சில நாட்கள், சில மணித்துளிகள், சில விநாடிகள் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாது. அத்தகைய மிகப்பெரும் வரலாற்றைப் பெற்றுத் தந்த நாள்தான் 7 ஜூன் 1893.
இந்தியாவின் தேசப்பிதா என்று சொன்னவுடன் டக்கென்று நம் நினைவுக்கு வரும் பெயர் மகாத்மா காந்தி. சாதாரன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை தேசப்பிதா மகாத்மா காந்தியாக இந்தியாவிற்கு பெற்றுத் தந்த அந்த நாள்தான் 7 ஜூன் 1893.
அகிம்சை முறையில் இந்தியாவிற்கு சுதந்தரத்தைப் பெற்றுத் தந்த அந்த மாபெரும் மனிதர், தன் வாழ்நாளில் 25 சதவீதம் வாழ்ந்த இடம் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர். காந்தி வாழ்ந்தது மொத்தம் 79 ஆண்டுகள். இங்கிலாந்து நாட்டில் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் கல்வி நிலையத்தில் பெற்ற பாரீஸ்டர் பட்டத்துடன் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி காலடி வைத்தபோது அவருக்கு வயது 24. அதிலிருந்து 20 ஆண்டுகள் அவர் வாழ்ந்தது டர்பன் நகரில்தான்.
அங்குதான் அவர் முதன்முதலில் நிறவேற்றுமையின் கொடுமையும் அடிமை வாழ்க்கையின் அவலத்தையும் கண்முன் கண்டார். 1893ம் வருடம், தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள தாதா அப்துல்லா என்ற வியாபாரியின் வழக்கு விஷயமாகத்தான் இந்தியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்றார் காந்தி.
காந்தியின் விருப்பத்தின்பேரில், பிரெட்டோரியா நகரத்தின் வட பகுதிக்குச் செல்வதற்காக, காந்திக்கு முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் தாதா அப்துல்லா. அந்த லோகோமோட்டிவ் என்ஜின் பொருத்திய அந்த ரயில் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு ஐரோப்பியன் காந்தி பயணம் செய்துகொண்டிருந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வருகிறார். வெள்ளையர் அல்லாத எவரும் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யக்கூடாது என்று காந்தியின் உடைமைகளை வெளியே எறிந்து, காந்தியை வெளியேற்றுகிறார். அந்த ரயில்நிலையம் பீட்டர்மேரீட்ஸ்பெர்க். அன்று ஜூன் 7ம் தேதி.
அந் ஒரு சம்பவம்தான் காந்தியை நிறவேற்றுமைக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிக்கொணர உதவியது. அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் காந்தி வசித்தது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள். இந்த விஷயங்களை எல்லாம் காந்தியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாள்தான் அகிம்சை முறையில் என்னை போராட வைத்தது என்ற வாசகத்துடன் எந்த ரயில் நிலையம் அமைந்திருந்த பீட்டர்மேரிட்ஸ்பெர்க் நகரத்தில் இன்றும் அவர் சொன்ன வாசகத்துடன் அந்த சிலை கம்பீரமாக அந்த நகரின் பிரதான சாலையில் நிற்கிறது.
இந்தியாவின் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகள் டர்பன் நகரில் வாழ்ந்த அந்த மகாத்மாவின் வீடு எப்படி இருக்கிறது தெரியுமா? எந்த நபரும் செல்ல முடியாத ஒரு பகுதியாக, சமூக விரோத குற்றங்கள் நிகழும் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது என்று, தன் நெஞ்சக் குமுறல்களை நம் முன் வைக்கிறார் சென்னை பிரசிடன்சி கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் ஏழுமலை.
நான் சில மாதங்களுக்கு முன் டர்பன் நகரில் உள்ள டர்பன் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக சென்றிருந்தேன். அங்கு சில வாரங்கள் நான் தங்க வேண்டியிருந்தது. டர்பன் பல்கலைக்கழகத்தின் கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா? இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பேத்தி ஈலா காந்திகாந்திதான் (காந்தியின் இரண்டாவது மகன் மணிலாலின் மகள்) அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.
பார் போற்றும் அந்த உத்தம தலைவரின் வாரிசை நேரில் சந்தித்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. ஈலா காந்திக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் அச்சு அசப்பில் காந்தியைப் போலவே. ஈலா காந்தி என்னை அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். விருந்து உபசரணைகளுக்கு நடுவே தன்னுடைய தாத்தா இந்தியாவில் வாழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி பேசி நெகிழ்ந்தார். அவர் குடும்ப புகைப்படத்தை என்னிடம் காட்டினார். அதோடு, கெட்டதைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே என்று சொல்லும் காந்தியி பயன்படுத்திய அந்த மந்திரச் சொல்லின் அடையாள குரங்கு பொம்மைகள் நமக்குத் தெரியும். ஆனால், காந்தி தன்னுடைய வீட்டில் தன் மேஜையில் வைத்திருந்த பொம்மையை இன்னும், ஈலா காந்தி தன் வீட்டு வரவேற்பறையில் வைத்திருந்தார்.
அப்போது காந்தி வாழ்ந்த வீட்டை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களிடம் கூறியபோது, வேண்டாம் அது ரொம்ப டேஞ்சரான இடம் என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பலரிடம் விசாரித்தபோதும் அதே பதில்தான். என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அவர் வாழ்ந்த இடத்தில் என்னதான் பிரச்னை? கடைசியாக அங்கு பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு கார் டிரைவர் என்னை அங்கு அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால், அதுவும் நிபந்தனையின் பேரில்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் வீட்டின் வெளிப்புறத்தை படம் எடுக்க முயற்சிக்காதீர்கள் உயிருக்கே வினை வந்துவிடும் என்று எச்சரித்தார் அந்த கார் டிரைவர். அதோடு, மிகவும் சமூக விரோத செயல்கள் நடக்கும் அந்த இடத்தில் பத்து நிமிடத்திற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப வர முடியாது என்றும் மறுபடியும் எச்சரித்தார் அவர்.
ட ர்பன் நகரில் இருந்து கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் துõரத்தில் இருந்தது. காந்தி செட்டில்மென்ட் என்ற அந்தப் பகுதி. காந்தி வாழ்ந்த வீடு மற்றும் அந்தப் பகுதியை அவ்வூர்வாசிகள் அப்படித்தான் சொல்கிறார்கள். வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் அந்தப் பகுதிக்கு ஆண்கள் எவரேனும் நுழைந்தால், கையில், பையில் வைத்திருக்கும் பணத்தை பிடுங்கிக்கொண்டு அடித்து அனுப்பிவிடுவார்கள். இல்லை கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்களாம். அந்நிய பெண்கள் அங்கு நுழைந்தால் கற்பு சூறையாடப்படும். அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான பகுதியாம் அது. கார் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. காந்தி இருந்த வீட்டைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மனம் என்னவோ திக்திக் என்றே இருந்தது.
வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நூறு அடி தொலைவில் காரை நிறுத்தினார் டிரைவர். காந்தியின் வீடு சாதாரணமாய் இருந்தது. அவர் வீட்டைச் சுற்றிலும், குடிகாரர்களும், போதைப் பொருள் விற்பவர்களும் என்று அவர் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பால் நிறைந்து கிடந்தது.
கேமராவை இப்போ வெளியே எடுத்தா பிரச்னை என்று நினைத்து, மெது மெதுவாய் நகர்ந்து ஒருவழியாய் அவர் வீட்டை அடைந்தேன். காந்தியின் நினைவிடமாக இருக்கும் அந்த வீடு, எந்த ஒரு பாதுகாப்பு வசதியுமின்றி யார் வேண்டுமானாலும், உள்ளே சென்று வரலாம் என்பது போல்தான் இருந்தது. காந்தி வாழ்ந்த அந்த வீட்டின் வெளிப்புறம் முகம் சுழித்த அளவிற்கு வீட்டின் உள்புறம் இல்லை. வீட்டை யாரோ தினமும் சுத்தம் செய்வார்கள் போலிருக்கிறது. வீட்டின் உள்புறம் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. என் கேமராவால் காந்தி இருந்த வீட்டை படம் பிடித்துவிட்டு, அங்கிருந்து பிழைத்தால் போதும் என்று ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டேன்.
நம் நாட்டின் தேசப்பிதா வாழ்ந்த இடம் அன்றைய பொழுது இந்தியர்கள் பலர் வாழ்ந்த இடமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்று சாதாரண மனிதர்கள் கூட நுழைவதற்கே அச்சம் நிறைந்த பகுதியாக அந்தப் பகுதிய மாறியிருப்பதை நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இவ்வளவிற்கும் டர்பன் நகரில் இந்திய தூதரகம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் ஏன் இன்னும் இந்தப் பகுதியை செப்பனிட்டு, அவரின் நினைவிடத்தை பாதுகாப்பாக்க முயற்சிக்கவில்லை என்ற கேள்வி மட்டும் என்னுள் எழுந்துகொண்டே இருந்தது.
தேசப்பிதா மகாத்மா காந்தி பெற்றுத் தந்த சுதந்திர காற்றை 65வது ஆண்டாக சுவாசிக்கப்போகும் நமக்கு, அவர் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் அந்த வீட்டை செப்பனிடுவது நமது இந்திய அரசின் கடமை அல்லவா?