Friday, March 12, 2010

சவ் மிட்டாய்!

அப்போ வயசு 13. நான் எட்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். போத்திதான் என்னுடைய நெருங்கிய நண்பன். போத்தியை பொருத்தவரை நான்தான் அவனுக்கு குரு, ஆசான் எல்லாம்.
ஏன்னா, நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவான். சில நேரங்களில் பொய்க்கதைக்கூட சொல்லியிருக்கேன். அதைக்கூட அப்படியே நம்பிடுவான். எங்க ஸ்கூல்ல, வாரத்துல ரெண்டு நாள் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வரலாம். நானும் போத்தியும் எப்போதும் போட்ட டிரஸ்சையேதான் மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு வருவோம். ஆனா, எங்க கிளாஸுல மாரியப்பன்னு ஒரு பையன். ‘செட்டியார் வீட்டு பையன்’னுதான் அவனைச் சொல்வாங்க. அவங்க அப்பா எங்க ஸ்கூல்ல சவ்மிட்டாய் கடை வைத்திருந்தார்.
எனக்கும் சரி; போத்திக்கும் சரி செட்டியார் மீது எப்போதும் ஒரு கண்ணு. அதுக்கும் ஒரு கதை உண்டு. எனக்கும், போத்திக்கும் பாக்கெட் மணியா வீட்ல நாலணாதான் தருவாங்க. ஆனா, இந்த மாரியப்பப் பய எப்போ பார்த்தாலும், டவுசருக்குள்ள கையப் போட்டுக்கிட்டு சில்லரை பைசாக்களை கிலுக்கிக்கிட்டே கிடப்பான்.
சவ் மிட்டாய் வித்தா நாமலும் இப்படி பை நிறைய காசு வச்சிக்கலாம்னு எனக்கும், போத்திக்கும் நினைப்பு. ஒரு கட்டத்துல செட்டியாரை மாதிரி நாமும் ஏன் நிறைய சம்பாதிக்கக்கூடாது என்ற ஆசை. யோசிச்சேன். போத்தியை கூப்பிட்டேன். ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு சிதிலமடைஞ்ச ஒரு ரைஸ்மில் உண்டு. அதுதான் எங்க ரெண்டு பேருக்கும் மீட்டிங் ஹால். அங்க போய் உட்கார்ந்தோம்.
“ஏல... போத்தி, மாரிய பாத்தியால... கை நிறைய பைசா வச்சிருக்கான். இதெல்லாம் எப்படி வந்துச்சு... எல்லாம் சவ் மிட்டாய்ல போத்தி சவ்மிட்டாய்.”
“ஆமால முருகா... கரெக்ட்டா சொன்ன. பொறந்தா, மாரிய மாதிரி பொறந்திருக்கணும். எப்போ பார்த்தாலும் கையில பைசா விளையாடுதுல்லா...”
“நம்ம ரெண்டு பேருகிட்டேயும் மாரி மாதிரி காசு வரணும்னா... அதுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்” என்றதும், “என்னல திட்டம்... சொல்லுடே!” என்று தோளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் போத்தி.
“நாமலும் சவ் மிட்டாய் செஞ்சி வித்தோம்னா... மாரி மாதிரி நம்ம சேப்புலயும் பைசா நிறைய இருக்கும்.”
“அப்படியாடே... உண்மையாவா சொல்லுத...?” என்று வழக்கம்போல வாயைப் பிழந்தான் போத்தி. “ஆனா... சவ் மிட்டாய் செய்றதப் பத்திதான் நமக்கு ஒண்ணும் தெரியாத...” என்று உதட்டைச் சுழித்தான் போத்தி.
“ஏல... அது என்ன பெரிய இதுவா? வீட்ல இருக்கற மண்டவெல்லத்தை தண்ணீரை ஊத்தி காய்ச்சுனா, அது பாகாய்டும். அதுல கொஞ்சம் மாவு போட்டு பிசைஞ்சு காய வச்சுட்டா அதுதான் சவ் மிட்டாய்” என்று நான் சொல்லிய பக்குவத்தை அப்படியே நம்பிட்டான் போத்தி.
“ஏல... ஆமா... நாம பாட்டுக்கு, படிக்காம சவ் மிட்டாய் செய்யுறேன்னு வீட்ல போய் சொன்னோம்னா, எங்க ஐயா என்னை அடிச்சே கொன்னுடுவார்...” என்று அப்பாவியாய் பார்த்தான் போத்தி.
“வீட்ல ஆள் இருக்கற நேரத்துலயா பண்ணப் போறோம். கள்ளிகுளத்துல லட்சுமியக்கா கல்யாணம் அடுத்த வாரம் வருது. அதுக்கு உன் வீட்ல, என் வீட்ல எல்லாரும் போயிடுவாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அன்னிக்கு வச்சுக்குவோம்ல நம்ம கச்சேரியை. ஏல போத்தி... எங்களவிட, நீங்க பணக்காரங்க! அதனால நீ நிறைய சவ் மிட்டாய் செய்யலாம். நான்தான் இருக்கற மண்டவெல்லத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறேன்னே தெரியலை!”
“ஏல... இதுக்குப் போயா கவலைப்படுவாங்க... நான் போடுற சவ் மிட்டாயை விற்று, வரக்கூடிய காசை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டுக்குவோம்!” என்று ஐடியாவைச் சொன்னான் போத்தி. அவன் சொன்ன டீலிங்கிற்கு நானும் ஒத்துக்கிட்டேன்.
லட்சுமியக்கா திருமண நாள் வந்தது.
என்னையும், போத்தியையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, என் வீட்டிலும், போத்தி வீட்டிலும் கல்யாண வீட்டிற்கு போய்விட்டார்கள்.
நாங்கள் ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போவது போல் போய்விட்டு, அந்த மீட்டிங் ஹால்ல கொஞ்ச நேரம் பொழுதை போக்கிவிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.
மனசுக்குள்ள, போத்திக்கு போட்டியா சவ் மிட்டாய் செய்யணும்னு எனக்கு ஆசை வந்துடுச்சு. இதை அவன்ட்ட நான் சொல்லலை.
ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தோம்.
“ஏல... முருகா என் வீட்டுக்கு வா; நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சவ் மிட்டாய் செய்யலாம்”.
“இல்ல போத்தி... நானும் சவ் மிட்டாய் செய்யலாம்னு முடிவு செஞ்சிட்டேன்”னு சொன்னதும் போத்தியின் முகம் மாறிப்போச்சு.
“என்னடே... போட்டிக் கடையா போடப்போற?”ன்னு டக்குன்னு கோவப்பட்டுட்டான்.
“இல்லல... போத்தி! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா... நிறைய சவ் மிட்டாய் கிடைக்கும். நிறைய காசும் கிடைக்கும்...” என்று நான் சொன்னத, ஏதோ வேண்டா வெறுப்பாய் கேட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
நானும் என் வீட்டிற்குள் வந்து, ஒவ்வொரு டப்பாவாய் தேடி மண்டவெல்லத்தை எடுத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு செம்பு தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைத்தேன். மண்டவெல்லம் இளக ஆரம்பித்தது. எனக்கு பயங்கர சந்தோஷம். பாட்டிலில் இருந்த தேங்காய் எண்ணெயை தரையில் ஊற்றி மெழுகினேன். அதில்தான் மண்டவெல்ல பாகையும், மாவையும் கலந்து ஊற்ற ஏற்பாடு.
மனதிற்குள் சந்தோஷம். ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. மண்டவெல்லப்பாகு, கொஞ்ச கொஞ்சமாய் இறுக ஆரம்பித்து, ஒருகட்டத்தில் சட்டியில் பிடித்து பழுப்பு நிறத்தில் புகை எழ ஆரம்பித்தது. எனக்கு நெஞ்செல்லாம் படபடக்க ஆரம்பித்தது.
அதற்குள் கல்யாண வீட்டிற்கு சென்றிருந்த என் அம்மா, வீட்டிற்குள் வந்துவிட்டாள். “ஏல... அடுப்புல என்னல பண்ற? வீடு முழுசும் புகையா கீடக்கு...!” என்று சட்டியைப் பார்த்தவள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.
“ஏல... பள்ளிக்கூடத்துக்கு போன்னு சொன்னா... இங்க உக்காந்துகிட்டு வீட்டையா கொளுத்தப் பாக்கற...”னு சுள்ளி விறகால முட்டுக்குக் கீழ அம்மா அடி உறிச்சுட்டா. அதற்குள்... வெளியே திபுதிபுவென்று ஓடுகிற சத்தம். கதவை உடைக்கிற சத்தமும். அம்மாவும் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓட... நானும் வெளியே எட்டிப் பார்த்தேன். எல்லா கூட்டமும் போத்தி வீட்டு வாசலில் நின்று கொண்டு, கத்திக்கொண்டிருந்தனர். எனக்கும், என்னாச்சு என்று பயம் கலந்த ஆர்வம். கூட்டத்தோடு கூட்டமாய் ஓரமாய் நின்றேன்.
போத்தி வீட்டு ஓட்டுப்பிரை வழியாக பழுப்பு நிறத்தில் புகையாய் வந்துகொண்டிருந்தது. எல்லார் முகத்திலும் ஒரு கலவரம். வீட்டுக் கதவைத் தட்டிப்பார்க்கிறார்கள். தள்ளிப் பார்க்கிறார்கள் கதவு திறந்தபாடில்லை. “ஏல போத்தி... கதவைத் திறல...” என்று அவன் அப்பா கெஞ்சலோடு கத்திப் பார்த்தார். ஆனா, போத்தி கதவைத் திறக்கவேயில்லை.
அவன் அப்பா திடீரென்று என்ன யோசித்தாரோ... வீட்டு கொல்லைப்புறம் பக்கம் ஓடினார். கூட்டமும் அவர் பின்னால் ஓடியது. நானும் கூட்டத்தில் ஐக்கியமாயிருந்தேன்.
நல்ல வேளையாக வீட்டு பின் கதவு திறந்துதான் கிடந்தது. எல்லாரும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீடே புகைமண்டலமாய் இருந்தது. அந்த புகைக்குள் போத்தி கண்ணை கசக்கிக்கொண்டே இன்னும் தீ மூட்டிக்கொண்டிருந்தான். அவன் நிறைய சவ்மிட்டாய் செய்ய பிளான் போட்டிருப்பான் போல. அடுப்புல பெரிய அண்டா இருந்தது. எப்படித்தான் அந்த அண்டாவைத் துõக்கி அடுப்புல வச்சான்னு தெரியல. நான் பிரமிச்சுட்டுப் போயிட்டேன். எல்லாமே சவ் மிட்டாய் தந்த வெறியாத்தான் இருக்கும். நானே கற்பனை செய்துகொண்டேன்.
அவங்க அம்மா... தலையில் அடித்துக்கொண்டு, போத்தியின் அப்பா அடிக்காதவாறு அவனை அணைத்துக்கொண்டாள். “ஏட்டி ஒழுங்கு மரியாதையா அவன வுடு. இல்லாட்டி உன்னையும் கொன்னுபோட்ருவேன்” என்று போத்தி அப்பா விளக்குமாறை துõக்க, பயந்தபடி போத்தியை விட்டு விலகினாள் அவன் அம்மா.
அவ்வளவுதான்... ஒரு அஞ்சு நிமிஷம் மழை பெஞ்சமாதிரி அடி விழுந்தது. போத்தி ‘அய்யோ அப்பா’ என்று கத்தினான். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம்... “ஏ... பிள்ளைய விடு; இப்படிப் போட்டு அடிக்கற... அவன் ஏதோ விளையாட்டுப்போக்கா ஏதோ பண்ணியிருக்கான். அதுக்குப்போட்டு இப்படியா அடிப்பாங்க...” என்று ஊர் சனம் சொல்ல, “எல்லாரும் வாய மூடிக்கிட்டு வெளியப் போங்க...” என்று கத்திக்கொண்டே மறுபடியும் அடிக்க ஆரம்பித்தார். போத்தி அழுது கூப்பாடு போட்டவாறே என்னைப் பார்த்தான். நானும் அவனை சோகமாய் பார்த்தேன். நல்லவேளை சவ்மிட்டாய்க்கு நான்தான் திட்டம் போட்டுக்கொடுத்தேன்னு ஒரு வார்த்தைக் கூட அவன் சொல்லலை.
ஒரு வழியாய் அடித்து முடித்து ஓய்ந்து போனார், போத்தியின் அப்பா.
கருக்கல் நேரம்... நான் வெளியே தனியாய் நின்று பம்பரம் விட்டுக்கொண்டிருந்தேன். “ஏல... முருகா”ன்னு பக்கத்தில் வந்து நின்றான் போத்தி!
அவனைப் பார்க்க பாவமாத்தான் இருந்தது. “முருகா... பாத்தியா... எங்க ஐயா அடிச்ச அடியில முதுகு, கை கால் எல்லாம் வீங்கி போச்சு.” என்று கை, கால் எல்லாம் காட்டினான். உண்மையாகவே வீங்கிப்போய்தான் இருந்தது.
“ஏம்ல... நம்ம செஞ்சது அவ்வளவு தப்பா? சவ் மிட்டாய் செஞ்சி துட்டு சம்பாதிச்சி நாம தனியாவா வக்கப்போறோம். வீட்லதானே கொடுக்கப்போறோம். அது தெரியாம இவங்க ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னே தெரியலை. ஆனா, ஒன்னு முருகா... நாம செஞ்சது எல்லாம் கரெக்ட்தாமுல. ஆனா, என்ன தப்பு செஞ்சோம்னுதான் தெரியல... பாகு சட்டியில புடிக்க ஆரம்பிச்சுடுச்சு; இதை மட்டும் சரிசெஞ்சிட்டோம்னு வையேன். சவ் மிட்டாய் செஞ்சே நாம பணக்காரனா ஆயிடாலாம்ல...” என்று அம்பானி மாதிரி எனக்கு யோசனை சொல்ல ஆரம்பித்தான் போத்தி.

No comments:

Post a Comment