இந்த பிரபஞ்சம் முழுவதும் விசித்திரம் நிறைந்து கிடக்கிறது. இன்று எதெல்லாம் புதுமை, கண்டுபிடிப்பு என்று தலையில் வைத்துக்கொண்டாடுகிறோமோ அதெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்திருக்கிறது. அப்படியானால், நம்மைவிட முன்னோர்கள் திறமையானவர்களா, இன்று நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிவாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் நம் முன்னால் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
நம் தாத்தாப் பாட்டிக் காலங்களில் பச்சைக் குத்துவது என்பது சர்வ சாதாரணம். அது அப்படியே நாகரிகம் கருதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது. ஆனால், இன்று மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களும், இளைஞிகளும் கை, கால் ஆரம்பித்து உடம்பில் சகல இடங்களிலும் டாட்டூஸ் வரைந்துகொள்கின்றனர். இன்று நம் இளைஞர்கள் எது பேஷன் என்று கலர் கலராய் உடலில் வரைந்துகொள்கிறார்களோ, அதே டாட்டூஸ் 5000 ஆண்டுகளுக்கு முன், ஒரு இனத்தின் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினரை தனியே பிரித்துக் கண்டறியும் ஒரு அடையாளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால்... அது வியப்புக்குரிய விஷயம்தானே!.
பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் ஜோன் பெட்ச்சர். ஜோனுக்கு மனித நாகரிகம் பற்றிய வளர்ச்சியை தெரிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல்தான். அதனால், பல்கலைக்கழகத்துக்கு வருவது என்னவோ சொர்ப நாள்கள்தான். பெரும்பாலான நாட்கள் தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஊர் ஊராக சுற்றுவதுதான் அவருக்கு வேலை. அப்படித்தான் அன்றும் நடந்தது. 1991ஆம் ஆண்டு. இத்தாலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பனிக்கொட்டும் ஆல்ப்ஸ் மலை அது. அந்த மலைதான் ஜோனுக்கு மனித நாகரிகத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இடமாக இருந்தது. மலைகளின் பல இடங்களில் தோண்டிப் பார்த்தாகிவிட்டது. கிடைத்தது என்னவோ, மலை ஆடுகளின் எலும்புகளும், விலங்குகளின் படிமங்களும்தான். ஆனால், அந்தப் படிமங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துகிடந்த படிமங்கள்தான். இருந்தாலும் மனம் தளரவில்லை ஜோன். அந்தப் பனிப் பிரதேசத்தின் ஒரு மூலையில் விசித்திரமான ஒரு ஐஸ்கட்டி பாறைகளுக்கு இடையில் கிடந்ததைப் பார்த்தார். அந்த விசித்திர ஐஸ் கட்டியை எப்படியாவது உடைத்துப் பார்த்துவிட வேண்டும். அதில் நம் தேடலுக்கான விடை கிடைக்கலாம் என்பது ஜோனின் எண்ணம். பாறைகளுக்கு ஊடே சிக்கிக் கிடந்த அந்த விசித்திர ஐஸ் கட்டியை பெரும் பாடுகளுக்கு இடையே ஜோன் தன் மாணவர்களுடன் உதவியுடன் எடுத்தார்.
ஐஸ் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஒரு மனிதன் என்று. ஜோனுக்கு ஒருபுறம் அதிர்ச்சி என்றாலும், மனிதனின் கலாசாரத்தை சொல்லப்போகும் ஒரு பொக்கிஷமாக அந்த சடலம் தெரிந்தது ஜோனுக்கு. பாதுகாப்புடன் தன் சோதனைக் கூடத்திற்கு அந்த சடலத்தை எடுத்து வந்தார். கூடிப்போனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதனின் சடலமாக இருக்கலாம் என்பதுதான் ஜோனின் கணிப்பு. கார்பன் வயது சோதனைக்கு அந்த சடலத்தை உட்படுத்தியபோது, அந்த சடலம் கிட்டத்தட்ட 5,200 ஆண்டுகளுக்கு முட்பட்டது என்பது தெரிய வந்தது.
5200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சடலம் அப்படியே கிடைத்தது, ஜோனுக்கு ஆச்சர்யம். சடலத்தில் முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால், மூட்டு பகுதிகளில் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தொடர்ச்சியாய் வட்டமாகவும் கோடாகவும் தெரிந்தது. என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஜோன் ஈடுபட்டபோதுதான் அது டாட்டூஸ் என்பது தெரிய வந்தது. இந்த ஆய்வை ஜோன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது, அக்குபஞ்சர் மூலம் நோய்களை எப்படி தற்காலத்தில் குணப்படுத்துகிறார்களோ அதேபோல ஒரு வைத்தியமுறையாக டாட்டூஸை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள். ஆனால், அதுவல்ல உண்மை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து மம்மிக்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தபோது, ஒரு சில பெண் சடலங்களில் இதேபோல டாட்டூஸ் ஓவியங்கள் காண முடிந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை அவர்கள் வாழ்ந்திருக்கவில்லை. அதனால், அந்த இனத்தில் சில பெண்களுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். அதனால், அந்தப் பெண்களை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே கைகளிலும் கால்களிலும் அவர்கள் பச்சைக் குத்தியிருக்கலாம். அதன்மூலம் மற்ற ஆண்கள் அவர்களை நெருங்காமல் இருந்திருக்கலாம் என்பது மற்றொரு தரப்பின் ஆராய்ச்சி.
பச்சைக் குத்தும்முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது மம்மிக்களுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசிப் போன்ற பொருள்கள், முற்றிலும் டாட்டூஸ் வரைவதற்கான கருவிதான் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வரைந்து வைத்திருந்த பெண் ஓவியங்களில் கூட டாட்டூஸ் வரையாமல் விட்டுவைக்கவில்லை. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில் கர்ப்பம் தரித்த பெண்கள் பிரசவ காலத்தில் பிரசவ வலியை குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் கிடைத்த மம்மிக்கள் சடலங்களில் தொடை மற்றும் அடிவயிறு, மற்றும் மார்பகங்களிலேயே அதிகளவில் டாட்டூஸ் வரையப்பட்டிருக்கிறது என்று இன்னொறு ஆராய்ச்சி சொல்ல, இல்லவே இல்லை பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் எகிப்திய காலத்தில் டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைத் தேர்ந்தவர்கள், அவர்களின் கலை ரசனைக்கான ஒரு அடையாளம் மட்டுமே இந்த டாட்டூஸ் என்கிறது இன்னொரு ஆராய்ச்சித் தரப்பு.
எகிப்து ஆரம்பித்து அதன்பின் கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து போன்ற அகழ்வாராய்ச்சியிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூஸ் வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1700 ஆம் ஆண்டுகள் வாக்கில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக மக்கள் அடிமைகளாகவும், நாடோடிகளாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மூலமாகவே டாட்டூஸ் கலை பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாமல், இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் அது. தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டி மலைகளில் ஏராளமான கல்லறைகள். அந்தக் கல்லறையில் சடலங்களாக அடைப்பட்டுக் கிடந்தது மன்னர் குலத்து தளபதிகள். கல்லறைகள் முழுவதும் உறைந்த பணியால் முழுவதும் மூடிக்கிடந்தன. அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு கல்லறைகளை தோண்டினார்கள் அகல்வாராய்ச்சியாளர்கள். அந்த சடலங்களில் பெரும்பாலான சடலங்களில் விளையாட்டு மற்றும் விலங்குகளைக் குறிக்கும் டாட்டூஸ் வரையப்பட்டிருந்தது என்கிறது வரலாறு.
வாணிபம், போர், உள்நாட்டுக் கலவரம் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இன்று நாம் கொண்டாடும் டாட்டூஸ் வரையும் பழக்கம் பரவியுள்ளது. ஒவ்வொரு ஆராய்ச்சித் தரப்பும் டாட்டூஸிற்கு ஒவ்வொரு காரணங்களை முன்வைத்தாலும், டாட்டூஸ் தோன்றியது எகிப்தில்தான் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. அப்படியானால், மனித இனத்தின் நவீன ம், பொழுதுபோக்கு, கலைகள் எல்லாவற்றுக்குமே எகிப்துதான் முன்னோடியா...? ஆராய்ச்சிகள் நீள்கிறது!