Friday, October 21, 2011

நகரத்தின் வயது 5 கோடி!
ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் எப்படி எல்லைகளை தீர்மானிக்க முடியாதோ, அதேபோல் தேடல்களுக்கும் எல்லைகள் கிடையாது. ஏதாவது ஒரு எல்லையை தொட்டுவிட மாட்டோமா.. என்ற தேடல்கள் ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதனை பிழைக்க வைக்க ஆயிரம் ஆயிரம் மருந்தை தேடிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களின் அடுத்த இலக்கு மனிதனுக்கு சாவு என்பதே ஒன்று இருக்கச் செய்யும் சாகா வரத்தை நோக்கித்தான். அது முடியுமா..? ஏன் முடியாது.. முனிவர்களும் சித்தர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக புராணம் சொல்லியிருக்கிறதே.. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை இறப்பை தொடாமல் இருக்க அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அவர்கள் இப்போதுள்ள ஆராய்ச்சியாளர்களைவிட வல்லமையும், அறிவியலும் தெரிந்தவர்களா? என்ற தேடலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மனிதனின் சக்தி எப்படிப்பட்டது.. விண்கற்களில் இருந்து விழுந்த பூமிப்பந்தில் மனிதன் எப்போது உருவானான் என்ற தேடலின் ஒரு பகுதிதான் இது..
ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் விரிந்த பரப்பு அது. மிகப்பெரிய ஆராய்ச்சிக் கப்பல். கப்பலின் மேற்பரப்பில் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட் தனது சகாக்களுடன் நின்றுகொண்டிருந்தார். இந்த குழுவின் முக்கிய நோக்கம், கடலின் ஆழ்பரப்பில் உள்ள எண்ணெய் வளங்கள், பூமி அடுக்கில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வதுதான். இதற்காக கப்பலின் தனி அறையில் ஆழ்கடலின் தன்மைகளை மீ ஒலி மற்றும் அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகளின் உதவிகளோடு ஆய்வு நடத்தி, அட்லாண்டிக் கடல் அடிப்பரப்பின் தன்மைகளை அறிக்கையாக அளிப்பதே இக்குழுவின் பணி.
அன்றும் அப்படித்தான் அவர்களின் பணி இருந்தது. பரந்து விரிந்த அட்லாண்டிக் கடல் பரப்பு இவர்கள் பயணிக்கும் கப்பலின் சத்தமும், தண்ணீர் கிழித்துச் செல்லும் சத்தத்தைத் தவிர எதுவும் இல்லை. ரம்மியமான மாலை மயங்கும் நேரம். ஆராய்ச்சிக் குழுவினர், அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகள் மூலம் அட்லாண்டிக் கடல் பரப்பின் ஆழத்தின் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் ஆழத்தில் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பாறைகளின் தன்மைகள், மணல் படிமங்களின் தன்மைகள் பொறுத்து எக்கோ ஒலிக் கருவிகளின் வழக்கமாக கேட்கும் ஒலியின் தன்மைகள் சற்றே வித்தியாசமாய் இருந்தது அன்று. ஒலியின் வித்தியாசம் கருவியின் கோளாறாய் இருக்கும் என்று சந்தேகித்துக்கொண்டிருக்க, கடலடியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் எக்கோ கருவியுடன் பொருத்தியிருந்த காமிரா, கப்பல் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில் படங்களை அனுப்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஆராய்ச்சிக் குழுவினருக்கு, தங்கள் கண்களால் பார்ப்பது கனவா அல்லது நனவா என்றே நம்ப முடியவில்லை. ஏனெனில் அவர்கள் கடல் அடியில் கண்டது மிகப்பெரிய மாநகரத்திற்கான தடயங்கள்.. கொஞ்சம் கூட தாமதிக்காமல், சில ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தார்கள்.
கடலுக்குள் குதிக்கும்வரை, ஏதோ எரிமலை வெடித்து அது பாறையாக பல மீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கலாம் என்பதுதான் அவர்களின் கணிப்பு. ஆனால், அத்தனையும் தகர்த்தது, அவர்கள் அப்போது கண்ட காட்சி. இதுகுறித்து, நிக்கி வைட் கூறும்போது அவரின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
எங்கள் குழு கொஞ்சம் கூட நம்பவில்லை அந்த காட்சியை. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுர கி.மீட்டர் தூரம் வரை நீண்டு கிடந்தது நாங்கள் கண்ட அந்த நிலப்பரப்பு. கண்டிப்பாக அது எரிமலையின் சாம்பல் படிவம் இல்லை. அது மிகப்பெரிய நகரம்தான். அதனுடைய சில பாகங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பினோம். நாங்கள் கணித்தது சரிதான். கார்பன் வயது கணிப்புப் பஐ, கிட்டத்தட்ட 5 கோடியே 60 லட்சம் ஆண்டுக்கு முந்தைய நகரமாக அது இருக்கும் என்று ஆராய்ச்சியில் கணித்திருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பு, மேற்கு ஆர்க்னே நகரத்தில் இருந்து ஷெட்லேண்ட் தீவு வரை விரிந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இதனுடைய பெரும்பகுதி ஸ்காட்லாந்தின் ஒரு பகுதியில் ஆரம்பித்து நார்வே வரையிலும் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் திட்டமிட்டு மிக நாகரிகமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த நகரம், ஒரு வரைபடம் போலவே காட்சியளிக்கிறது. அந்த நிலப்பரப்பு படிமத்தில் கிட்டத்தட்ட 8 நதிகள் ஓடிய தடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். புதைந்து கிடக்கும் நகரத்தின் எஞ்சிய சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, 5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் நகரத்து மக்கள் மிகவும் நாகரிகமாகவும் அதே நேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கக்கூடும் என்று நம்புகிறோம். இப்போது நினைத்தாலும் புல்லரித்துப் போகிறது என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட்.
ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், கண்டுபிடிப்புகள், சில வீர வரலாறுகள் அட்லாண்டிக் கடலில் எப்படி மூழ்கி போயிருக்கும்..? ஒரே சுனாமியில் அழிந்து போயிருக்குமா..? அல்லது புவி வெப்பமயமாதல் போன்ற ஏதேனும் ஒரு பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து போயிருக்குமா..? ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தேட ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசைகள், கனவுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த நகரம்.. 2 கி.மீ. கடல் அடிப்பரப்பில் புதைந்துபோய் இருக்கிறது என்றால், இன்னும் 5 கோடி ஆண்டுகள் கழித்து பூமிப்பந்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிக்கும் பல்வேறு நகரங்களும் இதேபோல்தான் காணாமல் போகுமா..? இன்று புவிவெப்பமயதாலால் சர்வதேச நாடுகளே அச்சம் கொண்டு தங்களை பாதுகாக்க பல்வேறு காரணிகளைத் தேடிக்கொண்டிருப்பது பனிப்பாறைகள் உருகி.. கடல் மட்டம் உயர்ந்து மிகப்பெரிய அழிவை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகத்தானா..? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒருவேளை மனித நாகரிகமும், மனிதனின் பிறப்பு ரகசியமும் அட்லாண்டிக் கடலடி பரப்பில்தான் ஒழிந்து கிடக்குமா.. என்ற கேள்விக்கான பதிலையும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். விடை கிடைக்குமா...?