Tuesday, January 10, 2012

அஸ்ஸாம் முகா பட்டு!





ஒரு நாட்டின் கலாசாரம் என்பது அந்த நாட்டின் பேசும் மொழி, சடங்குகள், அணியும் ஆடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், சாஸ்திரங்கள் இப்படி அனைத்துவகையான அம்சங்களின் ஒட்டுமொத்த கலவைதான்.  இந்தியாவை பொருத்தவரை விருந்தோம்பல், ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் விஷயங்கள்தான் இன்றுவரை கலாசார அடையாளங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
திருநெல்வேலி என்றால் அல்வா, திண்டுக்கல் என்றால் பூட்டு, மணப்பாறை என்றால் முறுக்கு என்று மாவட்டங்களைச் சொன்னதும் அதன் அடையாளங்கள், பெயரை ஒட்டியே சொல்கிறோம் அல்லவா? அதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு சிறப்பு விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவின் வட கடைக்கோடிக்கு அருகே இருக்கும் இந்த மாநிலத்தின் பெயரைச் சொன்னவுடன் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது டீ. சர்வதேச அளவில் டீ உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதற்கு காரணம் அஸ்சாமில் உற்பத்தி செய்யப்படும் டீயை குறிப்பிடலாம். அஸ்ஸாம் என்றாலே டீ என்று சொல்லும் நமக்கு அஸ்சாமின் கலாசார அடையாளமாக இருக்கும் முகா பட்டுப்புடவையைப் பற்றி யாரும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. ஆனால், டீ யை விட கலாசாரத்திலும், அம்மாநில மக்களின் கௌரவக் குறியீடாகவும் விளங்குவது முகா எனும் பட்டு ரகம்தான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் திருமணம், அதுவும் காஸ்ட்லி திருமணம் என்றால் யாரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை  விட்டுக்கொடுப்பதில்லை. அதுபோலத்தான் அஸ்ஸாம் முகா பட்டும். சர்வதேச சந்தையில் அஸ்சாமின் முகா பட்டுக்கு ஏக டிமாண்ட் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் முகா பட்டுக்கான அடையாளம். முகா என்றால் மஞ்சள் நிறம் என்று பொருள். இந்தப் பட்டுப் புடவை முற்றிலும் தங்க நிறத்தில் ஜிகுஜிகுவென்று ஜொலிப்பதால்தான் இந்தப் பட்டுக்கு முகா என்று பெயர் வந்ததாம். நம்ம ஊர் பெண்கள் பட்டுப்புடவைகளை துவைப்பது என்பதே அரிது. ஏனென்றால், துவைத்தால் சாயம் போய்விடும். ஜரிகை புடவையில் இருந்து  வந்துவிடும். துவைக்க துவைக்க பழைய பட்டுப்புடவை போன்று தோற்றமளிக்கும் என்று பயந்தே பல பெண்கள் பட்டுப் புடவைகளை துவைக்காமலும், அணிந்துகொள்ளாமலும் வாங்கிய பட்டுப் புடவைகளை அப்படியே பத்திரப்படுத்தியே அழகு பார்ப்பார்கள். ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் முகா. இந்தப் பட்டுப்புடவையை துவைக்க துவைக்க இதன் அழகு கூடும். அதேபோல எத்தனை முறை துவைத்து துவைத்து அணிகிறோமோ, அதற்குத் தகுந்தார்போல் புதுப் புடவை போன்று காட்சியளிக்குமாம். பட்டு நூல்களுக்கெல்லாம் ராணி என்று புகழப்படும் முகா பட்டு, இந்தியாவின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில்தான் முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் இந்த முகா பட்டு அஸ்ஸாமின் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாங்கத்தக்க இந்த பட்டு ரகம், 85 சதவீத புறஊதாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாம். கோடைக்காலத்திற்கு மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால், சுகமாக இருக்கும் என்கிறார்கள் அஸ்ஸாம் வாசிகள்.
முகா பட்டுப்புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப் புடவைக்கு சர்வதேச பட்டு சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.
முகா பட்டு நூல் அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வகையான புழு அஸ்ஸாமில் மட்டும்தான் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் புழுவின் முட்டைப் பருவத்திற்கு அடுத்தப் பருவத்தில் மட்டும் இரண்டு மி.மீ. அளவுக்கு பட்டு நூல் எடுக்க முடியுமாம். ஆனால், இதை சரியாக வளர்க்கும்பட்சத்தில் ஒரு பட்டுப் புழுவிடம் இருந்து மட்டும் 30 மி.மீ. நீளம் வரை பட்டு நூல் எடுக்கமுடியும். இந்த அத்தனை சமாசாரங்களும் நடப்பது வெறும் எட்டு நாட்கள்களில் என்றால் வியப்பாக இருக்கிறதுதானே.
அதுமட்டுமல்லாமல் 1000 பட்டுப் புழுவிலிருந்து 125 கிராம் பட்டு நூலை எடுக்க முடியுமாம். இதை வைத்துக்கொண்டு 750 கிராம் முதல் 1 கிலோ வரையிலான பட்டுப் புடவை தயாரிக்க முடியும் என்கிறார்கள், முகா பட்டு நெசவாளர்கள். அதுமட்டுமல்லாமல் இந்தப் பட்டு நூலும் ஜூலை - ஆகஸ்ட், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் நவம்பர் - டிசம்பர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் புழு உற்பத்தி செய்யும். இதில் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும் பட்டு நூல்தான் தரத்திலும் நிறத்திலும், உயர்ந்ததாக இருக்கும். இந்த நூலுக்குத்தான் உலக பட்டுச் சந்தையில் அதிக விலை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முகா பட்டுப் புடவைக்கு எப்போதும் தனி மவுசுதான். ஜப்பான் நாட்டில் இப்போது வரை முகா பட்டு நூலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நெசவாளர்கள்.
உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்தகொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் மேனன்.
சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத்தானே ஆகவேண்டும்!



நாய்க்கு சிலை எழுப்பிய வீர சிவாஜி!






இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்வார்கள். ஆனால் கடந்த காலங்களில் நம் தேசத்தில் ஆண்ட மன்னர்கள் ஆட்சி நடத்திய பகுதி, அவர்கள் வணங்கிய கோயில், அவர்கள் வசித்த கோட்டை.. இப்படி அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அடையாளங்கள் இன்னும் நம்மிடைய இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவர்கள் விட்டுச்சென்ற வரலாற்று அடையாளங்கள் இன்று கூட நமக்கு பிரமிப்பின் உச்சக்கட்டம்தான். இவ்வளவு பெரிய மாளிகையை எப்படி கட்டியிருப்பார்கள். இவ்வளவு பெரிய மாளிகையிலா குடியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கற்களை எல்லாம் எப்படி தூக்கியிருப்பார்கள்  என்று பார்க்கும் ஒவ்வொரு அடையாளங்களும் நமக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு வரலாற்று அடையாளங்களும், இன்று நமக்கு  வாழ்க்கையின் பல்வேறு சூட்சுமங்களை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதை புத்தகத்தில் வரும் புகைப்படங்களையோ தொலைக்காட்சியில் வரும் காட்சித் தொகுப்புகளை  வைத்தோ புரிந்துகொள்ள முடியாது. அத்தகைய வரலாற்று அடையாளங்களை நேரில் போய் பார்க்க வேண்டும். நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் குறித்த கூடுதல் தகவல்களையும்தான் இந்தத் தொடரில் வரும் இதழ்களில் பார்க்கவிருக்கிறோம். எல்லாருக்கும் பரிட்சயமான, கேள்விப்பட்ட இடங்களைத்தான் நாங்கள் இந்தப் பகுதியில் சொல்லவிருக்கிறோம். ஆனால், இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள், நீங்கள் கேள்விப்படாத புது தகவல்களை நாங்கள் இங்கு தொகுத்திருக்கிறோம். வாருங்கள்.. வரலாறை ருசிப்போம்.
மராட்டிய மாநிலம் என்று சொன்னவுடனேயே மகாவீரர் சத்ரபதி சிவாஜியும். அவர் சிறுவயதாக இருக்கும்போது, அவருக்கு வீரக்கதைகளை சொல்லி வளர்த்த அவர் தாய் புத்திலிபாய் பெயரும்தான் நமக்கு ஞாபகம் வரும். அப்படிப்பட்ட வீரரின் வாழ்க்கையை பறைசாற்றும் வகையில் இன்றுவரை கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறது சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த ராய்கட் மலைக்கோட்டை. கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த மலைக்கோட்டை, சீனப் பெருஞ்சுவரின் மினியேச்சர் என்று கூட சொல்லலாம்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி.மீ., தொலைவில், சஹாயத்ரி மலைப் பகுதியில், ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்கட் கோட்டை. ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதியை கி.பி.1656ஆம் ஆண்டு கைப்பற்றிய சிவாஜி ராய்கட் என்று புதுப்பெயர் சூட்டினார். நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும், எதிரிகள் நுழைய முடியாதபடியும், கோட்டையை அமைக்க வேண்டும் என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜிசோன்தேவும் ஹிரோஜி இந்துல்கரும், ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி.1674ல் இங்குதான் நடந்தது. இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார். சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர். பின்னர், 1818ஆம் ஆண்டில் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
கோட்டைப் பகுதியில் பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியணை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசவைப் பெண்கள் வருவதற்காகவும், அரசக் குடும்பத்து பெண்கள் வருவதற்காகவும் இந்தக் கோட்டையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருக்கிறது, மீனா தர்வாஜா என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நுழைவாயிலை ஒட்டி 6 முக்கிய அறைகள் இருக்கின்றன.ஒன்று சிவாஜியின் தாயான புத்தலி பாயுக்கும் மற்றும் உள்ள ஐந்து அறைகள் அரசக் குடும்பத்து மகளிர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ராணி தர்வாஜாவின் முன் பகுதியின் பால்கி தர்வாஜா அமைந்திருக்கிறது. இது மகாராஜா சிவாஜி வந்து செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. அந்த நுழைவாயிலை ஒட்டி 8 அறைகள் இருக்கின்றன. இந்த எட்டு அறைகளும் அரண்மனையின் தானியக் கிடங்குகளாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். தானியக் கிடங்குகளுக்கு வலது புரத்தில்தான் சிவாஜி மகாராஜாவின் கோட்டை ஆரம்பிக்கிறது. ராஜ் பவன் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிதான்  அன்றைய சிவாஜி மகாராஜாவின் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்விகள், சட்டம் இயற்றும் இடமாக இருந்திருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இன்னும் மிச்ச சொச்சத்தை நேரில் சென்றால் காணலாம்.
ராஜ்பவன் கோட்டையின் உட்புறத்தில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி குளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த தொட்டிகளின்  அருகே அன்றைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக  நவீன கழிவறைகளும் இருக்கின்றன. ராஜ் பவனின் கிழக்குப் பகுதியில் பாதாள அறைகள் இருக்கின்றன. இதில்தான் சிவாஜி தன் போர்த் திட்டங்களை முக்கிய தளபதிகளுடன் விவாதித்ததாகவும், தன்  இஷ்ட மாதாவான பவானி தெய்வத்தை அங்குதான்  வழிபட்டதாகவும், சூரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இங்குதான் சிவாஜி மறைத்து வைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மலைக்கோட்டையின்  சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜா கிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம். சிவாஜி வாக்யா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார். இந்த நாய் என்றால் சிவாஜிக்கு கொள்ளைப் பிரியமாம். திடீரென்று இந்த நாய் இறந்துவிட ரொம்பவே சோர்ந்துவிட்டாராம். நாயின்  பிரிவை தாங்க முடியாதவர், தான்  தினமும் விழித்தவுடன் தன் செல்லப்பிரானியான வாக்யாவின் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் ஞாபகர்த்தமாகவும் வாக்யாவின் தத்ரூப சிலையை அரண்மனை சிற்பியின் மூலம் செய்தார். வாக்யாவின் சிலையும் இந்த மலைக்கோட்டையில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.