கட்டும் ஆடைகளும், உண்ணும் உணவும் மட்டும்தான் கலாசாரங்களா.. என்று சொன்னால், நிச்சயம் இல்லை என்ற பதில் மட்டுமே வரும். இசையும் ஒரு நாட்டின் கலாசாரமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாறு.
பாப் ரக இசை, ராக் ரக இசையைக் கேட்டவுடனேயே இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளின் இசை என்று டக்கென்று சொல்லிவிடுவோம். அப்படியானால், இசை ஒரு நாட்டின் கலாசாரம் என்பது சரிதானே. அந்த வகையில் கர்நாடக சங்கீதம் என்பது இந்திய கலாசாரத்தின் அடையாளம். இன்னும் ஆழமாக சொன்னால், கர்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்துத் தந்த தியாகராஜ சுவாமிகள் மறைந்த திருவையாறு ஊர் கூட கலாசார சின்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு கிறிஸ்தவருக்கு ஜெருசலேம் செல்வது எப்படி வாழ்நாள் லட்சியமோ, அதேபோல ஒரு இந்துவுக்கு காசி புனித யாத்திரையும், ஒரு இஸ்லாமியருக்கு மெக்கா புனித பயணம் என்பது ஒரு வாழ்நாள் லட்சியமோ அதேபோல கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும், திருவையாறில் தியாக பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும், அவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தியாகராஜ கீர்த்தனைகள் பாடுவதுதான், கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும்.
கர்நாடக சங்கீதம் இந்து வேதங்களில் இருந்து உருவானது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக சங்கீதம் இந்தியாவில் மக்களிடையே பாடப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது அதற்கான நெறிமுறைகள், வரையறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் இருந்ததாலோ என்னவோ, அந்த சங்கீதத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் புரந்தர்தாசா என்பவர் கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு வரையறையை அமைத்துக்கொடுத்தார். கர்நாடக சங்கீதத்திற்கான அடிப்படைகளை புரந்தர்தாசர் வகுத்தபடியால் இவரை கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவருக்குப் பின்னர் வந்த வெங்கடேஷ்வரா என்பவர்தான் ராகங்களின் அடிப்படைகளை வகுத்துக்கொடுத்தார். புரந்தர் தாசாவின் காலம் 1564 ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு வளர்ச்சியடைந்தகாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீதத்திற்கு தனி இலக்கணம் அமைத்துக் கொடுத்தவர்தான் தியாகராஜ சுவாமிகள்.
18ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு பக்கபலமாய் இருந்ததுகர் மைசூர் சமஸ்தானமும், திருவாங்கூர் சமஸ்தானமும்தான். 18 - 20 ஆம் நூற்றாண்டின் இடைவெளியில்தான் கர்நாடக சங்கீதத்திற்கு வாய்ப்பாட்டு மட்டும் அல்லாமல் பாட்டுடன், இசைக்கும் முக்கியத்துவம் வளர ஆரம்பித்தது. இசைக்கலைஞர்கள் பாட்டோடு வீணை, வயலின் , கடம், புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க ஆரம்பித்தார்கள். ஆகமொத்தத்தில் இன்று நாம் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த பெருமை மைசூர் சமஸ்தானத்திற்கும், திருவாங்கூர் சமஸ்தானத்தையுமே சாரும்.
கர்நாடக சங்கீதம் என்பது கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கும் பாத்தியப்பட்டது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்,கர்நாடக சங்கீதத்தின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் ஒரே பெயர் திருவையாறு மட்டும்தான்.
1759 முதல் 1847ம் ஆண்டு வரை தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தை, “தியாகராஜ சகாப்தம்’ என்றுதான் சொல்வார்கள். திருவாரூரில் வசித்த ராமபிரும்மம் - சாந்தாதேவி தம்பதிக்கு மூன்றாவது தெய்வக் குழந்தையாக அவதரித்தார் தியாகராஜர். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக பிற்காலத்தில் இவரது குடும் பம் திருவையாறுக்கு இடம் பெயர்ந்தது.
தியாகராஜ சுவாமிகளின் தந்தையின் ரத்தத்திலேயே ஊறிப் போன விஷயம் சங்கீதம். எனவே, இவருக்கு இசையுணர்வு இயற்கை சுபாவமாக அமைந்தது. குரல் வளமும் கை கொடுத்தது. தாயாரிடம் ராமதாசர், புரந்தரதாசர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார். திருவையாறிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். மிகுந்த புலமை பெற்றார். தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜியின் அரசவைக் கவிஞர் சொண்டி வெங்கட ரமணய்யா விடம் சங்கீதம் கற்றார் தியாகராஜர். “நமோ நமோ ராகவாய அதிசம்’ என்பது தான் அவரது முதல்பாடல். சங்கீதத்திலுள்ள தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, நாரத மந்திரத்தை உபதேசித்தார். அவர், “ஸ்வராவர்ணம்’ என்ற அரிய நூலைத் தந்து, சங்கீத ஸ்வர ரகசியங்களை அறியச் செய்தார்.
அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அதில், ஒருவர் செய்த தவறுக்காக அவரைக் கோபித்துக் கொண்டார். அப்போது அவரது மனைவி, கோபப்படுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார். அதை மையமாகக் கொண்டு எழுந்த பாடலே புகழ் பெற்ற, “சாந்தமுலேக சவுக்கியமுலேது’ என்பதாகும். ராமனைப் பற்றி மட்டுமே பாடிய அவர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, “சம்போ மஹாதேவ’ போன்ற பாடலையும் பாடினார்.
அவரது புகழ் பரவியதைப் பொறுக்காத சகோதரர் ஜப்யேசன், அவரது பாடல் தொகுப்புக்கு தீ வைத்து விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அழிந்து விட்டன. ராம விக்ரகத்தையும் திருடிச் சென்று காவிரியில் போட்டார். தியாகராஜர் துடித்தார். “அநியாய முஸேயகுரா ரானிது ராது’ என்ற பாடலை உருக்கமாகப் பாடினார். ராமன் கனவில் தோன்றி, தான் ஆற்றுமணலில் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லவே, அதை எடுத்து வந்தார். உடனே, “தொரிகிதிவோ’ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) என்ற பாடலைப் பாடினார். ராமனே கதியாக வாழ்ந்த அவர், பகுளபஞ்சமியன்று காலமானார். தியாகராஜருக்கு குரு மரியாதை எப்பவுமே உண்டு. தான் வாழும்போது தன் சீடர்களுக்கு அவர் ஒரு கட்டளையிட்டிருந்தார். தன் காலம் முடியும் தருவாயில் தன் சடலத்தை தன் குருவின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். அவர் இட்ட கட்டளையின் பெயரில் அவரின் குருவின் கல்லறைக்குப் பக்கத்திலேயே இவரது சமாதியும் அமைக்கப்பட்டது. பெங்களுரூவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர், 1925ல் தியாகராஜருக்காக கட்டிய சமாதியில்தான், தற்போது தியாகராஜ ஆராதனை விழா நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாளில் இந்த ஆராதனை விழா நடைபெறும். இந்த விழாவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுறுகிப் பாடுவார்கள். கர்நாடக சங்கீதத்தை உயிராக நேசித்து, சங்கீதம் கற்றவர்களுக்கும், கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், இனி கற்கப்போகிறவர்களுக்கும், இந்த ஆராதனைவிழாவில் பாடுவதுதான் வாழ்நாள் லட்சியமாய் இருக்கும். அப்படிப்பட்ட இசை ஆராதனை விழாவைக் காண வெளிநாட்டுப் பயணிகள் கூட சமீப காலங்களில் வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாற்றை இந்திய அடையாளங்களில் ஒன்று சொல்வது மிகையாகாததுதானே!
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteSelf Study English Materials | Self Learning Spoken English | Home Study English Speaking