Thursday, February 25, 2010

விண்ணை முட்டும் விலைவாசி!





இந்த ஊக பேர வணிகத்திற்கு இன்னும் கொஞ்சம் எளிமையான விளக்கம் தரலாம் என்று நினைக்கிறேன். அதாவது மொத்த பருப்பு வியாபாரி ஒருவர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் ஒருவர் ஒரு கிலோ துவரம் பருப்பை இருபது ரூபாய்க்கு வாங்குவதாக முன்பதிவு செய்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு இடைத்தரகர் மொத்த வியாபாரியிடம் தொடர்புகொண்டு, ஒரு கிலோ பருப்பை முப்பது ரூபாய்க்கு தரமுடியுமா என்று கேட்பார். உடனே வியாபாரி ஏற்கனவே முன்பதிவு செய்தவருக்கு 25 ரூபாய் கொடுத்து ஏற்கனவே கொடுத்ததை வாபஸ் வாங்கிக்கொண்டு புதிதாக வந்த நபரிடம் ஐந்து ரூபாய் லாபம் வைத்து முப்பது ரூபாய்க்கு விற்றுவிடுவார்.
இந்த விற்பனையில் மொத்த வியாபாரி, விவசாயிகளிடம் நீங்கள் விளைவிக்கப் போகும் பருப்பை மொத்தமாக நானே கொள்முதல் செய்துகொள்கிறேன். ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் தரப்படும் என்று விளையாத பொருளுக்கு முன்பே அச்சாரமாக விவசாயிகளிடம் சொர்பமாக கொஞ்சம் பணத்தை கொடுத்துவிடுவார். நாம் விளைவிக்காத ஒரு பொருள் விளைச்சல் ஆகும் முன்பே பணம் கிடைக்கிறதே என்று ஆர்வத்தில் விவசாயிகளும் இந்த வியாபாரியிடம் பணத்தை வாங்கிக்கொள்கின்றனர்.
ஆனால், மொத்தத்தில் இந்த மொத்த வியாபாரி, அந்த இடைத்தரகர், இன்னொருவர் இந்த மூவரிடமும் பருப்பு என்ற ஒன்றே கையில் இருக்காது. இது அவ்வளவும் இணையதளத்திலேயே செயற்கையாக கைமாறி கைமாறி நுகர்வோரை வந்தடையும்போது, பருப்பின் விலை ஒரு கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்கும்.
ஆனால், பருப்பின் உண்மையான கொள்முதல் விலை வெறும் பத்து ரூபாய்தான். இதில் வியர்வை சிந்தி உழைத்து சாகுபடி செய்த விவசாயிக்கு கிடைக்கும் பணமோ சொர்பம்தான். ஆனால், இடைத்தரகர்கள் எந்தவித கஷ்டமும் படாமல் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.
தான் விளைவித்த விளைபொருட்களுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பு கிடைக்காததும் விளைபொருள்கள் எதிர்பார்த்தது போல விற்பனையாகாததும், பல்வேறு கடன் பிரச்னையால் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு, விதைக்கும்போதே விற்பனைக்கான உத்தரவாதம் கிடைக்கிறது என்ற அடிப்படையில்தான் இந்த ஊக பேர வர்த்தகத்தில் அதாவது பியூச்சர் டிரேடிங்கில் முதலில் ஆர்வம் காட்டத் தொடங்கினர் விவசாயிகள். ஆனால், இடைத்தரகர்களின் ஏகபோக ராஜ்யம்... தாங்கள் விளைபொருட்களை வியாபாரிக்கு விற்ற தொகையும், சந்தையில் தாங்கள் விற்ற விளைபொருட்கள் விஷம் போல் ஏறி நிற்கும் நிலையையும்தான் தற்போது ஊக பேர வணிகத்தைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது விவசாயிகளை. நியாயமாக நடக்கவேண்டிய இந்த ஊகபேர வணிகம் இப்போது சூதாட்டமாக மாறிப்போனதால்தான் இந்த விண்ணை முட்டும் விலைவாசி.
விலைவாசியை குறைக்கவும், இந்த முன்பேர வர்த்தகத்தை தடுக்கவும் அவ்வப்போது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்ந்து வருவதற்கு பதுக்கல் பேர்வழிகள்தான் காரணம். எனவே அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள், அதிக விலைக்கு விற்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
அதுபோல உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களின் முன்பேர வர்த்தகத்தை கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு தடை செய்திருக்கிறது. தேவைப்பட்டால், இந்த தடை மேலும் நீடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருட்டு சிடி என்பது அரசால் தடை செய்யப்பட்டதுதான். அதை தயாரிப்பவர்கள் அவ்வவ்போது காவல்துறையால் கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக திருட்டு சிடி வராமல் போய்விடுகிறதா இல்லை. திருட்டு சிடி தயாரிப்பவர்கள் தங்களது தயாரிப்புகளை நிறுத்தத்தான் செய்கிறார்களா... இல்லையே...! அதிலும் உச்சக்கட்டமாக திரைக்கு வராத திரைப்படத்திற்கே திருட்டு சிடி தயாரிக்கப்பட்டதையும் நாம் நாளேடுகளில் படித்திருப்போம்.
அதேபோலத்தான் இந்த முன்பேர வர்த்தகத் தடையும். அரசு என்னதான் தடை போட்டாலும், முன்பேர வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.
110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. அப்படியானால் இப்போது உயர்ந்திருக்கும் விலைவாசியில் இந்த பெரும்பான்மையான மக்கள் எப்படி உண்டு உயிர்வாழ்வார்கள்? இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நம்நாடும் பட்டினிச் சாவில் சிக்காமல் எப்படிப்போகும் என்பதை முதலில் ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
விலைவாசி உயர்வால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
15 கோடி ஹெக்டேர் நிலம், ஆண்டில் 220 நாள் சூரிய ஒளி, 880 மி.மீ மழை மிகப்பெரிய மனிதவளம். ஆனால், இவ்வளவு இருந்தும் ஒரு வேளை சோற்றுக்காக கையேந்தும் பாமரர்கள்தானே நம் நாட்டின் அடையாளமாக மீதமிருக்கிறார்கள். இவர்களுக்கு உண்மையாகவே ஒருவேளையாவது சோறு கிடைக்க நமது ஆட்சியாளர்கள் முயற்சி செய்கிறார்களா? உயர்ந்து வரும் விலைவாசிக்கு தீர்வே கிடையாதா? என்பதையெல்லாம் அடுத்த வாரம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment