி கேள்விப்படும் விசித்திரமான விஷயங்கள் கூட எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஏதோ ஒன்றிற்கான எச்சரிக்கை மணியாகக்கூட இருக்கலாமோ என்ற உணர்வும் மனதில் லேசாக இருக்கத்தான் செய்கிறது. மயன் காலண்டர் ஆரம்பித்து, விவிலியம் வரை உலகம் அழியப்போகும் ஆண்டை பல ஆயிரம் முன்னரே தெளிவாகச் சொல்லியிருக்க, நாம் பார்த்துக்கொண்டிருக்கிற எகிப்து பிரமிடுகளும், மம்மிக்களும், சுனாமியும் எச்சரிக்கை மணிதானா? இந்த எச்சரிக்கை மணி எதற்காக? இப்போது நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவாலான புவிவெப்பமயதாலும் இந்த எச்சரிக்கை மணியின் ஒரு அங்கம்தானா? என்ன நடக்கப்போகிறது...? திக் திக்.. மனதுடன் இனி வரப்போகிற வாரங்களில் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் வித்தியாசமான அமானுஷ்யமான கண்டுபிடிப்பும், ஆராய்ச்சிகளும், மேலே நான் சொன்ன கேள்விகளுக்கு விடையாகக் கூட இருக்கலாம், யார் கண்டது? நாம் இங்கே தரப்போகும் அமானுஷ்யமான கட்டுரைகளும் அந்த வகையறாக்கள்தான்.

சம்பவம் நடந்தது 41 ஆண்டுகளுக்கு முன். அது 1970ஆம் ஆண்டு. இந்தோனேஷியா நாட்டு கடல் பரப்பு, பஹமாஸ் பகுதி.. கிட்டத்தட்ட பேரி தீவுக்குஅருகில் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். கடல் அலைகள் அந்த அளவிற்கு இல்லை. மிதமாக, மிகவும் மிதமாகத்தான் இருந்தது. படகு கிழித்துச் செல்லும் தண்ணீர் சத்தத்தைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை. எங்கும் நிசப்தம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அங்கு சின்ன கப்பல் கூட தென்படவில்லை. அந்த கடல் பரப்பில் ஒரு படகில் இரண்டு உதவியாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தார் டாக்டர் பிரவுன்.
பிரவுனுக்கு எப்போதும் கடலுக்குள் இருக்கும் விசித்திர மீன்கள், பாறைகள், செடி வகைகள் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்வது வழக்கம். கிடைக்கும் உயிரினங்கள், செடிகள் இவற்றிலிருந்து ஏதேனும் மருந்து தயாரிக்கலாம் என்பதுதான் இவரின் ஆராய்ச்சி. இருந்தபோதிலும். கடலின் தரை மட்டம் வரை சென்று அங்கு வாழும் ஜீவராசிகளைப் பார்ப்பது என்பது பிரவுனுக்கு எப்போதும் அலாதியான ஒரு சுகம்.
அப்படித்தான் அன்றும் பிரவுனுக்கும் நிகழ்ந்தது. பேரி தீவு அவருக்கு பரிட்சயம் இல்லாத பகுதிதான். தன் ஆராய்ச்சிக்கான ஏற்பாட்டிற்கு தயாரானார் பிரவுன். அதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்துகொண்டு, தன் உதவியாளர்களுக்கு கையசைத்துவிட்டு அந்த கடல் பரப்பில் குதித்தார்.
அழிந்துபோன மாபெரும் ஒரு நகரம், ஒரு அதிசயம் பார்க்கப்போகிறோம். அந்த கடற் பகுதி, வரும் காலங்களில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஆராயச்சிக்கான இடமாக மாறப்போகிறது என்பதை அதுவரை டாக்டர் பிரவுன் அறிந்திருக்கவில்லை.
வழக்கமான புத்துணர்ச்சியுடன் மெல்ல மெல்ல கடல் அடிப்பரப்பிற்கு நீந்தி சென்று கொண்டிருந்தார் டாக்டர் பிரவுன்.
வண்ண வண்ண மீன்கள், பிரவுனுக்குப் போட்டியாக நீந்திக்கொண்டிருக்க, எல்லாவற்றையும் தொட்டு தடவிக்கொண்டு புத்துணர்ச்சியோடு தன் காமிராவால் உள்ளே படம் எடுத்துக்கொண்டும் விசித்திரமான செடிகளை கையில் ஒரு சிலவற்றை பறித்துக்கொண்டும் இருந்தார். கடல் மட்டத்திற்கு மேலிருந்து தன் உதவியாளர்கள் தாங்கள் இருப்பதற்கான சமிக்ஞைகளும் தந்துகொண்டிருந்தார்கள். ஒரு சில மணி நேரங்கள் கடந்திருக்கும். கிட்டத்தட்ட பல அடி தூரத்தில் பளிச் பளிச்சென்று வெளிச்சம். மிகப்பெரிய கட்டடங்கள் இருப்பதுபோன்ற ஒரு பிரமை. கையில் பறித்த செடிகளை எல்லாம் ஒவ்வொன்றாய் அவரின் கையில் இருந்து நழுவ ஆரம்பித்தன. அவரின் கண்கள் எல்லாம் தூரத்தில் ஒளிர்ந்த வெளிச்சம்தான். வேக வேகமாக நீந்திச் செல்ல ஆரம்பித்தார். இன்னும் கொஞ்சம்... தொட்டும் விடும் தூரம்தான். தன் கண்ணாலேயே நம்ப முஐயவில்லை பிரவுனுக்கு. கிட்டத்தட்ட 120 அடி உயரம் இருக்கும். இன்னும் கூட உயரமாக இருந்திருக்கலாம். பிரவுனால் அதை அனுமானிக்க முஐயவில்லை. ஆனால், இவரின் தலைக்கு மேல் அந்த வர் இன்னும் 60 அடி உயரம் கூட இருக்கலாம். பளிச்சென்று கண்ணைக் கவரும் ஒளிவந்தது அந்த வற்றில் இருந்துதான். அப்படியே மெதுவாக அந்த சுவற்றை தொட்டவாறே நீந்த ஆரம்பித்தார். அது கண்டிப்பாக ஒரு பிரமிடாகத்தான் இருந்தாக வேண்டும் என்பது பிரவுனின் தீர்மானம். கொஞ்சம் தொலைவு நீந்திச் சென்ற பிறகு உறுதி செய்துகொண்டார். கொஞ்சம் படிக்கட்டுகள், அந்த பிரமிடு பகுதியில் இருந்து இறங்கிச்சென்றது. தொலைவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து உருக்குலைந்து போன கட்டடங்களின் அடையாளங்கள். எல்லாமே பாசி படர்ந்து, கடற்செடிகள் முளைத்துக்கிடந்தன. ஆனால், அந்த பிரமிடு மட்டும் மிக உயர்ந்த கற்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது பிரவுனின் அனுமானம். அதற்கு மேலும் பிரவுனால், கடலுக்கடியில் இருக்க முடியவில்லை. தான் கண்ட காட்சிகளை வெளியில் வந்த பிரவுன் தன் உதவியாளர்களிடம் கூறினார். அவர்களாலும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இந்தச் செய்திகள் செய்தித்தாளில் கொட்டை எழுத்துக்களுடன் பிரசுரமானது. பிரவுன் ஒரே இரவில் பிரசித்தியானார். கண்ட காட்சிகள் குறித்து ஆச்சர்யம் அடங்காமல் தன் சகாக்களிடம் கூறி அங்கலாய்த்தார்.
இந்த செய்தி கடலியல் ஆராய்ச்சியாளர்களுக்க மிகப்பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்தன. ஊகங்களும், அனுமானங்களும் தொடர்ந்து செய்திகளாக வெளிவந்தன. இருந்தாலும், அதற்கான மறுப்புச் செய்திகளும் உடனுக்குடன் வெளிவந்துகொண்டுதான் இருந்தன. இப்படி ஒரு நகரம் எப்படி கடலுக்குள் மூழ்கியது. சுனாமியால் அழிந்து போனதா? அல்லது இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றம், பூகம்பத்தால், இப்படி கடலுக்குள் சென்றுவிட்டதா என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ஆராய்ச்சியாளர்களின் மூளைகளை குடைந்தது. இறுதிக்கட்டமாக, லண்டனில் இருந்து வெளிவரும் ரூட்டர் செய்தித் தளத்தில் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு செய்தியை வெளியிட்டனர்.
அழிந்து போன அந்த நகரம் உண்மையிலேயே மிகப்பெரும் சுனாமியினால் அழிந்துபோயிருக்கலாம். இந்த நகரத்தின் வடிவமைப்பு, கட்டுமானம் இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ரஷ்ய கலாச்சாரத்தின் ஆரம்ப இடம் இந்த நகரமாக இருக்கக்கூடும் என்ற தகவலை வெளியிட்டனர். ஆனால், இதுவும் ஒரு அனுமானம்தான். உண்மையான வரலாறை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தோனேஷியாவில் தொலைந்து போன அந்த நகரம் மட்டும் அல்ல; சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட பூம்புகார் நகரமும் அழிந்துபோனதும் இப்படித்தான். புவிவெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரும். இதனால், கடலோர நகரங்கள் அழிந்துபோகும் என்று விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கூறுவதும் உண்மையே. ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புவிவெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் இருந்திருக்குமா? அதனால்தான் பல நகரங்கள் அழிந்து கடலுக்குள் போய்விட்டதா என்ற மில்லியன் டாலர் கேள்விகள்தான் ஆராய்ச்சியாளர்களிடையே எழுந்துகொண்டுதான் இருக்கிறது. மேலே கூறப்பட்ட விடைதெரியாத விசித்திரங்கள் உலகம் முழுவதும் விரிந்து கிடக்கிறது. எல்லாமே எதிர்காலத்தின் ஜாதகத்தைச் சொல்லும் சமிக்ஞைகளாகக்கூட இருக்கலாம், இந்த விசித்திரங்கள்.