Friday, July 8, 2011
கிசா பிரமிடு - மறைந்து கிடக்கும் வரலாறு!
புராதனச் சின்னங்களும், அதில் மறைந்து கிடக்கும் வரலாறும் எப்போதும் திகைப்போடு கலந்த ஓர் அமானுஷ்யம்தான். அப்படி ஓர் அமானுஷ்ய வரலாறு புதைந்துகிடக்கும் இடம்தான் எகிப்து.
எகிப்து... இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே குழந்தைகள் வரை உதட்டில் முனுமுனுக்கும் வார்த்தை மம்மிக்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித உடல் இன்று வரைக்கும் அழுகாமல் அப்படியே இருப்பதன் தொழில்நுட்பம் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர்தான். இந்தப் புரியாதப் புதிர் சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. மம்மி, அதைத் தொடர்ந்து மம்மி ரிட்டர்ன்ஸ் பார்ட் ஒன், டூ என்று பாகம் வாரியாக வசூலில் உலகம் முழுவதும் சாதனைப் படைக்க வைத்த இந்த பிரமிடுகளின் வரலாறு இன்றுவரை புதைப் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்காத சிம்ம சொப்பணம்தான் என்று சொன்னால் மிகையாகாது.
எகிப்து நகரத்தின் மேற்கு நைல் நதிக் கரையோரம் அமைந்திருக்கும் மயான அமைதியுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தொலைத்த வரலாற்றுச் சுவட்டை தன் மடியில் பிரமிடு வடிவில் தாங்கி நிற்கும் அந்த நகரம்தான் கிசா. இங்குதான் ஏழு உலக அதிசயங்களின் ஒன்றாகக் கருதப்படும் பிரமிடுக்கள் சிறிதாகவும் பெரிதாகவும், மனித உருவிலும் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.
எகிப்தை ஆண்ட அரச குடும்பத்தினர் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறான். அவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு தேவையான பொருட்களுடன் இந்தப் பிரமிட்டில் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று எகிப்து பிரமிடு குறித்த கதைகளின் பட்டியல் நீள்கிறது. இந்தக் கதைகளில் பல விஷயங்கள் உண்மைதானா? என்று கேட்கும் அதே நேரத்தில் பிரமிட்டை உடைத்துப் பார்த்தால், நாட்டுக்கு நல்லதல்ல என்ற மூட நம்பிக்கை கதைகளும் உலவத்தான் செய்கிறது. கட்டுக்கதைகள், கற்பனைகள் இவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கி.மு. 2566ஆம் ஆண்டில் எகிப்திய வம்சத்தின் நான்காவது அரசரான பாரோ குஃபூ, ஜிசாவில் அமைத்த மிகப்பிரம்மாண்டமான பிரமீட்டில்தான் 4500 ஆண்டுகள் கழித்து, பிரமிட்டின் மறைந்துகிடக்கும் ரகசியத்தை முழுமையாக அறிவதற்காக லண்டன் ஆராய்ச்சியாளர் வடிவமைத்த மைக்ரோ ஸ்நேக் என்ற அதிநுட்ப காமிராவுடன் மிகச்சிறிய ரோபோட் ஒன்று பிரமிட்டில் ஒரு சிறுதுளையிட்டு உள்ளே விடப்பட்டிருக்கிறது.
ரோபோவை அனுப்பி பிரமீட்டை ஆய்வு செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் ஆய்வு செய்தது 1993ஆம் ஆண்டு. அப்போது உள்ளே சென்ற ரோபோ பிரமிட்டில் ஒரு கதவு இருப்பதை கண்டுபிடித்தது. அந்தக் கதவு உலோகங்களான ஒரு ஊக்கு மூலம் மாட்டப்பட்டதை கண்டுபிடித்தது. அந்த உலோகம் கதவை திறப்பதற்கு அல்லது மூடுவதற்கு சாவியாக இருக்கலாம் என்பதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இதன்மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மக்கள் உலோகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
அதற்குப் பிறகு 2002ஆம் ஆண்டு, மற்றுமொரு ரோபோட் பிரமிட்டை படம் எடுத்து அனுப்பியது. அந்தப் படத்தில் பிரமிட்டின் உள்ளே ஒரு அறை இருப்பது போலவும், அந்த அறை ஒரு கல்லினால் அடைத்திருப்பதை உறுதி செய்தது. ஆனால், இந்த இரண்டு ரோபோக்களாலும், உறுதியாக உள்ளே இருப்பன பற்றி தெளிவாக படம் பிடிக்க முடியவில்லை.
ஆனால், கடந்த மாதம் பிரமிட்டின் உள்ளே அனுப்பப்பட்ட இந்த மைக்ரோ ரோபோ முதலில் அளித்த புகைப்படம் தொல்பொருள் ஆய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவப்பு நிறத்தில் எகிப்திய எழுத்துக்கள் பிரமிட்டின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் மூலம் பிரமிட்டில் மறைந்துகிடக்கும் ரகசிய முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கொண்டிருக்க, மிகச் சிறிய அளவில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கள் மட்டும் புரிந்திருந்தால், பிரமிட்டின் முழு ரகசியமும் உலககுக்கு தெரிந்திருக்கும் என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள். எப்படியிருந்தபோதிலும் அந்த மைக்ரோ ரோபோ அனுப்பிய புகைப்படங்களால், பிரமிட்டின் வடிவத்தை ஓரளவிற்கு கணிக்க முடிந்திருக்கிறது.
பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப்படுகிறது இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிட்டின் வெளி வரை நீட்டிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்த பிரமிட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு, அதை இரண்டு கல் கதவுகளால் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆய்வு சரியான கோணத்திலும், ரோபோ பழுதாகாத பட்சத்தில் கண்டிப்பாக பிரமிடு எந்த ஆண்டு கட்டப்பட்டது, கற்களின் தன்மை, எவ்வளவு நாட்களில் இந்த பிரமிடு கட்டப்பட்டிருக்கலாம் போன்ற உறுதியான தகவல்கள் கிடைக்கும். தற்போது, பிரமிட்டின் அமைப்பு ஓரளவிற்கு ரோபோவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல புதிர்கள் நிறைந்திருக்கும் இந்த பிரமிட்டின் வரலாற்றுக் கதவை திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
எகிப்தின் பண்டைய பொருட்கள் விவகாரத் துறை அமைச்சர் சாகி ஹவாஸ் புகைப்படங்களை பார்த்தபோது, ராணியின் அறைக்குச் செல்லும் சுரங்கங்களின் அமைப்பை பார்க்கும்போது, இந்தச் சுரங்கம் வேறொரு வெளி உலகிற்குத் தெரியாத, மற்றுமொரு பிரமீட்டிற்கு இட்டுச் செல்லுமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எகிப்திய ஆராய்ச்சியாளர், கேட் ஸ்பென்ஸ் பிரமிட்டில் உள்ள சுரங்கங்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவை என்றிருக்கிறார்.
பிரமிடு குறித்து ஆராய்ச்சியாளர்களிலிருந்து ஆள்பவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. உண்மையில் பிரமிட்டில் மறைந்து கிடக்கும் உண்மை என்ன?... ஒருவேளை அந்தக் கேள்விக்கான விடை இன்னும் ஒருசில வாரங்களிலோ, அல்லது ஒரு சில மாதங்களிலோ கிடைக்கும்போது, அந்த உண்மை ஆதிமக்களின் கலாசாரத்தை பறைசாற்றுமா? அல்லது ஒரு இனமே கூண்டோடு அழிந்துபோன வரலாற்றை வெளிக்கொணருமா.. அல்லது கோடி கோடிக்கணக்கான தங்கப் புதையலை வெளிக்கொணருமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும், விடை பிரமிட்டின் அந்த மர்மக் கதவுக்குப் பின்னால்தான் மறைந்துகிடக்கிறது. எப்போது திறக்கும் கதவு?
Subscribe to:
Posts (Atom)