Tuesday, February 14, 2012

திரைப்படத்திற்கு அடையாளம் தந்த வங்காளம்ஒரு நாட்டின் கலாசாரம் அந்நாட்டின் ஒவ்வொரு மாநில தனிப்பட்ட கலாசார மொத்த மதிப்பீட்டின் சராசரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாட்டின் உடை, உணவு, நாகரிகம் மற்றும் கலைகள்தான் ஒரு கலாசாரத்தின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மேற்கு வங்காளத்தின் திரைத் துறை, நம் இந்தியாவின்  கலாசார அடையாளமாக விளங்கிவருகிறது.
இன்று திரைத்துறையில் 2டி, 3டி, கிராபிக்ஸ், மிக்ஸிங் என்று பல்வேறு தொழில்நுட்பங்களை, ஹாலிவுட் பட அளவிற்கு நாமும் முன்னேறிவிட்டாலும், இந்தத் திரைப்படங்களுக்கெல்லாம் அரிச்சுவடி எழுதப்பட்டது மேற்குவங்காளத்தில் கொல்கத்தாவில்தான் (அதாவது அப்போது உள்ள கல்கத்தா).   ஒரு திரைப்படம் என்றால் எப்படி இருக்கவேண்டும்? என்பதும், கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் என்று ஒவ்வொன்றாக இந்திய திரைத்துறைக்கு கற்றுத் தந்தது மேற்கு வங்க சினிமா துறைதான்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கு அது. தெற்கு ஆசியாவில் சினிமா என்றாலே விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும் பெயர்கள், இந்திய சினிமாவை பொறுத்தவரை அது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவையும், வங்கதேச சினிமாவை பொறுத்தவரையில் டாக்காவையும்தான் சொல்வார்கள். ஏனெனில் 1890 ஆம் ஆண்டு பயோஸ்கோப் முறையில், ஒளிக் கலவையை காட்சியாக மக்கள்மத்தியில் இதுதான்  சினிமா என்கு உச்சரிக்க வைத்தது கல்கத்தாவில்தான். ஹிராலால்சென் என்பவர்தான் முதன்முதலில் ராயல் சினிமாஸ்கோப் சினிமா கம்பெனி எனும் நிறுவனத்தை முதன்முதலில் தொடங்கினார்.
 அதுவரை வீட்டில் ரேடியோ பெட்டியை மட்டும் காதில் வைத்துக்கொண்டிருந்த அவ்வூர்வாசிகள் வீதிக்கு வந்து ஒரு பெட்டிக்குள்  ஒளிக்கற்றைக்கு ஊடே படச்சுருள் காட்சிகள் பிம்பங்களாய் வந்துபோவதை ரசிக்க ஆரம்பித்தனர். பயாஸ்கோப் அடைந்த வெற்றித்தான் வங்காள திரைப்பட வளர்ச்சி உலக அளவிற்கு செல்ல அடித்தளமாய் அமைந்தது.
1918 ஆம் ஆண்டு வாக்கில் திரேந்திரநாத் கங்குலி என்பவர் இந்தோ பிரிட்டிஷ் பிலிம் அண்ட் கோ எனும் கம்பெனியை உருவாக்கினார். பெங்காலியில் சொந்தமாக ஒரு படக் கம்பெனி உருவானது அப்போதுதான். இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் பில்லாத் பெராத். இந்த திரைப்படம் இந்த நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு வெளியானது. ஆனால், அதே மாநிலத்தின் மாடன்  தியேட்டர் என்ற நிறுவனம்  1919 ஆம் ஆண்டு பல்வாமங்கள் எனும் திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் முழுநீள திரைப்படம். அதற்குப் பிறகு மாடன் தியேட்டர் நிறுவனம் 1931 ஆம் ஆண்டு அமர் சௌதாரி இயக்கத்தில் ஜமாய் சாஸ்தி எனும் திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் பேசும் திரைப்படம் ஆகும்.
இன்று நம்மவீட்டு குட்டீஸ்கள் சின்னத்திரையில் வரும் விளம்பரப் படங்களை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே.. இந்த விளம்பரப் படத்திற்கு முதல் அடித்தளமிட்டது கல்கத்தாவில்தான். ஹிராலால்சென் என்பவர்தான் முதன்முதலில் விளம்பர திரைப்படத்தை கல்கத்தாவில் அறிமுகப்படுத்தினார். ஹிராலால்சென் வெளியிட்ட அந்த விளம்பரப்படம்தான், இந்தியாவின் முதல் விளம்பரப் படம் என்று இன்றுவரை போற்றப்படுகிறது.  1931 கால கட்டத்தில் வங்கமொழி திரைப்பட துறையில் புகழின் உச்சியில் இருந்தவர்கள், பிரம்மதீஸ் பரூவா மற்றும் தீபகி போஸ் என்பவர்கள்தான். பரூவா நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். இன்று நாம் பார்க்கும் நவீன சினிமாவிற்கு அடையாளம் கொடுத்தவர் பரூவாதான். அதேபோல தீபகி போஸ் 1932 ஆம் ஆண்டு சந்திதாஸ் எனும் திரைப்படத்தை இயக்கினார். படத்தில் வசன இடைவெளியில் உள்ள அமைதியை குறைக்க முதன்முதலில் பின்னணி இசையை இந்திய சினிமாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
அதுபோல இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்த சத்யஜித்ரே என்ற மாபெரும் திரைப்பட இயக்குனரை தந்ததும் மேற்கு வங்க சினிமா துறைதான். 20 ஆம் நூற்றாண்டில் திரைப்படத் துறையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதும் இவர்தான். எழுத்தாளர், புத்தக வெளியீட்டாளர், ஓவியர், கிராபிக் டிசைனர், மற்றும் திரைப்பட இயக்குனர் என்ற பன்முக திறமை கொண்ட ரே இயக்கிய படங்கள் மொத்தம் 37. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி 1955 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மொத்தம் 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனிதநேய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. இவருடைய திரைப்பட வாழ்வில் 32 தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் இவரின் சாதனையைப் பாராட்டி 1992 ஆம் ஆண்டு, இந்திய அரசு சத்யஜித் ரேக்கு பாரதரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
மனிதர்களின் உணர்வுகளையும், இந்திய கலாசாரத்தையும் தன்னுடைய படத்தில் காட்டுவதை எப்போதும் தவறியதில்லை ரே. தாகூர் பற்றிய இவரின் டாக்குமென்ட்ரி திரைப்படம் இன்றுவரை பாராட்டுதலுக்குரியதாக விளங்குகிறது. வாழ்க்கை சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல், வித்தியாசமான திகில் படங்கள், துப்பறியும் படங்களையும் இயக்கி, அதில் வெற்றியும் கண்டார் ரே. இருபத்தி நான்கு மணி நேர ரயில் பயணத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய கதையை முழுவதும் ஒரு ரயில் பெட்டியிலே எடுத்து முடித்த சாருலதா என்ற சத்யஜித்ரேயின் படத்தின் வெற்றியை எந்த சினிமா சம்பந்தப்பட்டவர்களாலும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடித்திருந்த உத்தம் குமார் மற்றும் நாயகி ஷர்மிலா தாகூர் இருவரும் இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.
 வங்காள மொழி திரைப்படத்துறைக்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம் மிருனாள் சென். மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய மிருனாள் சென், திரைப்பட ஸ்டூடியோவில் ஆடியோ டெக்னீஷியனாக பணிக்குச் சேர்ந்தார். பின்னாளில் சினிமா மீதான காதலில் 1953 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தை உருவாக்கினார். முதல் படம் வெறும் படமாக மட்டுமே இருந்ததே தவிர அவருக்கு பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தரவில்லை. ஆனால், அவருடைய இரண்டாவது படமான நீல் அக்ஷார் நீச்சி என்ற படம் மேற்கு வங்களாத்தை மட்டுமல்ல சுற்றியுள்ள மற்ற மாநில ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவருடைய மற்றொரு படமான  பெய்ஸி ஷர்வண் திரைப்படம் சர்வதேச அளவில் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த சினிமா இந்திய சினிமாவில் புதிய பாணியை ஏற்படுத்தியது என்றுகூட சொல்லலாம். இவருடைய ஒவ்வொரு படமும், கதை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் போன்ற ஏதோ ஒரு பிரிவில் ஏதோ ஒரு புதுமையை புகுத்தியிருப்பார். அதுதான் மிருனாள்சென்னின் பாணியாக திரைத்துறையினர் புகழ்பாடுகிறார்கள். இவரது சினிமா கேன்ஸ், வெனிஸ், மாஸ்கோ, கார்லோ வேரி, சிக்காகோ, கெய்ரோ போன்ற நாடுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றுள்ளது. இவரது திரைத்துறைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அவருக்கு, இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் கலாசாரம் வாழ்க்கை முறை, நடை, உடை, உணர்வுகள் இப்படி எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக்கொடுக்காமல் அனைத்தும் திரையில் காட்டி, சர்வதேச அளவில் திரைப்படத்தின் மகிமையை உலகுக்கு உணரச் செய்த மேற்கு வங்காளத்தின் கலாசார அடையாளமாக சினிமாவைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

No comments:

Post a Comment