Thursday, March 4, 2010

வேட்டைக்காரன்!

‘ஏ... மாயாண்டி சுடலைய்ய்ய்யாண்டி...’ என்று கணியான் கூத்து காது சவ்வை பிய்க்காத குறையாய் கத்திக்கொண்டிருந்தது.
“மாப்ள... 8 வருஷம் கழிச்சு நம்ம சுடலைக்கு கொடை வச்சிருக்கோம். சும்மா கிளப்பிரணும்டா...”
“யோவ் மச்சான்... இப்படித்தான் அப்பவும் சொன்னோம்... ஆனா, பாத்தில்ல... என்னாச்சுன்னு பிளான் பண்ணி கொடை நடக்காம பண்ணிட்டான் அந்த பாலு மாமா.”
“ஆமா மாப்ள... தண்ணிய போட்டுக்கிட்டு அவன் சாமியாடி, சேர்ந்தமரம் மயினி கைய புடிச்சு இழுக்கலைன்னா இந்த தகராறு வந்திருக்காது. ஆனா, பாவிப்பய... அப்படியே எஸ்ஸாகி ஓடிட்டானடே... பயபுள்ள, இவன் ஓடினது பத்தாதுன்னு கூட்டத்துல நின்னுக்கிட்டு கிடந்த மிச்ச சொச்ச பேரையல்லாம் உசுப்பேத்திவிட்டு, ஊரே சண்டக்காடாயில்ல கிடந்துச்சு. எட்டு வருஷம் கொடை நடக்காம பண்ணிட்டானே” என்று கவலையில் மூஞ்சி தொங்கிப்போனது.
“ஆனா, பாரு மாப்ள... இந்த வருஷமும் அவன் ஏதாவது கொசர் பண்றதுக்காவே திமிறிக்கிட்டு அலைவான். அவன விட்றக்கூடாதுடே... என்று மாணிக்கம் சொல்ல, ஆமா மச்சான்... இந்தத் தடவை அப்படி ஏதும் வராத அளவுக்கு ஒரு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்.”
“என்னடே ஏற்பாடு...”
“நீங்களே பாருங்க மச்சான்... சாமக்கொடை முடியறதுக்கு முன்னாடி அது என்னன்னு நீங்களே தெரிஞ்சுப்பீங்க” என்று பீடிகையோடு வேட்டியை உசத்தி மடிச்சிக்கெட்டிட்டு, “ஏல மகராசன்... சாமக்கொடைக்கு சுடலைக்கு கொடுக்க எத்தனை சேவல்டே வந்திருக்கு...!”
“பத்து வந்திருக்குண்ணே... சேர்மாதேவிலயிருந்து மாமா வந்துட்டாங்கன்னா இன்னும் மூணு நாலு கூடும். ஏய் மகராசா... சேவல் ஏதும் திருட்டுப்போயிராமடே... நல்லா பாத்துக்கோ, பக்கத்துலயே உக்காந்துக்கோடே. நைசா லவட்டிக்கிட்டுப் போயிடுவானுக. ஏய்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். நம்ம பாலு மாமா பொண்டாட்டி மட்டும் இந்தப் பக்கம் வராம பார்த்துக்கோ, நாட்டு சேவல், கோயில் சேவல்னு வித்தியாசம்லாம் பாக்க மாட்டா, திருடிட்டு போய் வித்துருவாடே... ஜாக்கிரதை!”
“ஏண்ண... பாலு மாமாவலதான் எட்டு வருஷத்துக்குப் முன்னாடி பிரச்னை வந்துச்சு. பின்ன எதுக்குண்ண மறுபடியும் அவனை கூப்ட்றீங்க... பேசாம அவன ஒதுக்கி வச்சிறவேண்டியதுதானே...”
“சண்ட போட்டாலும், சொந்தம்லாடே... விட்ற முடியாதுல்லா...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலு மனைவி தங்கம் தலைவிரி கோலமாய் நாக்கைத் துருத்திக்கொண்டு ஓடிவந்தாள்.
அவள் ஓடிவருவதைப் பார்த்ததும், தப்பு அடித்துக்கொண்டிருந்த கணியான் குழுவினர் தாளம் போடுவதை இன்னும் சுதி ஏத்தினர்.
“ம்ம்ம்... எட்டு வருஷம் கொட நடக்காம போச்சே; எனக்கு என்ன குறைன்னு யாராவது கேட்டீங்களா...” என்று நாக்கை துருத்திக்கொண்டு, மொத்த திருநீரையும் முகத்திலும், வாயிலும் போட்டபடி பத்ரகாளியாய் நின்றுகொண்டிருந்தாள் பாலு மனைவி தங்கம்.
“ஏய்... மகராசன் பாத்தில்ல... ஆரம்பிச்சுட்டா... இப்படியே ஆடி ஆடியே கோழி பக்கம் வந்து ஆட்டைய போட்டுருவா, ஜாக்ரதடே... நான் போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வர்றேன்”னு பம்மி பம்மி தங்கத்தை நெருங்கினான் கோபால்.
கோபால் பக்கத்தில் வருவதைப் பார்த்ததும், ஏய்... இவன் குசும்பு புடிச்சவன்லா. ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்பானேன்னு பயந்து வேறு பக்கம் பார்த்து ஆட ஆரம்பித்தாள் தங்கம். கணியான் கூத்து பார்த்துக்கொண்டிருந்த ரெண்டு மூணு பெருசுகளும், இளவட்டங்களும் தங்கம் பக்கத்தில் நின்னு உண்மையிலேயே சாமிதான் வந்திடுச்சோன்னு கண்ணத்தில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்.
“ஏ... அத்த நில்லு... என்ன வேணும் உனக்கு?” என்று தங்கத்தை பிடித்து உலுக்கினான் கோபால்.
“ஏய்... யாரு கையடே பிடிக்க; நான் யாரு தெரியுமா... நான்தான் இசக்கி வந்திருக்கேன்...! நான் ரொம்ப மனக்கவலையா நிக்கேன்... அங்க பாரு நான் அழறது உனக்கு தெரியல?” என்று கேட்டவாறே... நேர் எதிரில் இருந்த சிலையைப் பார்த்து கையை நீட்டினாள் தங்கம்.
“அத்த முதல்ல கண்ண திறந்து பாரு... உனக்கும் உன் புருஷனுக்கும் இது ஒரு பொழப்பாவே போச்சு” என்று தலையில் அடித்துக்கொண்டான் கோபால்.
“என்னடே உளர்ற...” என்று மெதுவாய் கண்ணை திறந்து பார்த்தாள் தங்கம்.
எதிரில் உக்கிரமாய் நாக்கை துரத்துயபடி, அரிவாளும் கையுமாக சுடலை கம்பீர சிலை பயமுறுத்திக்கொண்டிருந்தது. “இது என்ன பூடம் தெரியுதா... சுடலை. அந்தப் பக்கம் இருக்கு பாரு அதுதான் இசக்கி. பூடம் தெரியாம சாமியாடாத... மொதல்ல போயி மாமாவ வரச்சொல்லு”ன்னு சொன்னதும், அவ்வளவு நேரம் பத்ரகாளியாய் ஆடிக்கொண்டிருந்த தங்கம் சட்டென்று கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு, “அய்யா சுடலை... மன்னிச்சுக்கோய்யா... தெரியாம உன் மக தப்பு பண்ணிட்டா” என்று கண்ணத்தில் போட்டுக்கொண்டு, என்று சாஸ்தாங்கமாய் மண்டியிட்டு வணங்கியவள், படையல் போடும் இடம் நோக்கி நடந்தாள்.
“ஏய் பாத்தியாடே மகராசன்... சொன்னம்லா... ஆட்டைய போடறதுக்கு எப்படியல்லாம் நடிக்கா பாத்தியா... சரோஜாதேவியல்லாம் மிஞ்சிருவாடே...” என்று கோபால் நக்கலடித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்து பாலு வந்துகொண்டிருந்தார்.
“ஏய் பொண்டாட்டி போய்ட்டா; புருஷன் வர்றான்.”
“என்னடே கோவால் எப்படியிருக்க...? இந்த வருஷ கொடைய அசத்திபோடணும்டே... சாமத்துல வேட்டைக்கு போணும்லா. அதுக்குத்தான் கொஞ்சம் பூஜையில இருந்தேன். மேளம் யாருடே... நம்ம ராசுக்குட்டி செட்டா...!” என்று கேட்டதும், “ஆமா மாமா... அவங்கதான்” என்று பவ்யமாய் பதில் சொன்னான் கோபால்.
“என்னடே அவங்க எப்ப பார்த்தாலும், குடிச்சுப்போட்டு தகராறுல்லா பண்ணுவாங்க...” என்று பாலு சொல்லவும், “இல்ல மாமா, இந்த தடவை அப்படியெல்லாம் நடக்காது. இந்த வருஷம் பணகுடியில இருந்து கரகம் ஏற்பாடு பண்ணியிருக்கோம்”.
“ஏய்... சொல்லவே இல்ல பாத்தியா...! யாருடே நம்ம பட்டம்மா செட்டாடே...” கண்கள் என்றும் ஆர்வத்தில் விரிந்தன பாலுவுக்கு.
“ஆமா மாமா...!”
“ஏய்... பிராயத்துப் பசங்க நல்லாதாண்டே யோசிச்சு பண்றீங்க.. செய்ங்கடே செய்ங்க” என்று கடவாய் பல்வரை ஈன்னு இளித்தவர், “ஆமா... கரக செட்டு எங்கடே இருக்கு...”
“நம்ம மகாலிங்க சித்தப்பா வீடு சும்மாதானே கிடக்கு. அங்கதான் கூட்டிக்கொண்டு வச்சிருக்கோம்.”
“சரிடே... நீங்க வேலையெல்லாம் பாருங்க... மாமா ஒரு எட்டு பார்த்துட்டு வந்துட்றேன்.”
“என்ன மாமா இப்படி சொல்லீட்டிங்க... வேட்டைக்கு போற நீங்க அங்கல்லாம் போகலாமா...?”
“யேய்... ரெண்டு மூணு நாளா ஒரே காய்ச்சல். தலை வேற லேசா வலிக்கி. இன்னிக்கு சுடலை புண்ணியத்துல ஏதோ நடமாடிட்டு இருக்கேன். பிராயத்துப் பசங்க யாராவது பொருப்ப எடுத்துக்கிட்டு வேட்டைக்குப் போங்கடே... நமக்குத்தான் வயசாயிடுச்சுல்லா... பொறுப்பை யார்ட்டயாவது கொடுக்கணும்லா. சரியா... புரிஞ்சிக்கோங்கடே...” நான் ஒரு எட்டு போயிட்டு வந்துட்றேன்...” என்று இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து மைனர்போல் தோளில் தோங்கப்போட்டுக்கொண்டு, மகாலிங்கம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“மாமாவ எப்படி அனுப்புனேன் பாத்தியாடே மகராசன்.”
“என்னண்ணே ... கரகம் ஏற்பாடு பண்ணியிருக்கீங்களோ... என்ட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா...?”
“இல்லடே தம்பி... எல்லாமே ஒரு டூப்பு. மகாலிங்கம் வீட்டுக்கு பக்கத்துல... நம்ம தென்காசி மாமா பசங்கள நிக்க வச்சிருக்கேன். இவரு வர சேதிய அவங்ககிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன். அவங்க இவரு சாமக்கொடை வரை கோயில் பக்கம் வராத மாதிரி பாத்துக்கிடுவாங்க...” என்று ஏதோ சாதிச்சது போல் சிரித்தான் கோபால்.
பதிலுக்கு சிரித்துக்கொண்டே சேவல் கிடையை பார்த்த மகராசனுக்கு அதிர்ச்சி. மூணு சேவல் மிஸ்சிங். “கோபால்ண்ணே... சேவல் போச்சுன்னே...” என்று கத்தியதும், கோபாலின் கண்கள் கோவில் முழுவதும் தேட ஆரம்பித்தது. பாலு மனைவி தங்கமும் காணாமல் போயிருந்தாள்.

No comments:

Post a Comment